கடவுளாகயிருங்கள் கடவுள் புரியும்...தன்னை தான் உணர்வதே ஞானம்..உடல் பெரிது உள்ளமும் பெரிது உயிர் சிறிது..
01.
கடவுளாகயிருங்கள் கடவுள் புரியும்..
-------------------------------------------
கடவுளை கைவிடுங்கள்
வெறும் பூசைக்கும்
பண்டிகைக்குமானக் கடவுளை
கொஞ்சமேனும் கைவிடுங்கள்;
கேட்டுத் தராத
கண்டும் காணாத
காட்சிக்கு அலங்கரிக்கும் கடவுள்
நமக்கு வேண்டாம் கைவிடுங்கள்;
தீயோர் குற்றம்
தெருவெல்லாம் இருக்க
நல்லோர் மனதெங்கும் நிம்மதியின்றி தவித்திருக்க
நிம்மதியாய் வீற்றிருக்கும் கடவுள்
நமக்கெதற்கு? இப்போதே கைவிடுங்கள்;
கோவிலில் கற்பழிப்பு
தேவாலையத்தில் கொலை
மசூதியில் மதச்சண்டை
உள்ளே சாமி வெளியே பிச்சை
மரணமெங்கும் அநீதி
மாசு அறுக்காதக் கடவுளிங்கே யாருக்கு வேண்டும்?
வேண்டாம் கைவிடுங்கள்;
காசு தேவை
வீடு தேவை
சொத்து தேவை
வேலை தேவை
வசதி தேவை
பொண்ணு தேவை
ஏன், அடுத்தவன் பொண்டாட்டியை காதலிச்சாக் கூட
அதுக்கும் கடவுள்தான் தேவைன்னா
பிறகெகெதற்கு கடவுள் - கண்மூடி விட்டுவிடுங்கள்;
நீங்கள் உண்டியலில் பணம் போடவும்
தலைக்கு மொட்டை இடவும்
நிம்மதிக்கு ஆடு வெட்டவும்
தன்னம்பிக்கையில் நெருப்பு மிதிக்கவும்
சீலர்கள் வணங்கும் கடவுளை
சொந்தக்காலில் மிதிப்பதைவிட - பாவம் போகட்டும்
கைவிட்டுவிடுங்கள் அந்த
சுயநலக் கடவுளை;
உங்களுக்கு முதலில்
கடவுள் புரியட்டும்,
கடவுளை காட்சியாக்கிய படி
வாழப் புரியட்டும்,
கடவுளைக் காட்டும் மதத்தின் சாரமும்
மதவழி காணத்தகும் கடவுளின் சாராம்சங்களும்
ஏதேதென்றும்
எதற்கென்றும் புரியட்டும்,
கைதொழும் மனதிற்குள்
கடவுள் யாதுமாய்
எங்கும் நிறைந்த சத்தியமாய் உள்ளதை
விருப்புவெறுப்பின்றி அறியும் வரை
கடவுளை
கைவிட்டுவிடுங்கள்;
கையேந்தியதும்
பிச்சைப்போடுவது கடவுளின்
வேலையல்ல,
பிச்சை விடுபட இச்சை அறுபட
ஒருமுகப்பட்டு உயிர்மூச்சு வழியே
உள்நின்றுப் பார்ப்பதில் -
கடவுள் ஏதென்றுப் புரியும்,
அது சமதர்மமாகப் புரியாதவரை
கைவிட்டுவுடுங்கள்
நீங்கள் சண்டைக்கும் சாட்சிக்கும்
வெறும் -
கற்களாக மட்டும் வைத்திருக்கும்
கடவுள்களை!!
02.
தன்னை தான் உணர்வதே ஞானம்..
----------------------------------------------
முதுகெலும்புகள் நிமிர்ந்திருந்தும்
முடிவுகளால் தளர்ந்தவர்கள்,
நினைத்ததைச் சாதித்தும்
நடக்காததில் நோகும் பிறப்புகள்;
ஏக்கப் பெருமூச்சினுள் வெந்துவெந்தே
நித்தம் வாழ்பவர்கள்,
என்றேனும் மாறும் வாழ்க்கைக்கு
என்றென்றும் கனாக்காணும்; ஈசல் பூச்சிகள்;
வந்தவர் போனவர் பற்றியெல்லாம்
பகடி பேசும் பழையப் போர்வாள்கள்;
அடிப்பவன் ஓங்கியடித்தால் - அதிர்ச்சியிலேயே
மூச்சைவிடும் அற்ப உயிரின் பாவப் பிராணிகள்;
எதிலெல்லாம் ஏற்றம் உண்டென
தேடித் தேடியே இருப்பதை தொலைப்பவர்கள்,
இருக்க இருக்க மேலேறி
பேராசையின் பள்ளத்தில்வீழ்ந்து தானேஒழிபவர்கள்;
குடிக்க கஞ்சு போதும்
உடுத்த ஆடை போதும் என்றிருந்திருந்தால்
அடுத்தது மகிழ்ச்சி மகிழ்ச்சி என்பதை
அறிந்தும் ஆழ்கடலை தொடாதவர்கள்;
பிடித்தது பிடிக்காதது என்று பகுத்துப் பகுத்தே
உணர்ச்சிகளைக்கூட ஏற்றயிறக்கத்துள் தள்ளியவர்கள்,
பின் தவிக்கத் தவிக்க மூச்சடக்கி
வாழ்க்கையை ஞானம்தேடியே இழப்பவர்கள்;
இருப்பது ஒரு வாழ்க்கை யென்றதே - நாம்
இருப்பதைச் சிறப்பாக வாழ்வதற்கன்றி வேறென்ன? இன்னும்
நீள்வது உண்டெனில் பிறப்புகள் நீளட்டுமே – நாம்
பெறுவதைப் பேறென்று வாழுவமே' என உணர்தலேப் பேரறிவு;
இருப்பதும் மறைவதும் இயல்பு தானே
கிடைப்பதும் தொலைப்பதும் இயல்பு தானே
பிறப்பதும் அழிவதும் கூட இயல்பு தானே,
இயல்பில் - மாற்றமும் தோற்றமுமே மாறாதது;
ஏற்றத்தை இறக்கத்தை கண்டதும் ஆடாத
கிடைத்ததும் தொலைத்ததும் சட்டென மாறாத
இருப்பதை பகிர்ந்து இருப்பதில் சிறந்து
இயல்பின் அசைவுகளை முடியக் கண்களுள் பார்த்தால் -
மூளும் நெருப்பிலிருந்து பெய்யும் மழை
வீசும் காற்றுவரை தன்னுள் அடக்கமென்று தானே தெரியும்,
அதற்கும் ஆடாத எதற்கும் அசையாத மனமது
எப்போதும் தனித்திருக்கும், ஏகத்திலும் சுகித்திருக்கும்.,
கலங்காத மனம் அறியாமை நோயின்றி
கேட்பதையெல்லாம் பெற்றுத்தரும், எதைக்
கேட்பது கேட்க மறுப்பதென்பதையும்
இயல்பிலடங்கி எண்ணம்வழியே எடுத்தியம்பும்!
எங்கும் அமைதி நிலவும், எவ்வுயிரும் சுகம் பெரும்!!
யாவருக்கும் மங்களம் மங்களமே யுண்டாகும்!!
03.
உடல் பெரிது உள்ளமும் பெரிது உயிர் சிறிது..
-------------------------------------------------
முகப்பூச்சு தடவு
வாசனைதிரவியம் வாரியிடு
வண்ண வண்ண ஆடைகள் நெய்துடுத்து
வரும் காலன் வராதவரை எப்படிவேண்டுமோ ஆடு;
பொய்சொல்
பொறாமை கொள்
புகழுக்கு அலைந்து எல்லாம் செய்
உடம்பென்னும் கோவில் அசுத்தமாக ஆடு;
புகையிலை உண்
புட்டியில் வாழ்
போதையில் புத்தியை அறு
பாதைகாட்டும் உடம்பு பழுதாகும்வரை ஆடு;
பெண்ணிற்கு ஏங்கு
பாரபட்சம் பார்
ஏற்றத் தாழ்வில் எள்ளி நகை
உடம்பின் ரசாத்தால் மனதை நஞ்சாக்கு;
அரசியல் ஆதாயம் செய்
அடுத்தவர் சொத்திற்கு ஆசைப்படு
விட்டது கிடைக்காவிட்டால் ஒரு கண்ணை எடு
ஆண்டோர் நற்போக்கை மாற்றி அமை
உடம்பை உடம்பிற்கு எதிரியாக்கு;
இடையே ஒரு சின்ன காய்ச்சல் வரும்
தலைவலிக்க உலகம் மறக்கும்
வயிறுவலி வாழ்க்கையைக் கொல்லும்
கைகால் கொஞ்சம் உடைந்தாலும் காண்பதெல்லாம்
முடமாய்த் தெரியும்-
கட்டை சாய்ந்தால் அத்தனையும் சாயும்
உடம்பென்னும் கோயில் உள்ளவரைதான் எல்லாம்
உயிர் போவதெனில் சட்டென விட்டுப் போகும்
உடல் தேவையெனில் உயிரையும் பிடித்துநிறுத்தும்
உடலைக் காத்து கொள்; உயிர் வேண்டுமெனில்!!