வீறு கொண்டெழுவோம்.. யார் இவர்கள்?

வீறு கொண்டெழுவோம்
---------------------------------

வீரமாமலை வீழ்ந்ததோ மண்ணி;லே!
விம்மி விம்மி அழுதோம்
நிகழ்கால வீரத்தின் குறியீடு
நின்று போனதோ?
நினைந்து நினைந்து அழுதோம்
சமர்க்களங்களின் சரித்திர நாயகன் சாய்ந்ததாய்
காற்றிலே வந்த சேதி கேட்டு
கதறிக் கதறி அழுதோம்

களம்பல கண்ட காவிய நாயகன்
காலனின் கைகளில்
கனத்தது இதயம்
கண்களில் கண்ணீர் கடலெனப் பாய்ந்தது
சோகக் கண்ணீர் சொரிந்த போதும்
விழிகளின் வழியே விழுந்த கண்ணீர்
விடைபெறு முன்னே
வீறு கொண்டெழுவோம்!

வீரனின் சாவில்
விழி பிதுங்கி அழுவதோ
விழுவதோ விடையல்ல
வீறு கொண்டெழுவோம்
விரைந்து முன்னேறுவோம்
விடுதலை பெறும் வரை.

02.
யார் இவர்கள்?
--------------------

எம்முட்சிலரை எப்படித்தான்சொல்வேன்!
மாற்றானோ மாசறக்கலந்த
மனிதமுகங்களா இவர்கள்?
இல்லையில்லை இல்லவேயில்லை.

சோற்றுக்காகவும் சுகத்திற்காகவும்
தேசவிடுதலையை சேற்றில்
புதைக்கும் புல்லுரிவிகள்?
பெற்றமண்ணை விற்று
பெயர்பெறத்துடிக்கும் பேய்கள்?
மாற்றான் மண்ணிலே
மானமிழந்தும் மதிப்புடன்
வாழ்வதாய் மகுடியூதி
பட்டமும் பதவியும்
பெற்றதாய் பறைசாற்றி
கற்றதால் உயர்ந்ததாய்
கதைகள்பேசி காலங்கழிக்கும்
கயவர்கள்?
கண்டதும் காதல்
கொண்டதாய் கூறி
கலவிக்கூடும் காமப்பேய்கள்?
ஊரிலுள்ள உடன்பிறப்பை
உதாசீனஞ்செய்து உணர்விழந்து
முன்பின் தெரியா மனிதமுகங்கங்களை
முதுகிலே தாங்கும்
தன்னிலை மறந்த தறுதலைகள்?
தமிழர்களா இவர்கள்?
யார் இவர்கள்?

-கலாநிதி தனபாலன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-26 00:00
Share with others