சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்.. பிணமென்றே பெயர் வைத்தேன்
01.
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்
---------------------------------------
விடுதலையென்று சொன்னாலே நெருப்பில் சுட்ட கோபம்வரும்
சுதந்திரமென்று கேட்டாலே சொத்து பறித்த பயம்வரும்
உரிமையென்று பேசினாலே விரட்டியடித்த வெள்ளையனை
திருப்பியடித்த தமிழனுக்கு ஒற்றுமை தந்தது; சுதந்திரம்!
உயிரென்று சொன்னாலே அந்நியன்னு பேராச்சு
பிணமென்று சொன்னாலே இந்தியன்னு ஊர்பேச்சு
மனிதனென்று சொன்னாலே மதிக்காத வெள்ளையனை
விரட்டியடிச்ச தமிழனுக்கு வீரம் தந்தது; சுதந்திரம்!
அடிமையாக்கி வைத்தவனை இருநூறு வருடம் தாங்கியாச்சு
உறவெல்லாம் சுட்டவனை ஒசத்தியாக்கி பார்த்தாச்சு
உடமையெல்லாம் இழந்தாலும் -
எதிர்த்துநின்ற தமிழனுக்கு துணிவு தந்தது; சுதந்திரம்
மார்தட்டி ஊரொழிச்ச கதையுண்டு - பார்த்தாச்சி
காதலிச்சும் ஊர் பிடிச்ச கதையுண்டு - பார்த்தாச்சி
யாரடிச்சு யார் மாண்டுபோயினும் - எவனடிச்சும் சாகா தமிழனுக்கு
எழுச்சிக் கவிதைகள் கொடுத்தது; சுதந்திரம்!
பெண்ணென்றால் போகமென்றே வாழ்ந்தவனும்
அடுப்பூதி சமைப்பவளுக்கு படிப்பேனெனக் கேட்டவனும்
வைப்பாட்டி வைத்திருந்தாலும் வாரிசை மட்டும் வளர்த்தவனும்
திடுக்கிட நிமிர்ந்திட்ட பெண்ணின் பலத்திற்குமாய்
சேர்த்துக் கிடைத்தது; சுதந்திரம்!
உயிருக்கெல்லாம் மண்ணென்ற விலைவைத்து
மன்னிற்கெல்லாம் ஆங்கிலத்தில் பெயர்வைத்து
ஆடைமுதல் சோறுவரை மாற்றிவிட்ட வெள்ளையனால்
மாறாத பழைய தமிழனின் மானம் தந்தது; சுதந்திரம்!
காக்கை குருவி போல் சுட்டு சுட்டு எறிந்த
வெள்ளையனுக்கு, இறக்கப் போகிறோமெனத் தெரிந்தும்
மார்பை திருப்பிக் காட்டிய தமிழனின்
தியாகத்திற்குக் கிடைத்தது; சுதந்திரம்!
ரத்தநெடி மூக்கு சுரண்டி; செத்தபிணம் செவிட்டில் அறைந்து
முடங்கிக் கிடந்த சோம்பேறி இளைஞனை
அடிமை அடிமை என்ற ஓர்சொல்
அடங்கமருத்து அடங்கமருத்துக் பெற்றது; சுதந்திரம்!
வீட்டில் உறங்ககூட ஊரான் தடுத்ததை எதிர்த்து
வீட்டில் விளைந்ததைகூட ஊரான் பறித்ததை எதிர்த்து
வீட்டில் பேசக்கூட ஊரான் மறுத்ததைஎதிர்த்து
என் வீட்டு தொழுவத்தில் எவன் மாடோ செனையானதை
எதிர்த்து எதிர்த்து எதிர்த்து கிடைத்தது சுதந்திரம்;
சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்!!
02.
பிணமென்றே பெயர் வைத்தேன்
----------------------------------------
பிணங்களின் எரியும் புகையில்
புகுகிறது பள்ளி சீருடைகள்
பிணங்களின் அழுகிய நாற்றத்தில்
மறந்தன மரண பயம்
பிணங்களின் முறிந்த உறுப்பில்
முடங்கின உயிர் பறித்த வலி
பிணங்களின் தெருவோர குவியலில்
அறுந்தன உயிரின் ஆசை
பிணங்களின் பிணமென்னும் பெயரில்
கிடக்கின்றன எம் - வீரமும் உறவுகளும்
பிணமென்றே பெயர்வைத்தேன்
வேறென்ன எம்மக்கள் -
பிணமாகிப் போகவே படைத்தாயே?
வெடித்த குண்டுகள் வீரம் பேச
உழைத்த உழைப்பெல்லாம் மண்ணாய் போக
பயமும் கதறலுமாய் பதறித் திரிந்த உடம்புகளில் -
ஈக்கள் மொய்க்க..
எலும்பு கடித்து நாய்கள் திரிய..,
உடம்பு காட்டி என் தமிழச்சிகள் கருக..,
வெட்டிசாய்த்த மரம் போல -
எம்மக்கள் வீழ்ந்து குவிந்திருப்பதை கண்டாயோ?
பற்றி எரிகிறது மனம்
வெறும் படமென்று எண்ணி
உச்சு கொட்டி போகிறது உலகம்
மறந்தோர் மறந்து
வலித்த உணர்வுகளையும் தொலைத்து
மிச்சம் மீதிக்காய் அழுது -
வெறும் வரலாற்றில் கணக்காகிப் போயினறே என்மக்கள்
வேறென்ன சொல்ல எமை -
முடிவில் -
பிணமென்றே பெயர் வைத்தேன்- அதில்
என்னையும் பூட்டிவைத்தேன்!!