01.
அன்பே சிவம்
-------------------
யார் யார் சிவம்
மாமன் சிவம் மச்சான் சிவம்
அப்பன் சிவம் பெரிய அப்பன் சிவம்
எங்கும் நிறைந்த என் உறவுகள்
எல்லாம் சிவம்
நல்லதும் கெட்டதும்
நான் என்பதும் அறிய
அழுத்தங்கள் தந்தென்னை
ஆளாக்கி விட்டவரும் சிவம்
ஆயின் அன்பெங்கே?
அன்பே மனிதம்
அது ஆண்மைக்கும் பெண்மைக்கும்
அப்பாற்பட்டது
அதுதான் சிவமாயின்
அன்பே சிவம்
வாழ்வுக்குள் மனிதம்
வந்தமர்ந்து விட்டதனால்
வாழ்வே சிவம்.
02.
பயம்
---------
பயம் என்ற சொல்லின்
பயனென்ன?
பயத்தால் மனிதன் இழந்தவையும் உண்டு
அடைந்தவையும் உண்டு
பயம் பலருக்குப் பலவீனம்
இன்னும் பலருக்குப் பலம்
பயத்தின் பலத்தால்
பயன்பெற்ற பலரிலும்
பயத்தின் பலவீனத்தால்
பாழாய்ப் போனவர்
பல்லாயிரம் - ஆதலின்
அஞ்சுவதற்கு அஞ்சவேண்டும்
அஞ்சியவருக்கு சதா மரணம்
அஞ்சாதவருக்கு ஒருநாள் மரணம்
மரண பயத்தை வென்றுவிடுபவன்
மாவீரனாகிறான் அல்லது மகானாகிறான்
-கலாநிதி தனபாலன்