மானிடள்.. புலம்பெயர் வாழ்வு
01.
மானிடள்
------------
அவனுக்குள்ளே அவள் அமிழ்ந்திருப்பதால்
அவளை அவனால் அறியமுடியவில்லை
அவனோ அவளோடு வாழ்வதாய்
அலட்டிக்கொள்கிறான் அவ்வளவேதான்.
அவளோ அவன்தான் வாழ்க்கையென்று
வாழ்வின் இறக்கைகளை இழந்துவிட்டு
சிறகுகளைச் சிதைத்துவிட்டு சிறைப்பட்டாள்
மனிதனுக்குள்ளே சிறைப்பட்டிருக்கும்
மானிடளை விடுதலை செய்வதுதான்
உண்மையான விடுதலை
இதை இவளே உணராதபோது
இவளுக்கு எப்போது விடுதலை?
இயந்திரப் பொம்மலாட்டப் பாவையாய்
இயங்கிய இவள்
தன்னைத்தானே அழித்துக்கொண்டு
வசதியாய் வாழ்வதாய் வாயாரச்சொல்லி
சிலபொழுதுகளில் சிற்றின்பத்தில் சிலாகித்து
வாரிசாய் சிலஉடல்களை உற்பத்தி செய்துவிட்டு
வசதி வந்தபோது இறந்துபோனாள்
விடுதலை பெறாமலே விடைபெற்றுச்சென்றாள்.
மரித்துப்போன மானிடளை மறந்தான்
மறுபடித்தொடங்கினான் தேடலை…
02.
புலம்பெயர் வாழ்வு
------------------------
புலம்பெயர் தேசத்தில் புண்பட்டு வாழ்கின்ற
மனப்புழுக்கறை மனிதர்கள்
இவர்களில் இருரகம்
உள்ளே வெளியே
உள்ளொன்று வெளியொன்று
இதற்கு உள்ளும் பலரகம்
வெளியே…
வெளியே வேடம் தரித்து
வெற்றியின் மனிதராய்
விடியலின் விரைவுத்தூண்களாய்
வித்தகம் பேசுவோர்
விடியலை விரும்பிடா
விலாசம் விரும்பிகள்
உள்ளே…
உறவுகள் இன்றியே உளச்சலுறுபவர்
தோல்வியைக்கண்டுமே துவண்டு போனவர்
வாலிபம் தன்னையே வரையறை செய்து
உடலை வருத்தி உழைப்பவர்
சங்கமம் இன்றியே சஞ்சலப்படுபவர்
நாளைய வாழ்வினை நம்பியே
நிசத்தினை தொலைத்து நிழல்களாய் வாழ்பவர்
நிமித்திகர் சொன்னதை நிசமென நம்புவோர்
புத்திமானாயினும் புல்லரித்துப்போபவர்
புரட்டினை நம்பியே-கற்பனைப்புரவியிலேறியே மனதினுள்
புரவலனாகவே பாவனை கொள்ளுவார்-தம்
புராதனம் பேசியே பொய்மையைப் புழுகுவார்
காலம் போனபின்
புரோகிதன் சொன்னது பொய்யெனக்கண்டுமே
புண்ணியாகவாசனஞ்செய்து புதுப்பித்துத்தொடங்குவார் இவர்
புண்பட்டு வாழ்கின்ற
மனப்புழுக்கறை மனிதர்காள்!
-கலாநிதி தனபாலன்