வலி நிறைத்துப்போன வித்யா...வெறுமை

01.
வலி நிறைத்துப்போன வித்யா..!
------------------------------------

வித்யா..

நாங்கள் பார்த்து கொண்டிருந்தோம்..!

ஆத்மார்த்தமாய்
வலித்து செல்லும்
ஒருபெரிய நெருடலின் பின்னான
வலி..
எப்போதும் இடித்து கொண்டிருக்கிறது..

நீ அழுதிருக்கக் கூடும்..
அது வலிகளின் கடைசி வலியாக
இருந்திருக்கக் கூடும்..

மனிதனை தின்னும்
தியரியில்
நீ சோதனைப் பொருளானாய்..

பாதங்கள் இல்லை..
பாதைகள் இல்லை..
பாதுகாப்பும் இல்லை..
யுத்தம் தின்று
துப்பிய வாழ்கையின்
எல்லா புலம்பலும் தாண்டி
உன் சித்திரம் சிதைந்து விட்டது...
பதினெட்டு வருடங்கள்
பத்திரப்படுத்திய
வாழ்வின் மெல்லிய பொழுதுகள்..

உலகத்துக்கு சொல்லாத
உனது கனவுகள்...

வகுப்பறைகளுக்கு மட்டுமே
சொந்தமான வரலாறுகள்...

புத்தகத்துக்கும் புது செருப்புக்குமான
உன் வாழ்வுப்போராட்டங்கள்..

எங்கிருந்து தொடங்கியது
உனது அழிவின்
அகரம்..?

கடைசி நிமிடங்களில்
வாழ்வின் மீதான அதீத விருப்புக்களை
எப்படி துடைத்தழித்தாய்

கண்மணீ...?

ஆத்மார்த்தமாய்
வலித்து செல்லும்
ஒருபெரிய நெருடலின் பின்னான
வலி..
எப்போதும் இடித்து கொண்டிருக்கிறது..!!

கிருசாந்தி முதல்
உன் கடைசி எழுத்து வரை
நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறோம்

சலனங்களேதுமற்று....!!

​(இலங்கையில் அண்மையில் (2015) கொடூரமாய் படுகொலை செய்யப்பட்ட பள்ளி மாணவி வித்யாவுக்காக....)

02.
வெறுமை
----------------

எப்போதும் முடிவதில்லை.....
இயந்திரமாய் வாழ்ந்து முடித்த பின்பும்
இதயம் நிரம்பாத
செயற்கை வாழ்வின்
வெறுமைகள்.....!

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2017-01-07 00:00
Share with others