மரணமும்.. மூப்பும்.. மாங்காய்ச்சோறும்..

01.
மரணமும்..
-----------------
தடியூனி நடக்கும் கனவு அது
இடையே மரணம் வந்து வந்து
காலிடறிச் சிரிக்கிறது..

காதுகளில் அழுபவர்கள்
ஆயிரமாயிரம் பேர் - சற்று
காதுபொத்திக் கேட்கிறேன்; என்
மகள் அழுகிறாள்,

எட்டி உதைத்தேன் அந்தக் கனவை
ஐயோ என்று
எமன் கத்திய சப்தம்;

எவனானால் என்ன
என் மகளினி அழமாட்டாள்...

02.
மூப்பும்
------------
இரவுகளின் தனிமையில்
சன்னமாக எரியும் சிமினி விளக்கின்
வெளிச்சத்தில் - ஒரு
பழைய துணிகளை அழுத்தி நிரப்பிய
தலையனைப் போட்டு -
வாசலில் படுத்திருக்கிறேன்..

உறை துவைத்தோ
தலையனைப் பிரித்துப்போட்டு வெய்யிலில்
காயவைத்தோ பல நாட்கள்
கடந்து விட்டதன் லேசான நாற்றத்தில்
என் -
முன்புநான் திட்டியக் கடுஞ்சொற்களெல்லாம்
நிறைந்துக் கிடந்தன..

படுத்திருந்த கோரைப்புல் பாய் கூட
நைந்து பிய்ந்து
முதுகைப் போட்டு பிராண்டியெடுத்தது
அதில் வலித்துக் கொண்டிருந்தது அந்தப்
பழைய நினைவுகள்..

அவளைப்போல் வராது
அவளுக்குத் தான் தெரியும்
இப்படியெல்லாம் படுக்க எனக்குப்
பிடிக்காதென்று

முகத்தை
மஞ்சள்பூக்கப்
பார்த்துக் கொள்வாளோ இல்லையோ
தரையை
கண்ணீர்விட்டு கழுவி வைத்தவள் அவள்;

நானென்றால்
அவளுக்கு அத்தனைப் பிரியம்

என்னைப்
பெறாத மடியில் தாங்கி
பொசுக்கெனப் போகும் உயிருக்குள்
எத்தனைப் பெரிய - மனதைவிரித்துச் சுமந்த
தாயவள்..

அவளின் மஞ்சக் கயிற்றில் கூட நான்
அழுக்குப் பட்டதில்லை..

இப்போது கூட
இங்கு தான் எங்கேனும் இருப்பாள்; இந்த
அழுக்குத் தலையனையின் வாசத்துள்
ஏதேனுமெனதொரு சட்டையினுள்
அவளின் வாசமாக அவளிருப்பாள்..

ஒருவேளை..

ஒருவேளை
எனது கடுஞ் சொற்கள் உள்ளேயிருந்து
அவளுக்குக் குத்துமோ?!!

இல்லையில்லை
அதையெல்லாம்
இனி எனது கண்ணீர் துடைத்துப் போட்டுவிடும்..

03.
மாங்காய்ச்சோறும்
---------------------------

அதெப்படி
இன்றிருந்து விட்டு
நாளை இல்லாதுபோய்விடுமெனக்கு
இத்தனை ஆசைகள்.. ஏன்?

என் ஆசைகளில் ஒன்றினைக்கூட
செறிக்கவில்லையே; எனது நரை.. (?)

நடந்து நடந்துத் தீர்ந்திடாத
எனது காலடிச்சுவடுகளும்,
காலத்தைச் சொட்டியும் தீராத
வியர்வையும்,
சொல்லிமாளாத ஏக்கங்களும்
எனக்குள் இருளுள்பொதிந்த முகத்தைப்போல
மரண நிறத்தில் தெரிகிறது;

ஏதேதோ செய்து
கிழித்துவிடும் மதப்பில்
நிறைவேறாமல் நீர்த்துவிட்ட
நிறைய கனவுகள்
பணத்திற்குள்ளும்
இடத்திற்குள்ளும்
பொருளிற்குள்ளும்
பதவிக்குள்ளும் அசிங்கமாகயிருப்பது தெரிகிறது;

அவைகளையெல்லாம்
எரித்துப்போடாத மூப்பிது; அசிங்கமான
வாழ்க்கை,
நிர்வாணத்தை மூடி மூடி வைத்த
நாற்றம் கொண்ட மனசு இது;

பசி
வலி
பயம்
கோபம்
அது பிடிக்கும்
இது பிடிக்கும்
மாங்காச் சோறு ருசி..
மன்னிக்கத் தெரியாது
மதிக்க மதிக்க வாழனும்
இந்த ஜாதி அந்த மதம்.. ச்ச.. ச்ச..
என்ன மனிதனோ நான் -

எனக்காகப் பாவம்
தெருவெல்லாம் பூப்பறித்து
வழியெல்லாம் போடப்போகிறார்கள்..

ஒ பூக்களே.. பூக்களே
ஓடிவாருங்கள்..

உங்களின் காம்பறும்முன் ஒருமுறைப்
பூத்துகொள்ளுங்கள்; நான் போய்விடுகிறேன்!!
போய்விடுகிறேன்!!

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-03-23 00:00
Share with others