இலக்கணம் சமைக்கலாம்.. விடியல் காணாத விழிகள்
01.
இலக்கணம் சமைக்கலாம்
--------------------------------
முதலில்
எச்சில் கையால்
காக்காய் விரட்டும்
பழக்கத்தை நிறுத்திவிடு.
கஞ்சத்தனம் பற்றிய
பாடத்தை பொருள்
செலவில்லாமல்
படித்துவிடு
கடன் வாங்கி
காலம் நீட்டி
தவணை முறையில்
கொடுக்கும் பழக்கம்
வளர்த்துக்கொள்
கடன் கேட்பவனுக்கு
இருந்தாலும் இல்லை
என்று கூற
மனசாட்சியை மூடி வை
உனது வேலைக்காரர்களை
நாய்போல் நடத்த
பயிற்சி எடு.
அவர்களுக்கும் குடும்பம்
இருக்கும் என்பதை
அடியோடு மறந்து விடு
எத்தனைக்கு
குறைக்க முடியுமோ
அத்தனைக்கு
அவர்களுக்கான
சலுகைகளை குறை.
சம்பள பாக்கி வை
விடுமுறை நாட்கள்
என்பதும் வேலைக்காரர்களின்
வேலை நாட்கள் என்று
சட்டம் செய்
சுதந்திரமாய் நடக்கும்
நவீன அடிமைகள்
என்று அவர்களுக்கு
ஒரு முத்திரை குத்து.
என்னதான் லாபம்
வந்தாலும் நிறுவனம்
நஷ்டத்தில் இயங்குவதாய்
புலம்பிக்கொண்டிரு .
வாடிக்கையாளர்கள்
திருப்தியுறும் வகையில்
ஏமாற்று.
நண்பர்கள் குறை
நா கூசாமல் பொய் பேசு.
கள்ளக் கணக்கு எழுது
பிச்சைக்காரர்களை
வெள்ளிகிழமை மட்டும்
வரச்சொல்
பேருக்காக
அவ்வப்போது கொஞ்சம்
பொதுப் பணிகளில்
தலை காட்டு.
சொற்ப நிதியுதவி
செய்துவிட்டு அதிகம்
விளம்பரம் தேடிக்கொள்
வரவில் மட்டும் கண்ணாயிரு
செலவை கண்டு
எரிச்சல் படு.
மொத்தத்தில்
ஒரு நல்ல
சுயநலவாதியாயிறு
அப்போதுதான் நீ ஒரு
நல்ல முதலாளி
என்பதற்கான
இலக்கணம் சமைக்கலாம்
02.
விடியல் காணாத விழிகள்
------------------------------------
எங்கள் நிலவின்
வண்ணம் கறுப்பு
எங்களுக்கான வானவில்
தோன்றும் காலம்
அமாவாசை இருட்டு
சாணக்குழியில்
வீழ்ந்ததனால் கண்களை
மூடிக்கொண்டன
எங்கள் நட்சத்திரங்கள்
அடை மழையிலும்
கொடும புயலிலும்
அகதியாய் போனது
எங்கள் வசந்த காலம்.
சூரியனை தேடித்தேடி
காணாமல் போனது
எங்கள் கிழக்கு
பசி புசித்து கைகளால்
மானம் மறைத்து
உயிரைப் பிடித்துக்
கொண்டிருக்கின்றோம்
கோடைகளில் உலர்ந்து
சருகாக முன் ஓர் மண்
வீடு கட்டி குடிபுகுந்தோம்
கிரகபிரவேசத்துக்கு
வந்தெங்கள் சின்ன
சந்தோசங்களில் பங்கெடுத்து
ஆனந்த தாண்டவம்
ஆடிப்போனது பூகம்பம்
என்றாலும் துயரங்களின்
கரையை தாண்டிவிட
படகொன்று செய்தோம்
அதற்குள் நதியே
வற்றிப்போக
திசைகள் இழந்த
அடர்ந்த காட்டில்
தொடங்கப்படாமலேயே
முடிந்து போனது
எண்களின் பயணம்
ஆனாலும் ஆந்தைகளிடம்
கண்கள் வாங்கி
அயராது விடியலை
உற்று நோக்கினோம்
ஒரு நாள் விடியலும் வந்தது
என்னசெய்ய ..
ஆந்தையின் கண்கலாதலால்
விடியலை தரிசிக்கும்
யோகம பகலில்
எங்களுக்குத்தான்
இல்லாமல் போனது.
நண்பர் மெய்யன் நட்ராஜின் கவிதைகள் rnபடிக்கும் வாசகனால் இலகுவில் மறந்து விட rnமுடியாதபடி மாற்றுத்திறன் கொண்டவை !rnஇலகு தமிழில் அவர் எழுதும் விதம் அருமை rnவாழ்த்துகிறேன்.rnrnநான் ரோஷான் ஏ.ஜிப்ரி.rn