என் தமிழ் உறவுகள்.. எதிரிகளுக்கு நன்றி
01.
என் தமிழ் உறவுகள்
----------------------------
வந்ததும் வாழ்ந்ததை மறந்து
வசதிகள் கூடி
வாழும் தேசத்தின்
வாழ்நிலை தழுவி
பெரிய மனிதர்களாய்
பிதற்றிக் கொள்ளும்
தன்னிலை மறந்த
தமிழர்கள் மத்தியில்….
தேசத்தின் வாசம் சுமந்து
தெருக்களெல்லாம் தாண்டி
தேசம் கடந்து வந்தாலும்
நேசம் கடவா நெஞ்சங்களாய்
வாழும் உறவுகள்
தேச விடுதலைக்காய்
வாரிக் கொடுக்கும் நெஞ்சங்கள்
இவர்கள் என் தமிழ் உறவுகள்…
02.
எதிரிகளுக்கு நன்றி
------------------------
ஏற்றத்தின் வாசலில் நின்றுகொண்டு
என்னுடைய எதிரிகளுக்கு
எப்படி நன்றி கூறுவதென்றறியாது
ஏகாந்தமாய் உணர்கிறேன்
என் வெற்றிக்கான விதைகள் இவர்கள்
இவர்களின் இகழ்ச்சி இல்லையென்றால்
இலக்கைத் தொட்டிருக்க முடியாது
இவர்களுக்கு இங்கிதமான வந்தனங்களோடு
இதயம் கனிந்த நன்றிகளும்.
-கலாநிதி தனபாலன்