என் நம்பிக்கையும், உறங்கா இரவின் கனவுகளும்...ஒன்று சேர்; ஏனென்று கேள்; எட்டி சட்டை பிடி

01.
என் நம்பிக்கையும், உறங்கா இரவின் கனவுகளும்
-------------------------------------------------

ஒரு பேசிடாத இரவின்
மௌனத்தில்
அடங்கா உணர்வின்
நெருப்பிற்கு மேலமர்ந்து
எதற்கு சாட்சி சொல்லிட இந்தப் போராட்டமோ?!!

மூடி இறுகும் கண்களின்
இமை விலக்கி
கடக்கும் பொழுதின் மடிப்புகளுள்
கரையும் உயிரின் சொட்டொன்றில்
விற்காத புத்தக அடுக்கின் பயத்தை
மீண்டும் மீண்டும் எழுத்தாக்கி
அதற்குள்ளேயே என்னையும் சேமிக்கிறேன்;

பல்துலக்குகையில்
பலர் தினமும் கேட்கும்
செய்தியாக இல்லாவிட்டாலும்
என்றோ -
உறங்கச் செல்கையில் வாசித்துப் படுக்கும்
யாரோ ஒருவரின் ஓரிரு பக்கம்தான்
என் உறங்கா இரவுகளின்
காரணப் புள்ளியென்று
இந்த இரவின்
இடை விலகா இருள் முழுதும்
கொட்டையெழுத்தில் பதுக்கிவைக்கிறேன்;

இருந்தும்,

இரவிடம்
சிபாரிசு கேட்காத மனப்போக்கில்
காலத்திற்கான விடியலை
தேடித்தேடி வார்த்தைகளுக்குள் சிக்கிக் கொண்ட
அறிவாகவே -
நிறைந்துக் கொள்கிறதுயென் முயற்சியும்
நம்பிக்கையும்;

தெருவின் தூசு பறக்கும்
வண்டிப் புகையின்
கரிந்த பெட்ரோல் வாசத்திற்கிடையே அமர்ந்து
புத்தகம் விற்கும் ஒரு தாத்தாவின்
அல்லது கேட்க நாதியற்ற பெண்ணின்
வயிற்றீரம் துடைக்கும்
இரண்டு இட்டிலிப் பொட்டலத்தின்
விலையைக் கொடுக்க
எத்தனை இரவினை
தூக்கமின்றி கொல்லவும் துணிகிறது அந்த
என் நம்பிக்கை;

எனினும்,

உலகம் உறங்கும்
நிசப்த பொழுதை தகர்க்கும் கொல்லியாய்
நகரும் பகலின் பொய்மையும் அநீதியும்
படுக்கையில் முள்ளாய் குத்துகையில்
மறுக்கப்படுகிறது - யென்
கனவும் உறக்கமும் என்பதை
என் எந்த வரிகளில் தேடினாலும் கிடைக்கும்;

விளக்கெரிய வெளியில் வீசப்படும்
தீக்குச்சி
தன் எறிந்த மிச்சத்தில்
உலக வெளிச்சத்தின்
கனவினை சுமந்தே கிடக்கிறதென்னும்
சாட்சியத்தின் கண்களாய் சேகரிக்கிறப் படுகிறது
என் ஒவ்வொரு இரவும் - உன்
ஒரேயொரு விடியலுக்காய்...

02.
ஒன்று சேர்; ஏனென்று கேள்; எட்டி சட்டை பிடி
-----------------------------------------------------------

ஒன்று சேர்
ஏனென்று கேள்
எட்டி சட்டைப்பிடி
இல்லை - மனிதரென்று தன்னைச்
சொல்லிக் கொள்வதையேனும்
நிறுத்து;

தன் கண்முன்
தன்னின மக்கள் இத்தனை லட்சத்திற்கு
மடிந்தும் ஒன்றுதிரண்டிடாத நாம் -

அதற்கு ஏதோ ஒரு நியாயம் கற்பித்து
நம்மை மனிதரென்று சொல்ல
நாக்கூசவில்லையோ???

கண்முன் படம் படமாய்
பிடித்துக் காட்டும் அந்நியனின் கைபிடித்தெழுந்து
அந்த கயவனுக்கெதிராய் ஒரு ஒட்டுமொத்த
குரலை கொடுத்தாலேனும் திரும்பிப் பார்க்காதா உலகநாடுகள்?
அவனின் சட்டையைப் பிடிக்காதா உலகநாடுகள்???

மூடி இருந்த கண்கள்
இன்று திறந்தேனும் இருப்பது நன்று
என்றாலும் கட்டிவைத்திருக்கும் கைகளையும்
அவிழ்த்து விடு உறவே;

என் தாயைக் கொன்ற
என் மகனை கருவறுத்த
என் மனைவியை கர்ப்பத்தில் கொன்ற
என் சகோதரியை நிர்வாணப் படுத்தியதொரு
கோபத்தை - அங்கே கடைசித் தமிழனொருவன்
சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் வரை சுமந்து நட;

ஒருவரைக் கொன்றதால்
பலரைக் கொள்ளத் தீர்ப்பளிக்கும் தேசம்
பலரைக் கொன்றவனை
ஒரு வார்த்தை கேட்காத குற்றத்தை
ஏனென்று தட்டிகேள்;

தமிழன் எனில்
தண்ணீர் தெளித்து விடப் பட்டவனா?
கேள்வி கேட்க யாருமற்றவனா?
ஏனென்றுக் கேட்க நாதியற்றவனா???
இல்லையென்று பறைசாற்று;

தெருவில் செல்கையில் ஒருவன்
இடித்துச் சென்றாலே கோபம் வரும்
இவனென் சகோதரிகளை துணியவிழ்த்து
படம் பிடித்து
எள்ளிநகைத்து
இழுத்து லாரியில் வீசுகிறான், கையை உடைக்க வேணாம்?
காரி உமிழ வேணாம்? கொன்று புதைக்க வேணாம்???

என்ன செய்தோம் நாம்?
இனி என்ன செய்வோம் நாம்?
வாய்மூடி காணொளி பார்த்து
போஸ்டர் ஒட்டி
செய்தியில் பேசி
கூட்டம்போட்டு
கண்ணீர்விட்டழுது
யாரோ ஒரு சிலர் பேசிப் பேசி
காலத்தை கடத்திவிட்டு - வரலாற்றில் நம்மை
கோழையென்று எழுதிக் கொள்வோமா?

இறந்தவரையெல்லாம்
நஞ்சு எரித்து சுட்டவன்
இருப்பவரை நயவஞ்சகத்தால் சுடும் முன்
ஒரு தீக்குரல் கொடுத்து -
தன் இருப்பினை ஒற்றுமையை
ஒட்டுமொத்தமாய் காட்டவேண்டாமா?

போர்க்குற்றவாளி போர்க்குற்றவாளியென்று அவனை
காணுமிடமெல்லாம் வார்த்தைகளால்
தோலுரிக்க வேண்டாமா?

உரிப்போம்
இனி உரிப்போமென சூளுரைப்போம்;

தமிழர் பற்றிய ஒரு அசட்டை
அவன் உயிரின் கடைசிப்
புள்ளியிலிருந்தும் ஒதுங்கிவிட ஒற்றுமைத்
தீப்பந்தமேந்தி -
அவனுக்கு ஒத்தாசை செய்யும் நாடுகளின்
மீதெறிவோம்;

கையுடைந்து
காலுடைந்து
உயிர்பயம் தெறிக்க ஐயோ ஐயோ என்று
அலறிய மக்களின் காணொளிகளை
கண்கள் சிவக்கப் பார்க்க அனைவருக்கும் காட்டுவோம்;

நடந்தது தவறு
இத்தனை அப்பாவி மக்களைக்
கொன்றது பெருங்குற்றம்
போரெனும் பேரில் நிகழ்த்தப் பட்டதொரு
படுகொலை மன்னிக்கத் தக்கதன்று; உலகின்
காதுகளில் கேட்க முரசொலி கொட்டுவோம்;

இத்தனை வருடம்
மறைமுகமாய் அழித்தான்,
இன்று வெளிப்படையாய் கொன்றான்
நாளை ?
நாளை என்று அவன் எண்ணுவதற்குள்
அவன் கண்ணில் நம் ஒற்றுமை கைவைத்துக்
குத்துவோம்;

அவன் நாடு
அவன் ஆட்சி
எதுவாகவேனும் இருந்துப் போகட்டும், அங்கே
அழிவது நம் மக்களாக நம்மினமாக இருந்தால்
ஒன்று சேர்;
ஏனென்று கேள்;
எட்டி அவன் சட்டைப் பிடி;
எழுந்து நாலு அரை விடு;
எனக்கிராத அக்கறை வேறு எவனுக்கடா இருக்குமென்று கேள்;
உலகின் மௌனத்தை வார்த்தைகளால் உடைத்து எறி;
உறங்கும் நியாயத்தை ஒற்றுமையால் வெளிக் கொண்டு வா
நீ உயிரோடிருப்பதை ஒவ்வொரு தமிழனும் நிரூபி!!!

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-10-02 00:00
Share with others