kanavukal
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-01-25 00:00

மனக்கனவுள்

உரிமை கொள்ள
உறவுகள் இருந்தும்
உள்ளத்தை புரிந்து
ஒரு உயிர் போதும்
அது தான் நட்பு...
உயிர் கொடுக்கும் நட்புகளாக
இருந்தும் சிறு பிரிவு
சிதறிய கண்ணாடி போல் அல்ல
மனதிற்கு
வசந்த காலம்
பழகிய நாட்கள்
மீண்டும் வசந்தத்தை
அசை போடும்
மனக்கனவுகளுடன்
தோழி....

சகு,சத்தி.
24.01.2012

- சகு,சத்தி, 2012-01-25
மனக்கனவுகள்...

கோடிகோடி சம்பாதித்து
மாடிவீட்டில் குடியேறக் கனவுகள்..
ஆள்அம்பு சேனையுடன்
ஆரசியலில் தலைமையேற்று
ஆட்சிபீடம் அமர்ந்திடக் கனவுகள்..
காமன்ரதியை மிஞ்சிக்
காதல்வானில் பறந்திடக் கனவுகள்..
எல்லாமாய் யாவுமாய்
நீயிருக்கக் கனவுகள்..
மனிதா நீ காணும்
மனக்கனவுகள் மதிப்பில் கோடி..
ஆனாலும்,
நண்பனே நீ
நல்லவனாய் ஆக
நல்லவனாய் வாழ(நடிக்க அல்ல)
எல்லாவகைக் கனவும்
எப்போது காணப்போகிறாய் !

-செண்பக ஜெகதீசன்...

- செண்பக ஜெகதீசன், 2011-10-03
மனக்கனவுகள்...

எங்கள் குழந்தைகளின் கனவுகளில்
அழகான குளங்கள் ஆறுகள் நீரோடைகள்
புல்வெளிகள் ---
நிலாப் பொழிவுகள்.மேனி வருடும் தென்றல்
ஊஞ்ஞல் கட்டும் ஆலமரம்.
கால்தழுவும் கடல் அலைகள் எல்லாம் வருகிறது முகங்கள் புன்கைபூக்கிறது-
விழிப்பு வந்தவுடன் வியர்வை நதியில் எங்கள் குழந்தைகள் நகரத்து வெம்மையில் வாடி சீமேந்துசுவருக்குள் சுருண்டு

வேலணையூர் தாஸ்

- வேலணையூர் தாஸ், 2011-10-14
மனக்கனவுகள்...

ஆலமரக் கீழிருந்து அடுத்தவேளை ஏதறியோன்
ஐந்துமாடி வீடு கட்ட ஆசைகொள்வதும்
கோலமிழந் தூய்மைகெட்டு குலமழிந்துபோனவளும்
கோமகனின் துணைவியாக ஆசைகொள்வதும்
காலமது மனமதிலே காட்டுமொரு விந்தையதை
கனவுஎன்று தள்ளிவிடக் கூடுவதாமோ
ஞாலமதில் ஈதுஒரு நாளும் புதிதானதில்லை
நாளும் வரும் அதிசயத்தின் நடைமுறைதானோ

நாடு ஆள எண்ணியொரு நாடகத்தில் நடிப்பவரும்
நாளை மன்னர் ஆகுதலும் நடைமுறையாமே
காடுவாழும் பேய்களுடன் காகம், நரி, கழுகுகளும்
கட்டிலேறி அரசு ஆளக் காணுகிறோமே
வீடில்லாமல் நாடில்லாமல் வீதியிலே விட்டுஎமை
வேடிக்கையாய் சுட்டுத்தள்ள விதியென எண்ணி
நாடு தமிழீழமென நாம் எடுக்கும் கனவுமட்டும்’
நானிலமும் சேர்ந்து பிழை என்பதும்ஏனோ?

கிரிகாசன்

- கிரிகாசன், 2011-10-14
மனக்கனவுகள்

படிப்புக்கேற்ற அரசு வேலை
கைநிறைய சம்பளம்
திருமணத்திற்கேற்ற வயது
அழகு மயில்போல் பெண்
இருந்தும்....
அமையவில்லை
வரதட்சணை கேட்காத
வரன்!
இப்படி இன்னும் ஏராளம்
மனக்கனவுகளுக்குப் பஞ்சமில்லை!
சொல்லிக்கொண்டே போகலாம்,
மலர்ச்சரமாய் நீளும்
கவிதைகளால்!

- கு. லட்சுமணன், புதுப்பட்டினம்
தமிழ்நாடு.

- கு. லட்சுமணன், புதுப்பட்டினம், 2011-10-17
மனக்கனவுகள்

முகூர்த்த நாட்களில்
வீடுதேடிவரும்
திருமண அழைப்புகள். - என்
மனத்திரையில் ஓடும்
மணவிழா நிகழ்ச்சிகள்.

புதுச்சேலை உடுத்தி
முகம் திருத்தி
கலைநயச்சிரிப்போடு
கற்பனையில் சிறகடிக்கும்
என் மனம்.

அடுக்களையிலிருந்து
காபி பலகாரம்
எடுத்து வரச்சொல்லி
அவசரப்படுத்தும் அம்மா,
பின்னலைப் பிடித்திழுத்து என்
கன்னத்தைக் கிள்ளி
கேலி பல பேசும்
உயிர்த்தோழிகள்.

ஒருவருக்கொருவர்
மாலை மாற்றியதிலிருந்து
அமிழ்தினுமினிய
அறுசுவை உணவை பகிர்தலில்
தொடரும்
உணர்வின் நிகழ்வுகள்

ஆயிரங்காலத்துப் பயிரை
காலமெல்லாம்
கண்ணும் கருத்துமாய்
வளர்ப்பதெப்படி என்னும்
கேள்விக்கு விடைதேடும்
என் மனக்கனவுகள்!

- கொள்ளிடம் காமராஜ்
திருச்சி , தமிழ்நாடு.

- கொள்ளிடம் காமராஜ், 2011-10-17
மனக்கனவுகள்

மனக்கனவுகள்
மடக்கனவுகள்
என்றாகிவிடுகின்றன
இதை
இவர்
செய்துமுடிப்பாரென
ஆராய்ந்து
அன்று
அவருக்குப் போட்ட
வாக்குகள்.

ஜனக்ககனவுகள்
விழிக்கும்வரைதான் பழிக்கின்றன
பணக்கனவான்களின்
மனக்கனவுகள் மட்டுமே
ஜெயிக்கின்றன!

சபீர் அபுஷாருக்

- சபீர் அபுஷாருக், 2011-10-20
மனக்கனவுகள்

விழிகள் திறந்தவாறு
ஆயிரம் மனவோட்டங்கள்,
நடுநடுவே
நான்கு விரல்களை மடித்து,
கட்டைவிரலை உயர்த்திக் காட்டும்
ஓர் அடையாளச் சின்னம்.
ஆமை முயல் கதை வந்துபோகிறது…
முயலா? ஆமையா?
தூங்குவதே இல்லை நான்,
பிறகு ஏது மனக்கனவுகள்?

- எஸ். சுமதி, சேலம்
(தமிழ்நாடு)

- எஸ். சுமதி, சேலம், 2011-10-23
மனக்கனவுகள்

தாத்தாவின் விரல்பிடித்து
நடந்த வரப்பு,
பறித்து மார்போடணைத்த
புடலம் பிஞ்சின் வாசனை,
உறங்கிய ஏணையில்
அம்மாவின் வாசனை,
திருவிழாவில் தொலைத்த
கொலுசுபோல்..
மீளாக்கனவாய் பால்யம்.....!
மீண்டும் வாராதா பால்யம் என, என்
மனக்கனவுகள் என்றென்றும்!

- அம்பல் மாதவி, தஞ்சாவூர்
தமிழ்நாடு.

- அம்பல் மாதவி, தஞ்சாவூர், 2011-10-23
மனக்கனவுகள்...

ஒன்றுபட்டுப்பார்……
மனிதா
காக்கை தன் இனத்துக்காக
கொள்ளும் வேட்கையை
சற்று கவனித்துப்பார்

எறும்புகளின் கூட்டங்களைப் பார்
கறையான்களின் வாழ்வுதனை
எண்ணிப்பார் இவைகளில்
எமக்குண்டு படிப்பினை
புத்தி எனும் ஆறாவது
அறிவுடன் பிறந்த
நீ மட்டும் எதிர் மறையாய்
வாழ்வதேன்

Nafrees

- Nafrees, 2011-10-26
மனக்கனவுகள்...

கனவுகள்.....
மனதினில் அன்றாடம்
ஆயிரமாயிரம் கனவுகள்.......
வாழ்வினை வழிநடத்தும்
லட்சியக் கனவுகள்.....
நம்பிக்கை நம்
மனதில் விதைத்த
வெற்றிக் கனவுகள்.....
எதிர்காலம் நம்
உள்ளத்தில் வளர்த்த
ஆசைக் கனவுகள்......
கனவுகள் -
என்றென்றும் நம்மை
வழிநடத்தும் ஒளி விளக்குகள்!!!!
கனவு காண்போம்.....
நல்ல எதிர்காலத்தை
மனதில் கொண்டு.....
கனவுகள் - எண்ணங்களாகும்!!
எண்ணங்கள் - செயல்களாகும்!!
செயல்கள் - முயற்சிக்கு வழி காட்டும்!!
முயற்சி - வெற்றிக்கு வழி வகுக்கும்!!

- பி.தமிழ் முகில்
மனக் கனவுகள்..

அரசு அலுவலகத்தில்
விண்ணப்பித்த உடனே
காரியம் கை கூடுகிறது.

கல்லூரிச் சேர்க்கை
காசு இல்லாமல்
முடிந்து விடுகிறது.

பட்டா வாங்கப்
பத்திர அலுவலகம் சென்றால்,
பலத்த மரியாதையுடன்
பதிவு செய்யப்படுகிறது.

உண்மை தானா இவைகளெல்லாம்- என்று
உரசிப் பார்த்தால்,
ஊழலை எதிர்த்து
உரத்துக் குரல்கள்
எழுந்ததும்
உள்ளம் கண்ட கனவு என்பது
உவகையைக் கிழித்தது.

-சித. அருணாசலம்.
சிங்கப்பூர்.

- சித. அருணாசலம், 2011-10-30
மனக்கனவுகள்...

விழித்திருக்கும் போது
விருப்பத்தினால் சிலது
விரலிடுக்கில் வானம்
வெண்புகையாய் மேகம்
கண்ணீர் மழையை பொழிய
காலம் கடந்து வருமே
உணரா மனம் உற்சாகமா?
உனது கனவு சொர்க்கமா ?

அதி. இராஜ்திலக்
பாரதம்

- அதி. இராஜ்திலக், 2011-11-10
மனக்கனவுகள்
----------------------
செடியில்லை கொடியில்லை
செங்காத்து பூமியில் வேர் விட்டு
மொட்டு விடவும் இல்லை
ஆயினும் ஏனோ..

இமைக்கும் இடைவெளியிலும்
நொடிக்கொரு பொழுதுமென
பூத்து நிற்கிறதென் மனக்கனவுகள்

நிறைவேறும் என காத்திருந்த
நிமிடங்களில் கூட
நீரோட்ட்த்தில் புதையும்
காகித கப்பலாய்
காணாமல் போயிருக்கிறது..

கனப் பொழுதில் கரைந்தே போனாலும்
விடிகாலை வானில்
புன்னகைக்கும் புது சூரியனாய்...
மீண்டும் மீண்டும் எழுகிறது
என் மனக்கனவுகள்...

கதவுகள் அடைத்து துரத்தவோ...
கடிவாளம் போட்டு இழுக்கவோ
முடியாத என் மனக்கனவுகளுக்கு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும்

என் கனவுகளை
கொன்று தின்று கொக்கரித்தவர்களே..
நினைவில் கொள்ளுங்கள்..
காற்றும் கடவுளும் என்றும்
ஒரு திசையில் நின்றதில்லை..!

திருமலைசோமு,இந்தியா

- திருமலைசோமு, 2012-10-13
மனக்கனவுள்

மனதில் கனவும் பலவுண்டு
மொழிவேன் அதிலே சிலஇங்கே
கனவைக் காணல் நன்றென்று
கூறும் அறிஞர் பலருண்டு!
நனவாய் ஆகும் கனவுகளும்
நெஞ்சத் திண்மை வாய்த்துவிடின்
தினமும் கனவைக் கொள்கின்றேன்
திருவாய் ஆக்கு இறையவனே!

மலராய் சிரித்து வாழ்ந்திடணும்
முறுவல் தன்னை ஈந்திடணும்
பலரும் வாழ உதவிடணும்
பணமும் அதற்கே ஈட்டிடணும்
குலமும் கொள்கைக் கோத்திரங்கள்
கூடி யொன்றச் செய்திடணும்
புலமை மிக்கப் பேரறிவை
பெற்றும் பகிர்ந்தும் மகிழ்ந்திடணும்

வளமை அறிவும் சிறந்திடணும்
வாழ்க்கை இதிலும் வென்றிடணும்
இளமைப் பொங்க மூப்பினிலும்
இயல்பாய் வாழ்ந்து காட்டிடணும்
களங்கள் பலவும் கண்டபின்பே
கண்கள் மூட வாய்த்திடணும்
தளர்வே இன்றி தொண்டாற்றி
தூயோன் இறைக்கே பணிந்திடணும்

இப்னு ஹம்துன்

- இப்னு ஹம்துன், 2013-01-01

Share with others