அனாதை..உயிர் விளக்கு..சிரிப்பு..விளக்கு
01.
அனாதை
------------
மழைப் பெய்த ஈரம்
தெருவெங்கும் சகதி
மனித சேறுகளை மிதித்துக்கொண்டு - தனது
பிய்ந்த கால்களால் பூமியைத் தாங்கி தாங்கி
நடக்கிறாள் அந்த கிழவி
யாரிடமும் கையேந்தவில்லை
எவர் முகத்தையும் நேரிட்டுப் பார்க்கவில்லை
ஊன்றிய தடியை எடுத்து
மீண்டுமொரு அடியை வைக்கவே
வானத்தையொரு முறை அண்ணாந்துப் பார்க்கிறாள்
மெல்ல மெல்ல நடக்கையில்
ஏதோ செய்யாத பாவத்திற்கு சிலுவையை
சுமந்தவளைப்போல
தன் வளைந்தமுதுகை நிமிர்த்தி நிமிர்த்தி சாய்க்கிறாள்
இடையிடையே
தரையில் தெரியும் ஈரத்தின் மீது
உருவமின்றி நெளிந்தாடும் தன்
மிச்சமுள்ள நாட்களின் வெறுமையை முறைத்தபடி
நிற்காமல் நடக்கிறாள் அவள்..
யாரவள்?
இப்படியே அவள் எங்கே போவாள் ?
எப்படியுமிந்த சமூகத்தில்
யாரோ ஒருவனுக்கு அவள் தாய்
யாருக்கோ மனைவியானவள்
எந்த பாவிக்கோ மகள்;
என்றாலும்
அவளைப் பார்த்தாலே தெரிகிறது
அவளொன்றும் பிச்சைக்காரியில்லை
பாவமவள், பிச்சைக்காரி கூட இல்லை!!
02.
உயிர் விளக்கு
----------------
மரணத்தை தொடும்
வலியோ பயமோ தெரியுமா உங்களுக்கு..?
அந்த பயத்தின் நச்சு நிமிடங்களுள்
எத்தனை முகத்தை
நினைத்துக்கொள்ள முடியுமென்று எண்ணுகிறீர்கள் ?
செய்த நல்லதும் கெட்டதுமெல்லாம்
பயமுறுத்தும் தருணத்தைவிட
அந்நேரத்தில்
உயிர்த்திருப்பது அப்படியொரு கொடிது
நிறையப்பேரைப் போல
நானுமப்படி
சில சமயங்களில்
உயிர்த்துக் கிடக்கிறேன்
அப்போது வலி' அப்படி வலிக்கிறது
பயம்' ஓடும் ரத்தமெல்லாம் பரவுகிறது
வலிக்க வலிக்க
உடன் இருப்போரை நினைப்பேன் - அது
இன்னும் வலிக்கும்
ச்ச என்ன இது வலியென்றுப்
பிடுங்கி ஓரமெறிந்துவிட்டு
உடனிருப்போருக்காய் அமர்ந்துக் கொள்கிறேன்
இப்படி நான் பிடுங்கி பிடுங்கிப் போட்ட
எனது வலிக்குள் இன்னும்
ஆயிரம் உயிர் விளக்குகள் எரியும்
ஒரேயொரு எனது
இருளும் பொழுதிற்குள்
ஆயிரம் விடியல்கள் விடியும்
விடியலில் எரியும் விளக்கொன்று
அதன்பின் எனக்காகவும்தான்
எரிந்துப் போகட்டுமே போ..
03.
சிரிப்பு
------------
பாவம்
புண்ணியம்
ச்ச ச்ச ஒரு மண்ணுமில்லை,
இந்த நொடி கிடைக்குமா
கொஞ்சம் சிரித்துக்கொள்ளலாமென்று
ஏங்கும் பொழுதுகளைத் தேடிவையுங்கள்..
யாருக்கும்
வலிக்காமல் சிரிக்க முடியுமா
சிரித்துக்கொள்ளுங்கள்..
மரணத்தை மிட்டாயாக்கிக் கொள்ளும்
சிரிப்பு தான்
வாழ்வின் பரிசு
சிரிப்பை பரிசளியுங்கள்
சிரிப்பு புரிவதற்கே
வயது நூறைக் கேட்கும் பணநோய் வேண்டாம்
அந்த நோய்
மிக கொடிது
பணம் பெரிய விசம்..
பணமென்பது காலணியைப் போல
வாசலில் கிடக்கட்டும்
அவசியமெனில் அணிந்துக் கொள்வோம்
அதை யாரும் எடுத்துவைத்துக்கொள்ள
மாட்டார்கள்
முட்டாள்கள் பதுக்கிவைக்கலாம்
பதுக்கிக் கொள்ளட்டும்
அவர்களை விட்டுவிடுங்கள்
அவர்கள் சிரிப்பால் சபிக்கப் பட்டவர்களாக
இருக்கலாம்
நீங்கள் சிரித்துக்கொண்டேயிருங்கள்
இருப்போரை சிரிக்கவையுங்கள்..
சிரிப்புதான்
பிறப்பின் பரிசு..
04.
விளக்கு
------------
உள்ளே
ஒரு விளக்கு எரிவது
தெரிகிறது..
இப்போதெல்லாம்
அந்த விளக்கு இங்குமங்குமாய்
அசைகிறது
சட்டென
அணைந்துவிடுமோ
என்றொரு பயம்கூடஎனக்கு
பயத்தை அகற்றி
இங்கொன்றுமாய்
அங்கொன்றுமாய் வந்து சில கைகள்
விளக்கை மூடிக்கொள்கின்றன
மூடிய கைகளின் அன்பில்
அணையாது எரிகிறது
அந்த விளக்கு
அது எரியும்
எரியும்
யாரும் கல்லெறிந்து விடாதவரை
அது எரியும்..
அதற்குப் பெயர் நான்!!
Arumai...!!!rnAnaathai, uyir vilakku, Vilakku kavithaikal miga arumai..!!