இரத்தம் சொட்டச் சொட்ட நனைந்த மண்.. கட்டிலை உடைத்துவிடேன் காமம்

01.
இரத்தம் சொட்டச் சொட்ட நனைந்த மண்
----------------------------------------------
ஹிந்து முஸ்லிம் சண்டை வரலாம்
ஏழை பணக்காரன் முரண் இருக்கலாம்
எழுதப் படிக்காதோர் கூடிப் போகலாம்
எய்ட்ஸ் விகிதாச்சாரம் கூட எகுறிவிடாலம்;

எங்களுக்கு வரும் நீரை வழிமறிக்கலாம்
கிடைக்கும் மின்சாரத்தை கொத்தாகப் பறிக்கலாம்
வளர்ச்சி நிதியை விருப்பத்திற்குக் குறைக்கலாம்
தமிழரின் போராட்டமெனில் தீவிரவாத முத்திரை குத்தலாம்;

பட்டினியில் ஏழைகள் சாகலாம்
பணத்தின்மீதேறி தனிமனிதன் படுத்துறங்கலாம்
லஞ்சத்தை எல்லோருமே வஞ்சமின்றி கேட்கலாம்
மருத்துவம் கல்விக்கூடம் கூட வருமனங்கருதித் திறக்கலாம்

பூகம்பம் வரலாம்
பகையாளி பக்கத்திலிருந்தே போர் தொடுக்கலாம்
சுனாமியோ பெரும்புயலோ திடீரென வீசலாம்; பக்கத்து மாநிலம் கூட
சிரித்துக் கொண்டே அரசியல் பள்ளம் வெட்டலாம்;

விழிப்புணர்வுக் கூட்டத்தை காவலாளிகளே நிறுத்தலாம்
தமிழை அறிந்தே பின்னுக்குத் தள்ளலாம்
ஆபத்தோ அணு உலையோ தமிழகத்தில் திறக்காலாம்
ஏன் பாராளுமன்றத்தில் கூட பாரபட்சத்தைக் காட்டலாம்;

எதுவாயினும் எங்கள் கொடி பறக்கும்
அது இந்தியக் கொடியாகவே இருக்கும்..

02.
கட்டிலை உடைத்துவிடேன் காமம்
-----------------------------------------
விழித்திரைக் கிழித்து
இதயம் கெடுக்குதே காமம்,
பல விளக்குகள் அணைத்து
இருட்டினுள் அடைக்குதே காமம்;

மனத்திரை அகற்றி
மனிதரை நெய்யுது காமம்,
அது மிருகமாய் மாறிட
உள்நின்றுச் சிரிக்குதே காமம்;

விரகத்தில் எரிக்குது
நிர்வாணம் புசிக்குது காமம்,
நிம்மதியை அழிக்குது – தெரிந்தே
குடும்பத்தை யொழிக்குதே காமம்;

காதல் காதல் என்றெல்லாம்
பொய்யினுள் புதையுதே காமம்,
பொழுது விடியவும் அடையவும்
பெண்களைக் கொல்லுதே காமம்;

விதவையை வதைக்குது
வாழ்க்கையைத் தொலைக்குதே காமம்,
முதிர்க்கண்ணி கண்ணனென்று வாலிப
நெருப்பினால் மனிதரைக் கொல்லுதே காமம்;

பிஞ்சு வயதையும்
பார்த்துச் சிரிக்குதே காமம்,
மகளின் பச்சையுடல் பார்த்ததை
அச்சமின்றி மறக்குதே காமம்;

பசிக்குத் தின்றிட பெற்றவளைத்
தேடுமா காமம் ?
பின் பார்ப்பவளை யெல்லாம் பசிக்கு
இரையாக்கினால்பின் பூமியென்னாகுமோ, காமம்?

பத்து வயதுகூட எப்படி
பார்த்ததும் இனிக்குதோ காமம் (?)
ஐயோ பசி பசி என்பாருக்கும்
துணிந்துப் பாதகம் செய்யுதே காமம்;

ச்சீ விட்டகன்று
மானுடமொழியேன் காமம்
பெண்ணவள் மார்பினுள் வழியும்
தாய்மையது போதுமே காமம்;

மனிதரை விலங்கிலிருந்துக் கொஞ்சம்
மனிதற்கே பிரித்துக் கொடேன் காமம்,
பெண்ணுடலை போதையின்றி
இனி நடக்கவிடேன் காமம்..

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-08-29 00:00
Share with others