உன் வரவும் என் மரணமும்..அமைதி

01.
உன் வரவும் என் மரணமும்
----------------------------------

பட்டினத்திற்குத் தொழிலுக்காய்
போன உன் வருகைக்காக
காத்துக்கிடக்கிறது பண்டிகை

பண்டிகைக்காய் வருகின்ற
உனக்கென்று என்னை முடிக்க
நிச்சயம் செய்த நாளிலிருந்து
உன் அம்மா மிகவும்
ஆதரவோடுதான் இருக்கிறாள் என்னோடு

உன்னை பிரிந்த தவிப்பில்
உன் முகம் காணும் நாளுக்காய்
தவமிருக்கும் உன் அம்மாவுக்குக்
ஒரு பட்டு சேலையோ இல்லை
உன் வசதிக்கேற்ப ஒரு
கைத்தறி புடவையோ கொண்டுவரலாம்

பண்டிகைகாய் வரும் நீ
உன் தங்கைக்காய் பாவாடைத் தாவணி
கொண்டு வரலாம்

பள்ளிக்கூடப் புத்தகப் பை
வரும் வீதிகளை
பார்த்துப் பார்த்துக் காத்திருக்கும்
உன் தம்பியின் ஏக்கம் தீர்க்கலாம்

வீட்டைத் திருத்திக்கொள்ளும்
உன் அப்பா எதிர்பார்ப்புகளுக்கு
பணம் கொண்டு வரலாம்

நண்பர்களுக்கு
வாசனை திரவியமும்
இன்னோரன்ன பொருட்களும்
கொண்டு வரலாம்

இன்னும் நீ
உன் காதலிக்கும் இரகசியமாய்
ஏதேனும் கொண்டுவரலாம்

எல்லோருக்குமான உன் வருகையில்
எனக்கு மட்டும் பகிரங்கமாக
நீ கொண்டு வருவதென்னவோ
மரணம் மட்டுமே

அத்தனைப் பேருக்கும்
பெருநாளாக நீ வரும் நாள்
வந்துவிடக்கூடாது என்பதுதான்
என் பிரார்த்தனையாய்
.
நீ வருகின்ற பண்டிகையில் நாளில்
உயிரே வந்ததாய் உணரும்
உறவுகளுக்கு ஆனந்த பந்தியாகி
நாட்டுக்கோழின்னா நாட்டுக்கோழின்னு
நா ருசித்து நீ மகிழும் நிமிஷத்தை
எண்ணிய மரண பீதியில்
அதிகாலையிலே அலறுகிறேன்

ஆனாலும் சேவல் கூவிடிச்சு என்று
எழுந்து அவரவர் கடமைகளில் மூழ்கும்
உன் குடும்பத்துக்கு மட்டுமல்ல
உனக்கும் கூட எப்படி புரியும்
பஞ்சரத்துச் சேவல் என் தவிப்பு?

02.
அமைதி
-------------

பூங்காற்றின் அரவணைப்பில் பூவிதழை மெத்தையாக்கி
பொன்னெழிலாய் பனியுறங்கும் அமைதி.
நீங்காமல் நெஞ்சமதில் நிலைத்திருக்க நாள்தோறும்
நினைக்கின்ற சுகமுமொரு அமைதி
தேங்காய்க்குள் ளிருக்கின்ற தீர்த்தத்தப் போலினிக்கும்
தெய்வீகத் தன்மையுள அமைதி
வாங்காத கடனுக்கு வட்டியுடன் முதலாக
வந்துவிடும் ஆனந்தம் அமைதி.

தூங்காமல் வதைக்கின்ற துயரத்தில் வாடுகையில்
தூரத்தே போய்நிற்கும் அமைதி
தாங்காத துயரங்கள் தனைஏந்தி வைத்தமனம்
தூர்வார ஊற்றெடுக்கும் அமைதி
ஏங்காத இதயத்தில் இதமாக பதமாக
என்றென்றும் குடியிருக்கும் அமைதி
தீங்கற்ற எண்ணத்துள் திளைக்கின்ற ஆசைக்கு
தேனாலே நீராட்டும் அமைதி.

இல்லாத பேருக்கு இருப்பதிலே ஏதேனும்
ஈவதிலே கிடைக்கின்ற அமைதி
பொல்லாத மனிதர்களின் புகழ்வாக்கின் போதையிலே
புளகாங்கிதம் கொள்ளாத அமைதி
கல்லாத பேர்களிடம் கவலையற்றுக் கிடந்தேனும்
கண்ணுறக்கம் கொடுத்துவிடும் அமைதி
சொல்லாத வார்த்தைகளின் சுகமான அர்த்தத்தில்
சுகராகம் இசைத்துவிடும் அமைதி

உனக்குள்ளே உனைத்தாங்கும் உயிர்த்தூணாய் இருக்கின்ற
உள்ளத்தின் உறுதியெனும் அமைதி
தனக்கென்றக் கொள்கைக்கு தடைபோட்டு பிறர்க்கென்று
தான்வாழச் சொல்கின்ற அமைதி
இனத்துக்கும் சனத்துக்கும் எப்போதும் போராடி
இழக்கின்ற சந்தோசம் அமைதி
எனக்கென்றும் உனக்கென்றும் எல்லாமே பொதுவானால்
இழப்பற்று இருந்துவிடும் அமைதி.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2017-01-07 00:00
Share with others