sinthanai kilikkum pena
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2016-03-28 00:00

புனித
பூமியில் பிறக்க
கருவறைக் குழந்தைக்
கனவு
குழந்தை
இறந்தே
பிறந்ததாம்
பிரேத
பரிசோதனையில்
தற்கொலையாம்

கனகராஜ்.சு, இந்தியா

- கனகராஜ்.சு, இந்தியா, 2016-03-28
தேவதையின் வார்த்தை
இருட்டில் வால் நட்சத்திரம்
சரிகின்றபொழுது
உதிர்கின்ற பொன்வண்ணச்
சாயலாய்
நிறமாறிய தேவதை
வெண்ணிற சிறகுகளோடு
ஒரு நந்தவனத்தில்
தடம்பதிக்கும் அவ்வேளையில்
வெம்மையில் தவம் செய்து
நடுநிசியில் வெடித்துச் சிதறும்
இலவம் பஞ்சோடு
கைகோத்து
மென்மையான நளினம் காட்டிப்
புன்னகைச் சிந்த
நிலச்சரிவில் உருளுகின்ற
பேரதிர்வுன் இரைச்சலோடு
நின்ற
அம்மலை உச்சியில்
வெண்ணெயைப் போல்
வழிந்தோடுகின்ற அந்நீரோடையில்
ஒரு பூக்காடு
முத்துக்குளிப்பதுபோல்
முழ்கிய
அத்தேவையின் சலசலப்பில்
துள்ளியோடும் மீன்கூட்டம்
வேலியாகச் சூழ்ந்தபோது
ஒரு மல்லிகைத் தோட்டமாய்
ஆழ்கிணற்றில் அசைந்தாடும்
நொடியசைவில்
அக்கனவென்னும் நிழற்படத்தில்
நான் தலைநீட்ட
காகம், குயில், தொகைவிரித்தாடும்
மயில்,சிட்டு, சேவலெனத்
மௌனத்திரைப் போர்த்திக்கொண்டு
உறங்கிய நிலையில்
சிங்கம், புலி, கரடி, நரியென
எல்லா விலங்குகளின் வடிவமாயிருந்த
அத்தேவதை
என் பிம்பத்தைக் கண்டபொழுது
அணுகுண்டு மூஞ்சி
செயற்கைக்கோளையொத்த
உடலமைப்பு
சுயநலத்தோடு தான் வாழ
நாவடி முதல் நஞ்சுண்ட
மிடறுவரை
எவரையும் வீழ்த்தும்
மனித மிருகமென அலறியதில்
நான் யார்யெனத்
தேடியபோது
மனம்
உயிரற்ற நிலையில்
அம்மணமாயிருந்தது

-சந்தோஷ்குமார்

- சந்தோஷ்குமார், 2016-12-04
தேடிச்சோறு நிதம் தின்று....

தினமும் செய்திகள் செய்திகள்

துணுக்குகள்

கவிதை மொக்கைகள்

பின் நவீனத்துவ‌

முன் நவீனத்துவ‌

மாயாவாதக் கனவுவாத‌

வார்த்தை ஆலாபனைகள்.

யாரோ ஒரு நடிகை

அங்கம் எல்லாம்

துண்டு துண்டாய் வெட்டப்பட்ட விவரிப்பும்

காவல் நாய்கள்

அந்த மாமிசத்தை மோப்பம் பிடிக்கும்

இராட்சத காமிரா காட்சியும்..

மயிர்குத்திட்டு நிற்கவைக்கும் எழுத்துகளும்...

ஒரு புது மாதிரி

தாடியோ

குல்லாவோ

வைத்துக்கொண்ட‌

சாமியாரின்

ஆன்மீகக்குடல் உருவிய‌

ஸ்லோக சங்கிலித்தொடர்

வாக்கியங்களும்.....

பங்கு மூலதனத்தில்

கரடியும் காளையும்

கட்டிப்புரண்டு

புழுதிகிளப்பியதில்

கருப்புப்பணங்கள் கூட‌

கை கட்டி வாய்பொத்தி

கும்பாபிஷேகம் பண்ணி

சம்ப்ரோக்ஷணம் செய்து

பொருளாதாரத்தை புள்ளி விவர‌

ஆணி அடித்து ஆணி அடித்து

ஆலவட்டம் போடும்

பத்தி பத்தியான கட்டுரைகளும்....

தேடிச்சோறு நிதம் நின்று

பல சின்னஞ்சிறு கதைகள் பேசி

சிந்தனைக்குள்

சிதறுகின்ற பாரதியின் எரிமலைகளையே கூட

அவித்துப் போடும்

அரட்டைக்கூளங்களும்....

எம்.எல் ஏ சீட்டு.

இல்லாவிட்டால்

எம்.பி சீட்டு

இல்லாவிட்டால்

ராஜ்ய சபா சீட்டு

இன்னும்

மெடிகல் சீட்டு

இஞ்சீனியரிங்க் சீட்டு

என்று

அரசியலின் சாயப்பட்டறைகள்

கழுவி கழுவி ஊற்றிய‌

வாய்க்கால் வரப்பு செய்திகளும்....

மணல் அள்ளிச்செல்லும்

கொள்ளைகளும்

ரோடுகளில் மக்கள்

மறியல் செய்து மறியல் செய்து

டிவிக்களில்

முகங்கள் மொய்த்த செய்திகளும்....

அணு உலை வேண்டாம் என்று

அடுக்கு அடுக்காய்

ஜனங்கள் குவித்து

தொட்டில்கட்டி குழந்தைகளுடன்

சுருண்டு கிடந்தும்

அணுவின் எலக்ட்ரானுக்குள்ளும்

பிளக்கமுடியாத‌

இனவாத மயிரிழை அரசியலும்

அது சார்ந்த‌

விஞ்ஞான அஞ்ஞான எடுத்துக்காட்டுகள்

குவிந்த செய்திகளும்.....

காவிரியும் முல்லையாரும்

இனி சங்கத்தமிழ் ஒலிக்காது

என்னும்

ஒப்பாரி முழக்கங்களும்

ஒரு சொட்டு கூட தர மாட்டோம்

எனும்

தேர்தல் பருவகால‌

நரம்பு புடைக்கும்

நாக்கு தெறிக்கும்

பேச்சுகளின் ஒளிபரப்பு செய்திகளும்...

கோவில் நடை திறப்பது போல்

நாடாளுமன்ற நடை திறக்கும் போதெல்லாம்

புறக்கணிப்போம் எனும்

ஜெண்டை மேள ஜால்ரா தட்டல்

ஒலிகளின் தலைநகர்ச்செய்திகளும்

உள்ளுக்குள்ளே

உயிரற்ற மைக்குகளுக்கு

கை கொடுக்கும்

மேசை தட்டல் மழையோசைகளும்...

இன்னும்

இன்னும்

பூனைமயிரில்

புதுக்கவிதைகள் செய்து

காதலின் ரத்த அணுக்களின்

சத்த மியூசிக்குகளில்

சரித்திரம் படைக்க கிளம்பிய‌

லேசர் அரங்க பட்டைகிளப்பும்

சினிமா கலைநிகழ்ச்சி செய்திகளும்..

மூச்சு முட்டுகிறது.

செய்திகள் தின்று தின்று..

பாவம்.

கொண்டுவாருங்கள்

யாராவது

ஆக்சிஜன் சிலிண்டரை

நம் ஜனநாயகத்துக்கு..

-ருத்ரா இ பரமசிவன்

- ருத்ரா இ பரமசிவன், 2016-09-12
உனஂ நிப்பு முனை
அநஂத காகிதத்தை
முத்தமிடுமுனஂ
ஒரு நிமிடமஂ!

உனஂ சொலஂ
ஆயிரம் எரிமலைகளினஂ
லாவாவை
கரு தரித்திருக்க​ வேணஂடுமஂ !
ஏழு கடல்களினஂ அலைகளிலும்
நெசவு செயஂயபஂபடஂடிருக்க​ வேண்டுமஂ.
இனி எழுது.
உனஂ யுகம்!
இனி அது
உனஂ யுகம்!

-ருத்ரா இ பரமசிவனஂ

- ருத்ரா இ பரமசிவனஂ
சிந்தனை கிழிக்கும் பேனா!

சக்கரங்கள் கொண்டு
கரையோரம் பயிர்செய்து பயணித்தான்
கரடு முரடானவைகளை.
கைக்கொண்டு களைந்து
காட்டினான் நாட்டை.
ஒலியெழுப்பி வாழ்ந்தான்
மொழி வந்ததும்
நாகரீகம் சொன்னான்.
ஏர்முனையில் உணவு தந்தவன்
ஆணி முனையில்
அகரம் பயிலத் தொடங்கினான்.
ஆறாம் அறிவு தூண்டும்
பேனாவைப் பிடித்தான்!
நாகரிகம் படித்தான்.
வெற்றுத்தாள் கைம்பெண்ணுக்கு
ஆறாம் விரலால்
திலகமிட்டான்!
ஆயினும்,
அறிவியல் கண்டாலும்
ஆறாம் விரல் அணிமகுடத்தை
அவன் விடவில்லை!
சிந்தனையைக்
கிழித்துக் கிழித்துச்
சீர்பண்ணிக் கொண்டிருக்கிறான்
சமூகத்தை அவன்!

- செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு

- செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
சாணம் மெழுகிய தரையில்
வரிவரியாய் நெளிந்தது
மாட்டின் தடங்கள்!
___________
குடித்தவன் நிழலில்
தள்ளாடுகிறது
குடும்பச் சித்திரம்!
___________
எருமை புரண்ட
சேற்றில் முளைத்தது
செந்தாமரை!
_________
சாவிற்கு மட்டுமல்ல
மீனின் வாழ்விற்கும்
இறைக்கப்படுகிறது பொரி!
____________
அள்ளிய சாக்கடையை விட
அதிகமாக நாறியது
புறக்கணித்த
சமூகத்தின் மௌனம்!
_______________
முகம் போர்த்தி உறங்கிய
முந்தானைச் சேலையில்
பத்திரப்படுத்தி வைக்கிறேன்
என்
பிள்ளையின் வாசத்தை!
_________
சாலப் பரிந்து
ஊட்டிய சோற்றில்
தாய்மையின் வாசனை
____________
தெருவின் முகவரியாய்
மாறிப் போனாள்
அடையாளம் தொலைத்த
பைத்தியக்காரி!

-அனுப்புநர்
ந.சுரேஷ், ஈரோடு
அலை 87540 41910

- ந.சுரேஷ், ஈரோடு
வௌவால்களின் தளம்

அன்று
நீ வீசிய பந்தை
நான் அடித்து
உடைந்த ஜன்னலின்
பின்னிருந்தெழுந்த
கூக்குரல் தேய
மறைந்தோம்
கணப் பொழுதில்
வெவ்வேறு திசைகளில்

உன் பெயர் முகம்
விழுங்கிய
காலத்தின் வெறொரு
திருப்பத்தில்
ஒற்றை மழைத்துளி
பெருமழையுள்
எங்கே விழுந்ததென்று
பிரித்தறியாத
செவிகளை
பன்முனைக்
கூக்குரல்கள் தட்டும்

காட்டுள்
இயல்பாய்
மீறலாய் இரு
வேட்டைகள்
நகரின் நுட்ப
மௌனங்கள் ஓலங்கள்
இடைப்பட்ட
விளையாட்டு
விதிகள் மீறல்களில்
பெயர்கள் முகங்கள்
நாணயங்கள் உரசும்
ஒலிகளாய்

ஒரு வரவேற்பறையின்
நாசூக்கு
விசாரணை அறையின்
இறுக்கம்
நீதிமன்றத்தின்
சறுக்குமர விளையாட்டு
சிறையின்
அழுத்தம்
வணிக வளாகத்தின்
ஒப்பனை
இதில் எதையும்
நினைவிலிருந்து
நிகழ்காலத்தில் அரங்கேற்றும்
மின்னணு சாதனம்

மலைப்பாதை
குகைகளுக்குள்
தற்காலிகமாய்
பகலிரவு
பாராதிருக்கும்
வெளவால்கள் இருப்பிடத்
தளமாய்

-சத்யானந்தன்

- சத்யானந்தன்

Share with others