அப்பா ஏன் கொல்லப்பட்டார்?
---------------------------------------

ஈழப்போரின் ஆரம்பம்
இனத்தை இனமே கொல்வதில்
பலமும் வீரமும் பறைசாற்றப்பட்டது

இப்படித்தான்
நள்ளிரா வேளையில்
ஊரோடு நானும் கூடிநின்று
வேடிக்கை பார்க்க
தாயும் சகோதரியும் கதறக் கதற
எங்களின் உலகம் இழுத்துச்செல்லப்பட்டது

எங்களோடு மழையும்
மண்ணில் விழுந்து புரண்டு புரண்டு அழுதது

விடிந்தது
விடிவற்ற இரவுகளாய் மாறியது வாழ்க்கை

மீண்டும் ஊர் கூடியது
வேடிக்கை பார்த்தது
சடங்கு முடித்து
எரித்துச் சாம்பலாக்கி கடலில் கரைத்தோம்

மீண்டும் மீண்டும் நிறைய அப்பாக்கள்
கொல்லப்பட்டார்கள்
'துரோகிகள்" ஆக்கப்பட்டார்கள்
யாரும் கேள்வி கேட்கவில்லை
நான் உட்பட

இன்று
துப்பாக்கிகள் மௌனமாகிவிட்டன
கொலையாளிகள் காணாமற்போயினர்

அப்பா ஏன் கொல்ப்பட்டார்
யார் கொன்றார்கள்
கேள்விகள் தரும் வலியோடு
நகர்கிறது வாழ்க்கை

26-மாசி-2011

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-02-27 00:00

கருத்துகள்

"விடிந்தது விடிவற்ற இரவுகளாய் மாறியது வாழ்க்கை"

எத்தனை பேரின் வாழ்க்கைகள் இப்படித் தொலைந்திருக்குமோ???

நீண்ட நாட்களுக்குப் பின் உமது கவிதை தொடர்ந்தும் வார்ப்பில் எழுதுவீர் என்ற நம்பிக்கையோடு.....

ஈழத்துக் கவிஞர்களில் அதுவும் சிறப்பாக புலம்பெயர்ந்த கவிஞர்களில் இருக்கும் சிறப்பு அவர்களது தாய்நிலம் பற்றிய ஏக்கத்தை கவிதையாக வடிக்கும் போது உண்டாகும் ஒருவித கவிதை உணர்வு மொழியைக் கூட அழவைத்து விடுகிறது உங்கள் கவிதையும் அப்படித்தான் யுத்தம் தந்த அவலங்கள் ஆறஅமர இருந்து நினைக்கும் போது வலியும் ஏக்கமுமமே மிஞ்சி நிற்கிறது. இதனை உங்கள் கவிதைகளில் காணக்கூடியதாக உள்ளது.

Share with others