எண்ண வெளியில்
ஏற்றங்காண எத்தனைநாள்
தவங் கிடந்தோம்
அத்தனையும் ஏய்க்க
எண்ணி ஏமாந்த 2012,
வெட்ட வெளி
வாழ்க்கை இத்தனைநாள்
விழித்துக் கொண்டோம்
அத்தனையும் முடிக்க
எண்ணி முடிந்துபோன 2012,
கடும்பாதையிலே பாதம்பரவ
கடந்துவந்தோம் எத்தனைநாள்
அத்தனையும் கானலாக்க
எண்ணி கரைந்து போன 2012,
மானிடமெல்லாம் மடிந்து
மறைந்துபோக எண்ணி
காலச்சக்கர இடையில்
மாட்டி மாயமான 2012.
சக்தி
காலதேவனின் காலடியில் சிக்கிக்
கண்காணாமல் போனது 2012..
புண்ணாகிப்போன இதயங்களுடன்
புவன மாந்தர்..
கண்ணீர் அணைகளை உடையவைக்கும்
தண்ணீர்ப் பிரச்சனைகள்..
இரத்தமழைக்கு ஏதுவாக
எல்லைக்கோடுகளில் மோதல் மேகங்கள்..
எல்லையில்லா வகையில்
எல்லா இடமும்
இன வன்முறைகள், பாலியல் கொடுமைகள்..
இலவசமாய், இனிய பேச்சாய்
ஏமாற்று அரசியல்..
இவற்றுடனும் போகட்டும்
மாயமான 2012,
இவையெல்லாம் வேண்டாம் இனி 2013ல்...!
-செண்பக ஜெகதீசன்...
ஆம் ! - காலத்தின் ஓட்டத்தில்
மாயமாகித் தான் போனது !!!
மாயமாக்கித் தான் போனது -
ஓர் யுவதியின் வாழ்வு தனையும் !!!
மருத்துவம் பயின்று வந்த மலர்
மரித்துத் தான் போயிற்று -
மனதினில் ஈவிரக்கமில்லா
சில ஓநாய்களின்
கொடூர வெறித் தாக்குதலால் !!!
எத்தனை இலட்சியக் கனவுகள்
அன்று மரித்துப் போயினவோ ?
மனித உருவில் உலவும்
சில மாக்களால் - அந்த வனிதையின்
பெற்றோரின் எத்தனை எத்தனை
ஆசைக்கனவுகள் சுக்கல் சுக்கலாகிப்
போயினவோ ?? - காலத்தின்
ஓட்டம் தனில் தேசத்தையும்
மனித இதயங்களையும்
கொந்தளிக்கச் செய்த சம்பவமும்
மாயமாகித் தான் போனது !!!
இந்நிலையில் 2012
மாயமாகிப் போனதில்
என்ன ஆச்சரியம் ???
- பி.தமிழ் முகில்
நாட்காட்டியை நியாயம் காட்டி
அழிவின் கதையை அழகாய் பூட்டி
மாய மாயன்கள்
அதிசய அறிஞர்கள்
மாய வரலாறு
உலகம் அழியும்
இன்னும்
என்னென்னமோ மாயங்கள்...
சிரிப்புத்தான் வருகிறது.
உனக்கும் எனக்கும் தெரியாமல்
உலக அழிவா?
எதையெதை விற்பதென்ற நீதியில்லாமல்
அனைத்திற்கும்..
இறுதியில்
அன்பிற்கும் விலை.
பணம் சேர்ப்பதே வாழ்க்கை
சிக்கனமாய் சுயநல செலவு
தாராளமென்றால்
குறைந்த நிறைவுக்கும் கூடுதல் விலை,
வேறுவழி உயிர் வேண்டுமே!
உண்மையை உண்மையாய்
உண்ணாமல்
பொய்யை பொய்யாய்
புசித்தபடி
சேர்த்து குவிக்கும் ஊதாரியாகவே
சாக.
பணம் அதைதரும் அமைப்பு
அதை காப்பதே இலட்சியம்
அனிச்சையாய்.
முக்கிய முக்கியமென நாம் சுற்றியதில்
மனம்திறந்த பேச்சுக்கள்
திறமையான திட்டங்கள்
முக்கியமான முடிவுகள்,
வாழ்வுக்கான அனைத்தும்
அதற்குள்ளே அடங்கிவிட
ஓய்வுக்காக வீடு
ஒரு
தற்காப்புக்கு துணை
என
பணத்திற்கே அனைத்தும்
பாதுகாக்கவே பிள்ளைகள்.
பசுமைகளனைத்தையும்
பச்சை காகிதங்களாக்க,
அலைச்சலே அமைதி
அறியாமையே அறிவு
பொய்யே உண்மை
துன்பமே இன்பம்
இப்படி
இயற்கையின்
கோடிகோடியாண்டு வரலாறுகளை
அதற்கெதிரான
குப்பைகளாக உருமாற்றிக் கொண்டு,
உண்ண
உடுக்க
உறங்க
முடிவில் மூச்சுவிட..
மூச்சுவிடவும்
தீமையின் வேறிலுள்ள
ஆசையின் பணம்,
எனும்
உன்னத நிலையை
உருவாக்கிக் கொண்டு,
போதுமானவற்றோடு - எளிமையோடதை
பொதுப்படுத்தி வாழாது,
அவசியங்களையும்
அவசியமாக்கிக் கொண்ட
அவசியமற்றவற்றைவைகளையும்
அளவின்றி சேர்த்துக்கொண்டு
பிறர்க்கும் பயிற்றுவித்கபடி
மனமற்ற மனிதமற்ற நிலையை உருவாக்க
பசிக்குறியவைகளை தூரத்திலும்
பகட்டுக்குறியவைகளை பக்கத்திலும்,
மன மகிழ்ச்சிக்கு இதய அமைதிக்கு
என்னென்னவோ
புதுப்புது கண்டுபிடிப்புகள்
இறக்குமதிகள்.
இப்பேர்பட்ட
பேரறிவோடு
பெருந்திறனோடு
துல்லிய தெளிவோடு -
தலைநிமிர்ந்து வாழும்,
நம்மையும் தாண்டி
நமக்கு தெரியாமல்
நம்மை வென்று
எங்கிருந்தோ மாயமாய் வருமாமே
உலக அழிவு.
ஏதோ தன் பங்கிற்கு
மாயன்களை ஞாபகப்படுத்திவிட்டு
கடந்த வருடம்,
ஆயுளா? தண்டனையா?
என்ன மாயமோ!
தெளிவதற்குள் மாயமாக்கப்பட்டதில்
முழித்தபடி
முன்னுக்கு வந்தது
உள்ளேன்! என்றபடி
2 0 1 3.
ந.அன்புமொழி
சென்னை.