விதி.. சுவடுகள்.. புன்னகை
01.
விதி
----------
விதி என்ற ஒன்று
மனித வாழ்வின் வித்தாகிப்போனது
வீணான கற்பனை வாழ்வின்
விளைநிலம் முழுவதும்
விரிந்து பரந்தது
அது யாதுமாகி நின்றது
எங்கும் எதிலும் நிறைந்தது
தீதும் நன்மை எல்லாம் அதுவாய்
திசைகள் எங்கும் பரவி நின்றது
இது என்ன விதியோ என்று
எண்ணி ஏங்க வைத்தது
இல்லையென்று எண்ணிய போது
இல்லாதொழிந்தது
இதுதான் விதியோ!
02.
சுவடுகள்
------------
நேற்று நடந்தவை பற்றி
நின்று நினைத்துப் பார்த்தேன்
இருந்த இன்றைய பொழுது
இல்லாதொழிந்தது
இனி இந்த நினைவே வேண்டாம்
நிகழ்காலம் பற்றியே
நினைப்பேனென்று நினைப்பதற்குள்ளே
நாளைய பயத்தில்
நாட்கள் நகர்ந்தன
நினைவுகள் திறந்து
நினைத்துப் பார்த்தேன்
நிற்கமுடியா நிலையில் நான்
வாழ்வின் சுமைகளைச்
சுமந்த சுவடுகளோடு
வயோதிபம் என்னை
வாங்கி நின்றது.
03.
புன்னகை
-------------------
பொய்யாய்ப் புன்னகைத்து
புதுமையாய் வாழ்வதாய்
பூரிப்புக்காட்டி புதுவாழ்வில்
புகுந்தாள்
வருங்கால வாழ்வின் வசந்தத்திற்காய்
நிழல்களை நிசங்களாக்கி
நின்மதியாய் வாழ்வதாய்
நினைப்பினிலே வாழ்ந்தாள்
நினைவுகள் திறந்து
நிசங்களைத் தழுவியபோது
நின்மதி நிலைகுலைந்து போனது.
-கலாநிதி தனபாலன்