எழுத்து
-----------

எழுதினேன் எழுதினேன்
எவர்முகமும் பாராமல்
என்மனம் பார்த்து எழுதினேன்
மனமொழியை எழுத்தாக்கி
மற்றோர்க்கு மறுமொழியாய்
வைத்தேன்

எழுதினேன் எழுதினேன்
மெய்மையை மெருகூட்டி
பொய்மையைப் புதைத்து
புரிதலைத்தரவே புதுக்கவிதை
எழுதினேன்

மறைத்து மறைத்து
மார்பைக் காட்டி
மற்றோர் பார்ப்பதில்
மகிழ்சி கொள்ளும்
மங்கையைப் போலே
எனக்குள் ஏதோ
எழில்மிகும் இனிமை
இதனால் இதயம் திறந்து
இன்னும் எழுதுவேன்

புரிந்தவர் புணர்ச்சியில்
புதுமைக்கருவாய்
கவிதைக்குழந்தை
களத்தில் பிறப்பாள்
கண்டு மகிழ்வேன்
தலைமுறை கண்ட
தமிழும் வாழ்வாள்
வாழும் தமிழை வாழ்த்தி
எழுத வருவோர்க்கெல்லாம்
வாழ்த்துச் சொல்லி
வணங்கி நிற்பேன்.

-கலாநிதி தனபாலன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-09-01 00:00
Share with others