thanimai
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2015-11-05 00:00

தனிமை

நீலவானின் வெண்மேகங்கள் தங்கள்
கோலத்தைக் காட்டுகின்றன ரகசியமாய்
மெல்லிய மாலையின் குளிர் காற்று
அசைத்துப் பார்க்கிறது குழந்தையைப்போல
கிளையில் பறவையின் அழகு
அலையெழுப்பப் பார்க்கிறது மனதில்
எங்கிருந்தோ எழும் தேவகானம்
ஏகாந்தத்தைக் கலைக்க எத்தனிக்கிறது
குத்துக்கல்லாட்டம் உட்கார்ந்திருக்கிறது
தனிமை

-ஏகாந்தன்

- ஏகாந்தன், 2015-11-05
கற்பனை குன்றிய கவிதை
ஒன்றை தூக்கி எறிந்தேன்,
விதை மேல் விழுந்து அது
உரமானது,விதை வளர்ந்து
கனிகள் விளைந்தன.....!!!
அளவில்லாத சுவை அந்த கனிகள்
சுற்றம் சொன்னது:
அது கனியின் இயற்கை
சுவை அல்ல
இந்த கவிஞனின் கற்பனை குன்றிய கவிதையின்
அளவில்லாத சுவை அதில்
ஒட்டிக்கொண்டதென.......!!!!!

-ராம் சங்கர்

- ராம் சங்கர், 2015-10-19
தனிமை!
=========

மனிதனாய்ப் பிறப்பதில்
ஒருசுகம்,
அதுவும்,
தனிமையில் இருப்பது
தனிச்சுகம்!

கவிதை எழுத
வேண்டும் தனிமை!
கலங்கிய மனதுக்கு
மருந்தாம் தனிமை!

நிலவை ரசிக்க
வேண்டும் தனிமை,
நிம்மதியில் மிதக்க
வேண்டும் தனிமை!

சினம் குறைய,
வேண்டும் தனிமை!
சிந்தனை பிறக்க
வேண்டும் தனிமை!

அறியாமை அகல
வேண்டும் தனிமை!
ஆனந்தம் பிறக்க,
வேண்டும் தனிமை!

அறிவு மலர்ந்திட
வேண்டும் தனிமை!
ஆற்றல்மிளிர்ந்திட
வேண்டும்தனிமை!

மனிதனுக்கு மகிழ்ச்சி தனிமை,
மனதுக்கு இதம் தரும்
தனிமை!
தனிமை என்றுமே இனிமை!

- ஜமீலா பேகம், உதகை

- ஜமீலா பேகம், 2015-08-10
தனிமை!
=========
தனிமை! தனிமை!
மனிதனை மனிதனாக்கும்
கருவறை!
விடைகளைத் தேடும்
வினாச் சாலை!
ஒவ்வொருவருக்கும் ஓர்
அறிவுக்கோவில்!
காதலர்களுக்குக்
கனிவான கனவுதரும்
நித்திரை!
போராடும் வீரனுக்குப்
பயிற்சி தரும் களம்!
கவிஞர்களுக்குக் கவியூட்டும்
கற்பனைக் கூடம்!
கண்டுபிடிப்புகளின் மூலம்!
வெறுமைதான் தனிமை, ஆனாலும்,
வெறுமையை
வண்ணங்களால் அலங்கரிக்கக்
கற்றுத்தரும் பலபாடங்களை
தனிமை!

- கவிதாயினி.பாரதி பாக்கியம், தேனி.

- கவிதாயினி, 2015-08-05
தென்றல் வீசியும்
காற்றில்லாத வாழ்க்கை!
சூரியன் உதித்தும்
பகலைக் காணாத வாழ்க்கை!
நிலவு இருந்தும்
அமாவாசையான வாழ்க்கை1
சேர்ந்துபோன வனவாசமல்ல,
தனித்து விடப்பட்ட
தவவாசம்!
தனக்குத்தானே பேசி,
தனக்குத்தானே சிரித்து,
தனக்குத்தானே அழுது,
தனக்குள் தனியே
புதைக்கும் வாழ்க்கை!

- மூர்த்திதாசன், தேனி.

- மூர்த்திதாசன், தேனி, 2015-08-05
தனித்திருக்கிறேன் நான்
உலகச் சுழல்களால் தாக்கப்படாமல்
பாதுகாப்பான தொலைவில்.
எதையும் பயமின்றிப் பார்க்க முடிகிறது.
எனக்கான வாழ்வை யாரும் ஆக்கிரமிக்கமால்
நானே வாழ கற்று இருக்கிறேன்.
இயல்பான வாழ்வின் மகிழ்வு
தெளிக்கிறது புன்னகையை.
வாழ்வதற்காக சாகுமளவு
போராட்டம் தேவையாயிறுப்பதில்லை
ஆனால்...
எனக்குப் புரியாதது
உங்கள் கருணையும்
பரிதாபமாய் நோக்கும்
உங்கள் விழிகளும் தான்...

-திரிவேணி

- திரிவேணி, 2015-07-29
எனக்குள்...
அருகில்....
இருந்தும்
தொலைவில்

ஒரு புறம் நான்
மறு புறமும் நான்

உணர்வுப்படி
ஒருவன்
ஒத்திகை பார்க்கும்
ஒருவன்

இயற்கையும்
செயற்கையுமாய்
நிகழ்காலங்கள்

இழந்துவிடும்
இறந்தகாலங்கள்
எதுவோ
எதற்கோ
எதிர்காலங்கள்

இதுதானோ
வாழ்வியல்
கோலங்கள்?

எனக்குள் ஒருவனும்
எதிரே ஒருவனும்
எதிரும் புதிருமாய்
எத்தனை வடிவங்கள்

எனது பார்வையில்
என்னைக் கண்டிட
எத்தனை முயற்சிகள்

என்னைக் காணுமுன்
என்னைத் தொலைக்கும்
எத்தனை சுழற்சிகள்!

உயிரியல் புணர்ந்த
உயிரின் ரூபமாய்
உறவுகள் கொடுத்த
அவளின் தானமாய்
வாழ்க்கை என்று
வந்ததொன்று
வாஞ்சை கொண்டு
வாழ்ந்ததின்று...

அனுபவித்தவன்
மனிதன்

முற்றும் துறந்தவன்
முனிவன்

தொடக்கமும்
முடிவுமாய்
ஆதியும்
அந்தமுமாய்
எனக்குள்
நானே
இறைவன்

பயணம் உண்டு
பயணியும் உண்டு
பாதைகள்
பல ஆயிரம் உண்டு

ஆனால்
தொடங்கியது
தொடர்ந்தது
முடிந்தது
எல்லாமே
பிம்பச் சுழற்சியில்
வெவ்வேறாய் தெரியும்
ஒரிடமே!

-முகில்,கனடா

- முகில்
நிலவே
நீ
நினைத்திருந்திருந்தால்
உன் மடியில் தாலட்டுகேட்டுருப்பேன்!

ஜெயா,தமிழ்நாடு

- ஜெயா
தனிமை எனும்
இனிமையான தருணம்
கவிதையொன்று
கருக்கொண்டது

ஆயிரம் பேரின்
நடுவிருந்தும்
தனிமை காணும்
வல்லமை கொண்டவர்
கவிஞர் என்பேன்

சூழ்ந்திருக்கும்
சுற்றத்தின் மத்தியில்
தனித்திருக்கும் வேஷம்
தகித்துத் தன்னை காட்டுவதும்
தனிமை தன்னின்
தனித்துவம் அன்றோ !

இரையும் கூட்த்தினிடை
மகனே ! என்று ஒலித்திடும்
ஓசை ! அதுகூட
தனிமையாய்த்தான்
செவிகளில் ஒலிக்கும்
தாய்மையின் தனித்துவம்
அது அன்றோ !

சிரிப்பின் இடையே
புதைந்திடும் சோகத்தை
தனிமையாய்க் காணும்
திறமை கொண்டவர்
ரதனித்துவம் மிக்க
தோழர்கள் அன்றோ

தனிமை என்றோர்
சொல்லுக்குள் எத்தனை
வகை வகையான
தனிமைகள் உள்ளன
தனியாய்ப் பிரிக்கும்
வல்லமை கொண்டவர் யாரோ ?

சக்தி சக்திதாசன்

- சக்தி சக்திதாசன்

நிலவு துயிலும் நேரம்
நீ இல்லாமல்
நீளும் இந்நேரம்
நினைவெல்லாம் நெஞ்சோரம் நினைத்தால் வரும் ஜுரம்..
- ச.பிரியங்கா

Share with others