கைம்பெண் அவளின் காலம்..அம்மாவும் அவளும்,கூட நானும்.. கல்லும் கடவுளும்..
01.
கைம்பெண் அவளின் காலம்..
---------------------------------------
சாப்பாடென்ன சாப்பாடு
அது வெறும் நெஞ்சுக் குழிவரை
விழுங்கி விழுங்கா உன் நினைவு
அதலாம் கடந்து
கடந்து நிற்கிறது மகளே..
ஏழையின் குடிசையில்
அன்று நான் பிறந்ததே பாவம்; மிச்சத்தில்
நீயும் பிறந்தாயே..
விதவை என்றாலே
வெற்று நெற்றியில் காமம் தடவி
வயிற்றுப் பசிக்கு உடம்பு விற்று
கட்டாந்தரையில் களவு போவாளென கதவோரமெட்டிப் பார்க்க
கண்ட கழுதையெல்லாம் வந்து நிற்க'
பின்; மனிதர்களை விரட்டி விரட்டி
ஓயாத கைகொண்டு
எந்த வீட்டில் நான் உனக்கான விளக்கேற்ற மகளே ?
உனக்கு சோறூட்டி பசிதீருமோ
ஆடைகட்டி அழகு கூடுமோ
அடுத்தவர் நாக்கில் பாடாது இவ்வெளியெங்கும் படர்வாயோ
ஒரு ஆறடிப் பள்ளத்துள் -
வாழ்க்கை அர்த்தமற்றுப் போகையில் நீ
வெறுங்கட்டையென வீழ்வாயோ என
அஞ்சிய காலத்தை எனைபோல் கடந்தவர் யாருமில்லை மகளே..
நீ ஆடிப்பாடி சிரிக்கையில்
வெம்பி உள்ளே முடங்குமென்
அழுகையின் தடந்தனை நீ கூட மிதித்துக் கடந்திருப்பாய்
மீண்டுமொரு சிரிப்பிலதைத் துடைத்திருப்பாய்,
அதலாம்விட்டு' மிடுக்காய் இவளென் மகளென
துடிதுடிக்க கால்தூக்கி நிற்கும் முள்குத்தியவனைப் போல நான்
உனை தாங்கிநிற்பேன்;
பகலில் கொஞ்சம் தூங்கி
இரவில் விழித்திருப்பேன்..
விளங்கச் சொன்னால்
உன் சிரிப்பிலும் பயம் வரும்,
அதை மறைக்கும் வதைதனில்
தலைப்பின்னல் வகிடு தப்பும்,
பழைய ரிப்பன் உன் தலையிலேரும்
வாடிய பூ இருந்தால் வைத்தனுப்பிவிட்டு
வாய்ப்பொத்தி
அழுத கண்ணீர் பூத்து -
நீ வரும்வரைக் காத்திருப்பேன்..
உள்ளேக் கசப்பிருந்தும் உனை எண்ணி
இனித்துக் கொள்வேன்,
வீட்டுக்குள்ளே சிங்காரித்து - ஒரு
இரவெல்லாம் பார்த்துக் கிடப்பேன்,
விடிகாலையின் பனியில் நனைந்து
நீ பூக்குமழகில் நடுங்கிக் கிடப்பேன்,
கலைத்துப் போடும் உன் அழகில் உதிர
நீ திட்டும் வசவை சேகரிப்பேன்..
எதிரே மிதிபடும் பாதங்களுன் உடலை
கனவில் தின்னும் காலுடைப்பேன்,
வீடெல்லாம் ஒரு தீ கொளுத்தி
என் மனசெரியப் போட்டுவைப்பேன்,
எடுத்ததற்கு எல்லாம் நீ ஏச்சு என்பாய்
எழுதா விதியை
அழுது அழுது தீர்ப்பேன்..
எனக்கறுந்த தாலி முடிஞ்சி நீ வளமா
வாழ் மகளே;
கருவேல(ம்) முள்ளுதச்சி கடங்கார(ங்) கண்ணு வச்சி
உன் பதின்ம வயசைப் பறிக்காம
ஒரு கரஞ்சேர்க்கப் படும்பாடு
இந்த தனியாளு தாயிக்கு
பொட்டழிஞ்ச வலி மகளே..
சமைந்ததாய் சொல்லி சொல்லி
சுமக்கிறேன்னு தெரியாம
கடிச்சிதிண்ணும் பார்வையில கொடுநாகம் திரியுமூரு,
காசுபணம் காட்டி காட்டி
கழுத்தறுக்க பயத்தை மூட்டி
உன் கால்கொலுசின் கவிதைப் பாடி
உன் உடம்பைத் தின்னும் பய காடு..
உயிரறுக்கும் நொடிநொடிக்க
கருதரிச்சி வந்தவளே
கனவன் புல்லா(ய்) முளைத்தாலும்
என் மூச்சு தாங்கும் ஒருஉசிரே
பூவுபொட்டு இல்லாம இந்த வெள்ளை வாழ்க்கைப்
போனாபோது..
உன் நிறைந்தநெற்றி பொட்டுசிவக்க
மஞ்சள் முகமா பூத்து வாழு,
உன் புருஷன் பேரை முன்னபோட்டு
இந்த விதவைப் பேரை அழிக்கப் பாரு,
என் வெள்ளைப் புடவை கொஞ்சம் கிழித்து
நீ தொட்டுவிடா(த) தூரம் போடு..,
உன் மெட்டிஒலி சப்தத்துல -
என் மிச்ச வாழ்வில் வண்ணம் சேரு!!
02.
அம்மாவும் அவளும், கூட நானும்
-------------------------------------
அடப்போடா அது
பொம்பளைங்க சமாச்சாரமென்று
போட்டுவிட்ட வட்டத்தில் தான் ஆண்களின்
பார்வையே மாறிப் போனதோ (?)
அன்றொரு நாள் அவளுக்கு இடுப்பு வலி
அருகே இருந்துப் பார்த்துகொள்கிறேன்
உள்ளே வரும் அவள் அம்மா 'நீங்க வெளியப் போங்க
என்று என்னை அனுப்பி விட
என்னம்மா நீ வருகிறாய்
நீ போய் ஆட்டோ கூட்டி வா என்கிறாய்,
நான் ஆட்டோ கூட்டி வந்ததும்
இருவருமேறி இரு புறம் உட்கார்ந்துக்கொண்டு
என்னைப் பார்த்து -
நீ வேறு ஆட்டோவில் வா என்கிறீர்கள்,
நான் ஓடி வேறு ஆட்டோ பிடித்து
மருத்துவமனைக்கு வந்தால் - நீ இங்கேயே இரு
நாங்கள் பார்த்துக் கொள்வோமென்று சொல்லி
என்னை வெளியே நிற்கவைத்துவிட்டு
நீங்கள் மட்டும் உள்ளேப் போனீர்கள்,
குழந்தை பிறந்ததும் அழைத்து காட்டிவிட்டு
பெண்ணோ ஆணோ சொல்லிவிட்டு
சரி போ
வெளிய நில்லு குழந்தைக்கு பால் தரனும்
என்பீர்கள்,
இடையிடையே எட்டிப் பார்த்தால்
ஆம்பள புத்தி பாரு.. போ போய் அந்த பக்கம் நில்லு
என்று வைவீர்கள்,
நான் இப்படித் தான் போல் இதலாமென்று நினைத்துக்கொண்டு
வீடு வந்து
ஏதோ ஒரு தவிப்பில்
பிரிவின் ஆற்றாமையில்
கண்ணீரின் வெப்பத்தில் தவித்துபோய் -
இரவுகளைக் கடத்திவிட்டு
அப்படியே நாளிரண்டும் கடந்து
பின் - அடுத்தடுத்து அவளைப் பார்க்கவருகையில்
அவளின் பார்வையையும் அழகையும் பார்க்கையில் பூரிப்பேன்
எட்டி எட்டி அவளைப் பார்ப்பேன்
வலித்ததா? அழுதாளா? பாவமென்றெல்லாம் நினைப்பேன்
ஆனால் என் எல்லை குழந்தையைப் பார்ப்பது வரையுமேயிருக்கும்
அவளிடம் பேசிட யார்யாரிடமெனக்கு அனுமதி வேண்டுமோயெனும்
அச்சம் மேவி வெளியேறி நிற்கவேண்டியிருக்கும்,
அவளேனும் எனை அழைத்துப் பேசமாட்டாளா என்றுகூட
ஏக்கம் வரும்..
பின் -
குழந்தைக்கும் எனக்கும் அவளுக்குமான நாட்களின்
இடைவெளியில்
எல்லாம் மறந்துப் போகும்..
அடுத்த முறை பிரசவிக்கிறாள் அவள்
அருகே வந்து நிற்கிறேன் நான்,
அம்மா நீ எனைப் பார்த்து
நீ போ என்கிறாய்
நான் கெஞ்சுகிறேன்
அவளுடைய அம்மா உள்ளே நீங்கள் நின்றால்
நாங்கள் எப்படி நிற்பது என்றாள்
மருத்துவச்சி தெய்வம்; நீங்கள் வெளியே போயிடுங்கள்
கணவர் நிற்கட்டும் என்கிறார் உங்களைப் பார்த்து
எப்படியோ போவென
முனகிக் கொண்டே நீங்கள் வெளியேப் போக
நான் அவளின் வலி சகித்து
உயிர் தாங்கி நின்றேன் அவளுக்கருகிலேயே..
அறுத்த இடம் மருந்திட்டு
குளிக்க தோள் கொடுத்து தாங்கிநின்று
கால்கழுவ மனமுவந்து கழுவி
நான் பெறாத மகளைப் போல அவளைப்
பார்த்துக் கொண்டேன்..
அவள் பார்க்கும் பார்வையின் நன்றியுணர்வின்
நெடுகிலும்
எங்களின் ஆயுளுக்குமான வேர்கள்
நிரம்பிக் கிடந்தன..
இடுப்பு மடிந்து அவளுக்கு வலிக்கையில்
எங்களின் இரண்டுக் கண்களிலும்
செர்ந்தே
அவளுக்கான கண்ணீர் சொட்டின..
காம்பு வெடித்து மார்பு வலிக்கையில்
மருந்திட மட்டுமே
கைகள் ஏங்கின,
குருதி பொங்கி கால்வழி வழிய
ஐயோ செப்டிக் ஆச்சோ என மருத்துவச்சி தேடியே
கண்கள் அலைந்தன
எழுகையில் தடுமாறி
மெல்ல நிமிர்ந்து அமர்ந்து
காலூன்றி நடக்க எத்தனிக்க 'தைய்யலிட்ட இடம் வலிக்குமா
சுருக்குனு குத்துமோ யென எனக்கே
முதலில் குத்தி மனசு வலித்தது..
உறவைப் புரிந்து
எங்களை உயிரில் புதைத்துக்கொண்ட அந்த நாட்கள்
இன்றும் எங்களுக்குப் பிரிந்தொரு நாளிருந்தாலும்
உள்ளே
வலிக்க வலிக்க அன்பை விளைத்தன
அவளோடு மட்டுமா நின்றுப் போனது
அந்த நாட்களின் அசைவுகள்?
இல்லையே;
குழந்தை அசைவை ரசித்து
அவளுக்கு அசைவில் வலிக்காமல் அமர்ந்து
வந்தோருக்கு வணக்கம் கூறி
ஒரு வாழ்க்கையின் தவத்தை
கணவனாய் மனைவியாய் நாங்கள் அனுபவித்ததே
அந்த பிரசவ நாட்களில் தானே..
உண்மையில் அது ஒரு போதிமரத்து நிழற்கூடம்
அங்கே ஆண்களே நிச்சயம் இருங்கள் - ஏனெனில்
அன்றெல்லாம் -
எங்களுக்கான காமம் எங்களிடம் இல்லவேயில்லை
நட்பில் நிர்வாணம் அடைகொண்டுவிட்டது
அவள் அவிழ்த்துப் போட்ட ஆடைகளை சுருட்டி
ஒரு தாயன்பு துவைத்துக் கொண்டது
அவள் கால் கை தெரிந்த இடமெல்லாம்
என்றோ சேர்ந்திருந்த நன்றிகளில் நீர்த்துப் போய் கிடந்தது
விலகிய புடவையின் ஓரமும்
அவிழ்ந்த பாவாடையின் நாடாக்களும்
பச்சை உதிர்த்து பூட்டிக்கொள்ள மட்டுமே கைகளை அழைத்தன
படுக்கையில் அவள் மேலே படுத்திருக்க
அவள் தூங்கும் நிம்மதியில் நான் கீழே தரையில் படுத்து
இரவுகளை வெளுத்திருந்தேன்
இருட்டில் அசந்து கண்மூடி படாரென
குழந்தை கத்துச்சோ
அவளுக்குத் தூக்கம் கெடுமோ என்றெண்ணி
விழிக்கையில்
அவள் என்னையே பார்த்துக் கொண்டு படுத்திருந்த தருணம்
தருணம்தான்,
உண்மையில்
அன்பில் அவள் அவன் அற்றுபோய்
நாங்கள் நாங்களாக இருந்தோமன்று...
எங்கள் பிள்ளையின் பிரசவம்
அந்த நாட்களில் தான்
எங்களையும் எங்களுக்கேப் பெற்றுத்தந்தது என்பதை மறுப்பதற்கில்லை!!
03.
கல்லும் கடவுளும்..
---------------------------
மூடிய கண்களின் ஆழத்தில்
பளிச்செனத் தெரிகிறதந்த
வெளிச்சம்;
வெளிச்சத்தை
உதறிப் போட்டு எழுந்தேன்
கடவுள் கீழே கிடந்தார்!!
பாவம் கடவுளென தூக்க
நினைத்தேன் -
விழுந்தவர்கள் பலர் நினைவில் வர
விழுந்துக் கிடவென்று விட்டுவிட்டேன்
உன் கோபம் நியாயம் தான்
உன்னை இப்படி படைத்தது
என் குற்றம் தானே என்றார் கடவுள்
உளறாதே நிறுத்து
உன்னை
இல்லையென்று எண்ணிதான் வணங்கினேன்
இருக்கிறாய் என்று தெரிந்திருந்தால் என்
உறவுகளைப் புதைத்த குழியில் உன்னையும் புதைத்திருப்பேனென்றேன்
கடவுள் வருத்தப் பட்டார்
அந்த குழிகளிலிருந்து நிறைய பேர் பிறப்பர்
உறுதி என்றார்
அப்படியா
பெரிய ஞானவாக்கு தருவதாக நினைப்பா
எழுந்து போ' அதலாம் எங்களுக்குத் தெரியுமென்றேன்
உண்மையாகவே எழுந்துப் போய்விடவா
பிறகு வருத்தப்பட மாட்டாயே என்றார்
நிறைய பட்டுவிட்டோம்
அதில்
இதுவும் ஒன்றாக இருக்கும் போ என்றேன்
உடம்பு சற்று குலுங்கி
கீழே சரிந்துப் போனேன்
ஐயோ என்னாச்சு என்று என்
மனைவி வந்து தூக்கி அமர்த்துகிறார்
கத்தி பதறி எல்லோரையும் அழைக்கிறாள்
குடும்பமே சூழ்ந்து நின்று
கத்தி அலறியது கீழே சரிந்த எனைப் பார்த்து
நன்றாகத் தான் இருந்தார் என்கிறார்கள்
தியானம் செய்து கொண்டிருந்தேன்
அப்படியே சரிந்துவிட்டேன் என்கிறார்கள்
கைகால் ஆட்டிப் பார்த்து கண்ணிமை நீக்கிப் பார்த்து
இறந்துவிட்டேன் என்கிறார்கள்
என் பிள்ளைகள் கத்தி கதறி
அப்பா அப்பா எங்களைப் பாருப்பா என்று
அழுகிறது -
நான் கடவுளே என்னைக் காப்பாத்திவிடேன் என்றேன்
கடவுள் தெரிந்தார் எதிரே
சட்டென -
உடல் துடித்து அசைந்து
கண்களைத் திறக்க' அப்பா அப்பா உங்களைப் பார்க்க
யாரோ வந்திருக்காங்க என்றான் என் மகன்
மனைவி ஆமாங்க எப்போதோ வந்தார் பாவம்
அதோ வாசல் ல அமரவைத்திருக்கேன் பாருங்க' என்றாள்
சுற்றி சுற்றி பார்த்தேன் நான்
யாரும் என்னைச் சுற்றி அழவோ
கத்தவோ கதறவோ யில்லை
அத்தனைக் கூட்டமும் வீட்டிலில்லை
எழுந்து சென்று
வாசலில் எதிரேப் பார்த்து அமர்ந்திருந்தவரை வணங்கி
ஐயா வாங்க
வணக்கம் என்றேன்
அவர் வணக்கம் சொல்லிவிட்டு
தன்னை ஒரு கடவுள் மறுப்புக் கொள்கை உள்ளவராக
அறிமுகப் படுத்திக் கொண்டார்
இன்று மாலை இந்த ஊரில் ஒரு கூட்டம் வைத்துள்ளோம்
தாங்களும் கலந்துக் கொள்ளவேண்டும்
கடவுள் பற்றி பேசவேண்டும் என்றார்
நான் புன்னகைத்து விடை தந்தேன்
கடவுளைப் பற்றிப் பேச வேகமாக
மாலைக்கு முன்நேரமே புறப்பட்டுப் போனேன்
அங்கே எனைத்தாக்கும் எதிர்வினைகள்
நிறைய இருந்தன
எல்லோரும் கடவுள் பற்றி நிறைய இழிவாகப் பேசினர்
கடவுள் ஒரு மூலையில் நின்றுக்கொண்டு
நீ போய் பேசு என்றார்
நான் மேடையேறி கடவுள்களுக்கு வணக்கம் என்றேன்
எல்லோரும் கைதட்டினார்கள்
எல்லாம் குற்றம் குறைகளுக்கும்
காரணம் நாம் தான் பிறகு எதற்கு
கடவுளையே குறை சொல்லிக் காலத்தைப் போக்குவானேன்
மனிதரைப் பற்றி பேசுவோம்
மனிதர் புரிந்தால் கடவுளும் புரியுமென்றேன்
இல்லாத கடவுள் ஏன் புரியவேண்டும்?
மேலும் கடவுளை உண்டென்று பேசினால் முட்டைப் பறக்குமென்றார்
கூட்டத்தில் ஒருவர் எழுந்து
நான் திரும்பி கடவுளைப் பார்க்க
கடவுள் எனைப் பார்த்து பேசு பேசு தயங்காதே என்றார்
எத்தனை முட்டை அடிப்பீர்கள்?
இன்னும் எத்தனை கொலை விழும்?
எவ்வளவு நாளிற்கு இன்னுமிந்த இருக்கு இல்லை போராட்டம்,
இதற்கு முற்றுப் புள்ளியே கிடையாதா?
ஏனில்லை கோவிலையும் சிலைகளையும் உடைத்துப் போடுங்கள்
போராட்டம் முற்றுபெரும்,
தங்கத்தையும் வைரத்தையும் எடுத்து
தாலி செய்யுங்கள்
முதிர்கன்னிகள் எண்ணிக்கை குறையும்,
கோவிலிடத்தில் வீடும் பள்ளிக்கூடமும் கட்டுங்கள்
ஏழையின் கண்ணீர் காயும்,
இறைஞ்சி நின்ற நேரத்தில்
இன்னும் நல்லது கெட்டதைப் படியுங்கள் அறிவு வளரும்,
அதைவிட்டுவிட்டு மனிதராய் பிறந்து கடவுளில் தொலைவதா? மிக
நன்றாக கேட்டார் என்னை அழைக்க வீடுவந்த
அந்த பெரியவர்
என் கவலை கடவுள் பெயரில்
மனிதரைக் கொள்வதில் மட்டுமே இருந்தது
சரி கடவுள் போகட்டும்
கடவுள் இல்லை என்போர் கையை உயர்த்துங்கள் என்றேன்
அந்த அக்கூட்டத்தில் பாதிக்கும் மேல்
கையுயர்த்தினர்;
சரி இப்போ கடவுள் இருக்கு என்பவர்கள்
கை தூக்குங்கள் என்றேன்
அந்த கூட்டம் கடந்து
அந்த ஊரில் இருந்த அத்தனைப் பெரும் கை தூக்கினர்
பார்த்தீர்களா?
நீங்கள் உடைப்பது வெறும் கோவில் அல்ல
இத்தனைப் பேரின் மனசு
நீங்கள் எதிர்ப்பது வெறும் கடவுளின் சிலைகளையல்ல
இவர்களின் நம்பிக்கையை'
கடவுள் தூர நின்று வெகு ஜோராக கைதட்டினார்
எல்லோரும் திரும்பி
சப்தம் வரும் திசை நோக்கிப் பார்க்க
கடவுள் நின்றிருந்த இடம் அவர்களுக்கு வெற்றிடமாகவே தெரிந்தது
நானாகப் பேசத் துவங்கினேன்
கடவுள் நமக்கு ஒரு பொருட்டல்ல
நன்மை தீமைகளை ஆராய்வோம்
அதை யார் மனதும் நோகாமல் எடுத்துச் சொல்வோம்
இருக்கு என்பவர்களுக்கு தெரியும் கடவுள் தெரிந்துப் போகட்டுமே
இல்லை என்போருக்கு தெரியாத கடவுள்
எங்கேனும் மறைந்து நின்றுக் கொள்ளட்டுமே என்றேன்
கடவுள் மீண்டும் கைதட்டினார்
நான் கடவுளிருக்கும் திசை நோக்கி
வணங்கிக் கொண்டேன்
என்ன என்ன நடக்கிறது ஏய் வீசுடா முட்டையை
என்றொரு கும்பல் எழுந்திருக்க
நான் உங்களைத் தான் வணங்கினேன்
என்றேன்
எங்களையா?
ஆம் உங்களுக்குள் இருக்கும் கடவுளை என்றேன்
இல்லை இவன் ஏதோ குழப்புறான்
நீ கீழிறங்கு
பேசினது போதும் போ' என்றார்கள்
ஆம் இறங்கத் தான் போகிறேன்
இறங்கும் முன் ஒன்றைக் கேளுங்கள்; உங்கள் கோபம் கடவுளின்
மீது வேண்டாம்,
கடவுள் உண்டென்று நம்பியே வளர்ந்துவிட்ட
மனிதர்களின் மனதை நசுக்குவதில் வேண்டாம்,
அவர்களின் நம்பிக்கையை விட்டுவிட்டு குறைகளை
இதுவன்று மட்டும்
அக்கறை உண்டெனில் எடுத்துக் காட்டுங்கள்,
மூடபழக்கவழக்கத்தின் கொடூர தீவினையை
முன்வைத்து
மறுக்கக் கோருங்கள்' நான் பேசிக்கொண்டிருக்கும் போதே
ஒருத்தர் எழுந்தார்
வேறென்ன செய்கிறோம் நாங்கள் ?
இல்லாத கடவுளை உண்டென்று நம்புவது
மூடத்தனம் இல்லையா?
அதைத் தானே வேண்டாம் என்கிறோம்?
மிகக் கோபமாக
கேள்வி எழுப்பினார் அவர்
பொறுங்கள் பொறுங்கள்
கடவுளே இல்லை என்று எண்ணிக் கொண்ட
உங்கள் மனசு
இருக்கு என்று நம்பி வாழ்வோருக்கு வேண்டாமா?
முதலில் கடவுளை நம்புவோர்
மூடர் என்பதை விடுங்கள்
முட்டாளை கூட முட்டாள் என்றால் வலிக்கும்
அது முதலில் அவரவர் உணர்வென்று உணருங்கள்
இதிலென்ன பெரிய உலக சீர்திருத்தம் வேண்டும்?
சீர்திருத்தம் செய்யத் தக்க இடங்கள் நிறைய உண்டு
அதை செய்வோம்,
நமது கோபத்தை
அப்பாவி மக்களின் நம்பிக்கையின் மீது செலுத்தி
மனவருத்தத்தை உண்டாக்குவதை விட
கடவுள் உண்டென்றும் இல்லை என்றும் செய்யும்
அரசியலின்மீது தொடுப்போம்,
மூடதனத்தின் மூலதனமே சுயநலம் தான் இல்லையா?
அந்த சுயநலம் அறுங்கள்
சரி தவறு புரிந்து நன்மைக்கு தோள் கொடுங்கள்
கடவுள் எங்கேனும் இருந்துவிட்டுப் போகட்டும்..
நாம் மனிதராக மட்டும் வாழ முயற்சிப்போம் என்று சொல்லிவிட்டு
இறங்கி கீழே நடந்தேன்
கடவுள் என் பின்னாலேயே வந்தார்
நான் அவரைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை
நில் எங்கேப் போகிறாய்
நானும் வரேன் நில் என்றார்
நான் இல்லையில்லை
எனக்கு வேறு வேலையுண்டு நான் போகிறேனென்றேன்
எங்கேப் போகிறாய் இத்தனை அவசரமாக
சற்று நில் என்றார் கடவுள்
வேறெங்கு போவது, இது என் தியானிக்கும் நேரம்
என் மனைவிவேறு இன்றைக்கு முழுக்க விரதம்
எனக்கு ஏக வேலை உண்டு
உன்னைமாதிரியா நீ தான் வெறுமனே
கண்மூடிக் கிடக்கிறாய் நானில்லை என்று சொல்லிவிட்டு
அங்கிருந்து வேகமாக நடந்தேன்
கடவுள் சிரித்துக் கொண்டே அங்கேயே
நின்றுக் கொண்டார்..
கடவுள் கூப்பிடுந் தூரத்தில் இருந்தும்
என் பயணம் அவரைவிட்டு விலகி
கல்லுக்கு பூஜை செய்வதிலேயே இருந்தது..