கற்பனையில் வாழ்வு.. உறவு
01.
கற்பனையில் வாழ்வு
-----------------------------
ஊனின்றி உறக்கமின்றி
உள்ளதையும் தொலைத்துவிட்டு
நிசத்தினையும் நினைக்காது
நினைப்பினிலே வாழுகின்றார்
நித்திரையும் இவர்க்கில்லை
நிமித்திகர் சொன்னதையே
நிசமென்று நம்புகிறார்.
மரத்தடியில் இருந்தவனை
மகானென்று நம்பி
மனத்தினையும் தொலைத்துவிட்டு
பணத்தினையும் பறிகொடுத்து
பரிதவித்துப் போகின்றார்
இன்றிருந்த நிலையினையும் இழந்துவிட்டு
இல்லாத ஒன்றுக்காய்
இப்படியேன் பரிதவிப்பு
கண்டதையும் கேட்டதையும்
கட்டாயம் நடக்குமென்று நம்பி
கடன்பட்டு வாழுகிறார்
காலமெல்லாம் கற்பனையில்
நிசத்தினை நினைத்திடா
நிழல்களின் வாழ்வது
நிச்சயம் மாறணும்
அறிவினில் ஆசை அமிழ்ந்திடின்
அஃது சாத்தியமாயினும்
சாத்திரி சொன்னது சத்தியம் என்றுதான்
‘சா’ வரை நம்புவாராதலால்
சாத்தியமாகுமோ?
02.
உறவு
--------
ஆயிரம் ஆயிரமாய்
அள்ளிக் கொடுத்தேன்
வெள்ளிப் பணத்தை
அங்கிங்கெனாதபடி
எங்கும் நிறைந்தது
உறவு.
காலம் கரைந்தது
காசும் கரைந்தது
காற்றெனப் பறந்தன
கரையெலாம் இருந்த உறவுகள்
தேற்றி எனை நான்
திரும்பு முன்னே
காலம் காட்டி நின்றது
காயத்தின் சுவடுகளை.
-கலாநிதி தனபாலன்