மனைவியென்பவள் யாதுமானவள்..அவள் சிரித்தால் அன்று பூப்பேன்

01.
மனைவியென்பவள் யாதுமானவள்
-----------------------------------------

நீயில்லாத இடம் தேடிக் குவிகிறது
வார்த்தைகள்..
உன் நினைவுகளின் அழுத்தம் அறையெங்கும்
கொல்லும் தனிமையை உடைத்தெறிகிறது கவிதை;

கவிதையின் லயம் பிடித்து
வரிகளாய்க் கோர்க்கிறேன்
உள்ளே நீயிருக்கிறாய்,
என் பசியறிந்தவளாய்
என் உறக்கத்தின் அளவறிந்தவளாய்
என் வாழ்வின் தூரம் முழுதும் உன் மயமாகியிருக்கிறாய்..

காற்று
வீட்டுச் சுவர்
உன் துணிகள்
எங்கும் தொடுகையில் உன் முகம் உன் குரல் உன் அன்பு
உன் வாசனைமுழுதும் நான் கலந்து
என் எல்லாமுமாய் நீ மட்டுமேயிருக்கிறாய்..

உன் பார்வை விடுபடுகையில்
போகமாட்டேனென்றுக் கதறியதை நானறிவேன்
போகையில் மறுக்குமுன் பாதங்களின் தவிப்பை நானறிவேன்
போய் கடைமுனையில் நின்று திரும்பிப் பார்க்கும்போதே
ஓடிவந்துவிட துடித்த மனசையும் நானறிந்து
கூடவே நான் கதறியதையும் இந்த வரிகளுக்குச்
சொல்லிவைக்கிறேன்..

இந்த வரிகள் நம் பிள்ளைகளுக்கு நம்
அன்பைச் சொல்லும்
அன்பு அவர்களையும் வளர்க்கும்
அவர்களால் வலுக்கட்டுமிந்த சமுகம்’ போய் வா
ஊர்போய் நீ திரும்பி வரும்வரை,
நீ விட்டுச்சென்ற உன் மனசாக
துடித்துக்கொண்டேயிருப்பேன் நானும்’ உனக்காய்!!

02.
அவள் சிரித்தால் அன்று பூப்பேன்
---------------------------------------
நீ வந்து வந்து செல்கிறாய் உள்ளே
பின் வராமலும் கொள்கிறா யென்னை
கால்தடம் நீ பதித்தஇதயம் பாவம்
நீ பார்க்காத இடமதில் நோகும்;

பூப்பூத்த ஒரு கணம் போலே
உள்ளே சிரிக்கசிரிக்க மலர்ந்தாய்ப் பெண்ணே
உன் கால்கொலுசு கதைகேட்கக் கேட்க
வருகையின் பூரிப்பில் உயிர்பூத்தேன் நானே;

ஒருநொடி பார்த்தாய் பார்த்தாய் - ஒரு யுகம்
தொலைத்து வீழ்ந்தேன், இனி
வரம் ஒன்று வேண்டி - அதில்
உனக்கே உனக்கேப் பிறப்பேன் பெண்ணே!!

முகமதில் தங்கமது பூசி - பள பளக்கும்
கண்கள் சிரிக்கும், கனவதிலும் ஒளியின் வெள்ளம்
உன் தேன்துளி இதழசைய சிந்தும், சொல்லாமல்
சொல்லுமுன் காதல் என் காலமதை கண்மூடி வெல்லும்;

கதைகதையாய் நீ சொல்லக் கேட்டு
என் நொடிப் பொழுதின் ஆயுள் நீளும்
நீ நகம் கடித்து வீசும் தருணம் - காதல்
தீ பிடித்து ஜென்மமது தீரும்;

கிட்டவந்து வந்து நீ போகும் வாசம்
எனை எரித்தாலும் போகாது பெண்ணே
இவன் அர்த்தம் ஒன்றென்று ஆயின் - அது
நீயே நீயே - நீயன்றியில்லை!

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-01-01 00:00
Share with others