01.
தெய்வம் தெரிய மனிதம் தொழு..
---------------------------------------------
புண் போல மனசு முள்போல எண்ணம்
எல்லோருக்குமே குத்தும் வாழ்க்கை,
இங்கே யார்மேல் வருந்தி
யாருக்கென்னப் பயன்.. ?

ஒரு சொட்டு உண்மை
சிறுதுளி கருணை
உருகாத மனசுருக; உள்ளேப்
பேரன்பு ஊறாதோ...?

கோபத்தை முட்களுள் தொலைக்கும்
நினைக்க மனசு துடிக்கும்
மன்னிப்பில் எல்லாம் மறக்கும்
மனசெங்கும் வாராதோ... ?

அன்பிற்கே அணங்கும் உடம்பு
அடுத்தவற்கழவே கண்ணீர்
கொடுக்க உயிர்
கொஞ்சும் தீண்டலில் கொடுவாள் உடையாதோ...?

கைத்தடிபோல் பெரியோர்
ஊனியெழ பாடம்
விளங்கிக்கொள்ள வலி
வாழ்க்கை' திருத்தத்தைத் தாராதோ...?

திட்டம் விடு இயல்பு உணர்
திருப்பி அடித்தாலும்
திருத்த யோசி
திருந்தா உள்ளமும் வலிக்காதோ...?

நல்லது செய்
கெட்டதைத் தவிர்
கல்லுக்கும் புல்லுக்கும்கூட
மனதைத் திற; சமயம் சொல்படி கேளாதோ...?

மொத்தத்தில் - சுயநலம் விடு
மனிதம் கொள்
மனமாசு அறு
மறுபக்கமிருக்கும் தெய்வம்; தோல்வியை மற!!

02.
நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்..
------------------------------------------------
I.
நீ -
காற்றில் அசைபவள்
கிளையுரசி உடைபவள்
விழுந்ததும் பறப்பவள்
பயணித்துக் கொண்டேயிருப்பவள்;

நான் நின்று
நீ வருவதையும்
போவதையுமே பார்த்திருக்கிறேன்;

கணினி வழி தெரியும்
கண்களிலேயே
உயிர்திருக்கிறேன்;

வாழ்வதை அசைபோட்ட படி
உன்னையும்
நினைத்துச் சிரித்திருக்கிறேன்;

வாசலை
பசியோடு திறக்கக் கேட்காமல்
சந்திக்கவேக் கேட்டிருக்கிறேன்

நீயும் சம்மதித்தாய்
பேசினாய்
பார்க்கிறாய்
இருக்கிறாய்

நீ
இருக்கிறாய் என்பதில் மட்டுமே
உயிர்த்திருக்கிறேன்..

II.
கைதொடும்
உனதுணர்வு
மின்சாரம் கொண்டது;

பார்க்கும் தருணங்கள்
யாவும்
தவத்தை உடையது;

பேசும்
அவகாசமெல்லாம்
பாக்கியத்தைப் பொறுத்தது;

உனக்கான எல்லாமே
எனக்குத் தலைமேல்
கிரீடம் இருப்பதற்குச் சமம்!

III.
பேச்சில்
பாதி மறைக்கிறாய்,
பேசாமலே
உயிர்த்தீ அணைக்கிறாய்,

நேசத்தின்
எல்லை விரிக்கிறாய்,
நெருங்கி என்
நிஜத்தை தொலைக்கிறாய்;

காற்றில்
பொம்மையும் பூவும்
பரிசென்கிறாய்
கடவுச்சொல்லினும் இரகசியமாகிறாய்;

பேஸ்புக்
டிவிட்டர்
ஜி-பிலஸ்
எங்கு பொத்தான்களைத் தட்டினாலும் உன் முகம் தெரியும்,
தெரியாத நாளிலென் உயிர்பிரியும்..

IV.
உனக்கானச்
சொற்கள்
மௌனத்தை அணிந்தவை;

வார்த்தைகளைக் களைந்து
இதயத்தை
பார்வையால் அறுப்பவை;

காத்திருப்பிலும்
தவிப்பிலும்
நினைவுகளால் வலிப்பவை;

என்ன செய்ய
உனக்கானச் சொற்களை?

இதோ -
எழுதாமலே விட்டுவிடுகிறேன் போ..

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2014-12-31 00:00
Share with others