ஓங்கி உயர்ந்த தென்னை மரம்

ஓங்கி உயர்ந்த தென்னை மரம்
பரந்து கிடக்கும் முற்றத்தில் சாக்குக்கட்டில்
அண்ணாந்து படுத்தால் வானமும்
பரந்து கிடக்கும்
இரவு
மௌனத்தை எங்கும் விதைத்திருக்கும்

நட்சத்திரம் பார்த்ததும்
பள்ளிப் படிப்பு ஞாபகம் வரும்
பழைய வாழ்க்கை அப்படியே இழையோடி
கண்கள் பனித்திருக்கும்

பக்கத்தில் நாய் முன்னங்கால்களில்
முகம் புதைத்து
கண் மூடிக் கனவு காணும்
படலை அசையும் சத்தம் கேட்டு
நிஜத்திற்குள் நானும் நாயும்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others