நினைவின் வலைப்பின்னல்கள்-
நீண்ட கூந்தலில் விழுந்த
சிக்கலாய்..
பிரித்தெடுக்க முடியாமல்
பின்னிக் கிடக்கின்றன..
சிக்கலைச் சிக்கலாக்க-
வந்து ஒட்டிக்கொள்ளும்
வாழ்க்கைக் கசப்புத் துகள்கள்..
இவைதான்-
இதயச்சுவரில் படிந்துவிட்ட
உறங்காத உண்மைகள்...!
-செண்பக ஜெகதீசன்...
நீர்சாட்சி நிலம்சாட்சி நீலவிண் முகில்சாட்சி
ஊர்நின்ற மரம்சாட்சி உறங்காத மதிசாட்சி
கார்முகில் மழைசாட்சி கதிரவன் ஒளிசாட்சி
தேர்சுற்றும் தெய்வமதும் தினம்பூக்கும் பூசாட்சிச
நேர்நின்ற கோபுரங்கள் நிமிர்தேவன் ஆலயங்கள்
சேர்ந்தாடும் சிறுகுரங்கு சின்னஅலைக் குளக்கரைகள்
ஏர் உழுத மாடுகளும் எல்லாமே சாட்சி வைத்து
வார் என்று செம்புனலை வழியவிட்ட கோரமதை
சீர் செய்ய வந்தனென்று சொல்லிப் புழுகுமிட்டு
நார் நாராய் கிழித்து வைத்த நாசச் செயல் கொடுமை
யாருறங்கிக் கிடந்திடினும் நீதிதுயில் கொண்டிடினும்
ஓர்நாளில் எழுந்து வரும் உறங்காத உண்மைகளாம்
கிரிகாசன்
பேச நினைத்த
வார்த்தைகளை
பேச முடியாத
அவலம் ,
அடக்குமுறை. .
நிகழ்த்த வேண்டிய
சாதனைகளை
நிகழ்த்த முடியாத
வேதனை,
வெறுப்பு,
இன்றும், என்றும்
மனதில்
உறங்காத உண்மைகள் ......
நிதர்சனன்
யாழ்ப்பாணம், இலங்கை
உள்ளக் கரைதனில் அலைமோதும்
நினைவு அலைகள் - மாற்றுமே
மனதினை ஆர்ப்பரிக்கும்
பொங்கு கடலாய் !!!
அவற்றுள் சில
கொண்டு செல்லுமே உள்ளமதை ஆனந்தத்தின் எல்லைக்கு!!!
சில எண்ணங்கள் நினைவுகள் - நம்மை
விட்டுச் செல்லுமே - இனம் புரியா
துன்பச் சுமைகளோடு !!!
இன்பமும் துன்பமும்
நம்மை வழிநடத்திச் செல்லும்
அனுபவ வழிகாட்டிகளின்
துணைக் கொண்டு !!!
அனுபவங்கள் பசுமையாய்
விரிந்திருக்கும் உள்ளமதில்
என்றென்றும் -
உறங்காத உண்மைகளாய்!!!
பி.தமிழ் முகில்
நேற்று வரை நீ
சொல்பவைகள்
அத்தனையும் உண்மையென
எண்ணியிருந்தேன்
ஆனால் நீ
உறங்கிய பின்னர்தான்
தெரிந்து கொண்டேன்
உண்மையில்லை என்பதை
காரணம்
உறக்கத்தின்போது
உன் உதடுகள்
அடிக்கடி வேறு ஒருவரின்
பெயரை உச்சரித்தது.
சேனையூர் இரா.இரத்தினசிங்கம்
என்னுடைய ராமாயணத்தில்
ப்ரஹலாதன் பிளந்தது
உன்னுடைய வயிற்றைத்தான்
வயிற்றுக்குள் இருந்து வெளியே விழுந்த
என்னைப் பார்த்து அதிர்ந்ததும்
நான் அல்ல நீயே தான்
இல்லாவிட்டால்
மந்திரத்தில் விளைந்த இக்கவிதையை
பிறகெப்படி நான் எழுதிக் கொண்டிருக்கமுடியும்
நந்தாகுமாரன்
நேற்றைய நிகழ்வு
அந்த பொழுதின் புழுதிக்காற்றோடு
போனதாக நினைக்கலாம்...
சாட்சிகளை விலை கொடுத்து வாங்கி
உண்மைகளுக்கு நாவறுது ஊமையாக்கி
ஊர் பேச நாதியின்றி
நாமும் நடைபோடலாம்
சரி.. தவறு..
சத்தியம் உண்மை..
என் நியாயம் என் நீதி என்று
கொள்கை முடிவோடு முடித்து விட்டு..
நானே பெரியவன் என்றே
நாளும் பெருமிதம் பேசலாம்..
என்றாலும் புதை கொண்ட விதை போல
ஒருநாள் துயில் எழும் உறங்காத உண்மைகள்
மெல்ல உனை கொல்லும்..!
-பாரதிமோகன்
என்னின் உச்சம்
மெளனத்தில் அரைபட
நாய்களின் குறைப்பில்
இரத்தம் வடிந்தது.
நாக்கின் உமிழ்நீரில்
நடந்து சிவந்தன பாதங்கள்.
பாதச் சிவப்பில் உப்பிட்டு
முகஞ்சிவந்த மனங்கள்
நன்றியால் தைத்து
வெடிப்புகளில் நீர் வார்த்தன.
நட்பில்
உதிர்ந்த மயிர்கள்
என் ஊர்வலத்திற்குக் கயிறாகிறது.
முனைவர் ப.குணசுந்தரி தர்மலிங்கம்
இந்தியா
----------------------------------
எப்போது
சதா போகும் இடம்பற்றியா பேச்சு
அப்பாவைப் போல் இருக்கக் கூடாதா
முழங்கால்களில் சீழ்வடிகிறது
பாதங்களில் நடக்க ஆசை
சிறுத்துப் போயிருக்கிறது
சில வருடங்கள்தான் ஆகியிருக்கும்
அவள்தான் கட்டிப் போட்டாள்
பெருமையாக இருந்தது எனக்கு
இன்று
புரையோடியவற்றின் வாசம்
அருவருப்பைத் தருகிறது
ஊர்பவர்களுக்கிடையில்
அப்பாவின் கைத்தடி
நல்லதுதான்
நானாக நடப்பது எப்போது
முனைவர் ப. குணசுந்தரி தர்மலிங்கம்
வால்பாறை
என் கனவுகளில் மட்டும் விதிவிலக்காய்
உதடுகள் வரை வந்துவிட்டு உச்சரிக்க ஏனோ தயங்குகின்றன வார்த்தைகள்
வீதிகள் வீடுகள்
அலுவலகங்கள் ஆலயங்கள்
அரசியல் ஊடகம்
ஒவ்வொரு இடங்களிலும் உண்மைகள் உறங்கிக்கொண்டிருக்கின்றன என என்
உள்ளம் உறங்காமல் துடிக்கின்றது ஆனால் எல்லா இடங்களிலும்
உதடுகள் வரை வந்துவிட்டு உச்சரிக்க ஏனோ
தயங்குகின்றன வார்ததைகள்
எல்லா உள்ளங்களிலும் எத்தனையோ உண்மைகள் உறங்காமல்
உதடுகள் வரை வந்துவிட்டு உச்சரிக்க ஏனோ
தயங்குகின்றன வார்ததைகள்
-மூகாம்பி, தமிழ் நாடு