என்றோ பார்த்த
இனிய காட்சிகள்,
எங்கோ தொலைந்தன
இதயத்தில்..
தூரிகை எடுத்துத்
தொடங்கினேன் பணியை..
தொலைந்தது மீண்டும் வந்தது
திரைச்சீலையில்-
ஓவியமாய்...!
-செண்பக ஜெகதீசன்...
தோளில்போட்டு நான் வளர்த்த
தனயனின் சிகிச்சைக்காக
மாதக்கணக்கில் மருத்துவமனையில்
தொலைந்துபோன என் தூக்கமும்
கலைந்துபோன என் நிம்மதியும்
குலைந்துபோன உடல்நலமும்
மீண்டும் வருமோவென நான்
மனம் குண்றி இருந்தபோது,
மருத்துவ அறிவியலும்
மகேசனின் திருவருளும் -என்
மகனைக் காப்பாற்றியதில்....
தொலைந்துபோன நிம்மதியும்
தூக்கமும், மகிழ்ச்சியும்
மீண்டும் வந்தது எனக்குள்ளே!
-எஸ்.சுமதி,சேலம்
தமிழ்நாடு
காலப்பஞ்சுப் பொதியில் தீப்பிடித்து
நிர்மூலமான வீடுகள், காணிகள் புத்துருவானதென்று
உயிர் பிழியப்பட்ட மனம் அடங்கலாம்.
உருக்குலைந்த குடும்பமினித் திரும்புமோ!
ஆடிக்காற்றாய் அலைந்த தமிழர் மனம்
தேடியுறவுகளை அலைந்து பெருமூச்சிடும் மனம்
தொலைந்தது மீண்டும் வந்தது என்று
குதூகலித்துக் கொண்டாடுமோ ஒரு நாள்!
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-12-2010
மனதை
கட்டாயப்படுத்தினால்
எதையும் பெறமுடியாது
மறுப்பதையும்
திரும்பப் பெறுவதில்லை.
ஒவ்வொரு முறையும்
தேவை மட்டுமே முன்நிற்கிறது
என்னை உதாசீனப்படுத்தி
எப்பொழுதாவது
நினைவு வரும் என் வீட்டில்
நான் மட்டும்
நண்பனாய் சகோதரனாய் தந்தையாய்
எனக்கானவற்றை
ஒவ்வொன்றாய் கோர்த்தபடி
ஒருதலைப்பட்சமானாலும்
நியாயங்கள் பொதுவானவை
கோர்வையின் தோற்றத்தில்
பயம்.. வெட்கம்.. படபடப்பு..
அப்பாடி
என்றும் இருந்ததில்லை இப்படி
என் வீட்டில்
நான் மட்டுமான இருப்பும்
அந்நியப்பட
இது என்ன தொல்லை
வீடுமின்றி
நானுமின்றி
அசைநிலை மறுக்கும் தவிப்பு
நட்பு கெடாது
வாக்கின் நம்பிக்கையில்
அன்று நானாக...
எல்லோரும் வாழ்த்தும்படி
எல்லோரும் விரும்பும்படி
கற்பனைகூட முரண்டுகிறது
உன் பேச்சும் ஆசையும்
எதையும் எதிர்கொள்ளும்
புரியவைக்கும்
இயல்பைச் சுவறிய நம்பிக்கை
தந்தையுடையது மட்டுமல்ல
உன்னுடையதும்
இப்பொழுது புரிகிறது
என்னுடையது என்றில்லாமல்
எல்லாவற்றையும்
பொதுவில் வைக்க
அவர்களால்
எப்படி முடிந்தது என்று
இப்பொதுமை நித்தியமா
இது என்னால் முடியும்..முடியாது
உறுத்தல் இல்லாமல்
எப்படி புரியவைப்பேன்.
முனைவர் ப. குணசுந்தரி தர்மலிங்கம்
கனவிலாவது உன்னைக்
காணும் ஆசையால்
தொலைந்தது மீண்டும் வந்தது-
தூக்கம் !
-அரவிந்த் சந்திரா
மனதின் அடிநாளங்களில்
மையம் கண்டு
நரம்பு கற்றையுள்
பிளம்பென புகுந்து
மௌனம் பறித்து
ஞானம் வருடி
மூளை செதில்களை முத்தமிட்டு
உள்ளங்கை தாவியோடிய
நினைவுகள்
ஒரு பொழுது
உயிர் கூரையில்
உலர்ந்து தொலைந்தன
நேற்றைய பகலில்
நெருப்புதிர்த்த காற்றில்
பரவிய நினைவுகள்
நெஞ்சில் சுழன்று
தாக்கம் தனிந்த நொடியில்
தொகுத்திருப்பேன்
புதுக்கவிதை வரிகளாய்…
கொ.மா.கோ.இளங்கோ
தொலந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்
தொல்லையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை
கண்முன காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள்
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக
அழகில் காண்பது மிகநாணே
என்னுள் அவளே இருந்தாலும்-நல்
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவள
மறுத்தால வாழ்வே சுடுகாடே
இன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்
எத்தனை காலம் ஆனாலும்-என்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
பழியும் வருமே வாய்திறவாய்
புலவர் சா இராமாநுசம் அரங்கராபுரம்
சென்னை 24