பலிபீடங்களில் மரணிக்கும் நியாயங்கள்.. சிதைகின்றக் கனவுகள்.. தேயிலை

01.
பலிபீடங்களில் மரணிக்கும் நியாயங்கள்
-----------------------------------------------------
நாங்கள் உழுதவயலில்
எங்களுக்காக உண்ண
பசுமையாய் ஏதுமில்லை .
எல்லாம் நீங்கள்
எடுத்தது போக
வைக்கோலும் தவிடும்தான்.

விளைந்த தென்னையில்
இளநீரும் ,தேங்காயும்
இன்னோரன்னவைகளும்
நீங்கள் எடுத்ததுபோக
கழிவுகலாய்ப்போன
பிண்ணாக்கும் சக்கைகளும்
மட்டுமே எங்கள் உணவாய்

மாடாய் உழைக்கிறோம் என
நீங்கள் சொல்லிக்கொண்டபோதும்
உங்களுக்காய் உழைத்த
எங்களுக்கும் வேதனைகள்
உங்களிலும் அதிகம்.

வாயில் நுரை தள்ள
வண்டி இழுத்தும்
வாய் ருசிக்க உண்ணாமல்
வரண்டுபோயிருக்கும்
எங்கள் கழிவிலும்
வாழ்ந்துகொண்டிருக்கும்
நீங்கள்,
ஒரு நாள் எங்களையே
கழிவாக்கி விடுகின்றீர்கள்.

எங்களுக்கும் கூட கொடுக்காமல்
உங்களுக்காக பால் கொடுத்த
எங்கள் அன்னையரின்
மடிசுரப்பை மறந்துபோகும்
நன்றி கெட்டவர்கள் அல்லவா நீங்கள்.

நீங்கள் கைவிட்ட பின்னாலும்
தெய்வம் எங்களை
கைவிடாது என்றுதான்
பிரார்த்தித்தோம் .

வாழ்தலுக்கான
எங்கள் பிரார்த்தனைகளையும்
மரணத்துக்கான
அவர்கள் பிரார்த்தனைகளையும்
ஒரே நேரத்தில் கேட்கும் இறைவன்
கசாப்புக் கடைக்கே
முன்னுரிமை வழங்கும்போது,
பலிபீடங்களில் மரணிப்பது
நாங்கள் மட்டுமல்ல
மாடுகள் எங்களது நியாயங்களும்தான்!

02.
சிதைகின்றக் கனவுகள்
------------------------------

வீட்டில் உட்கார இடமில்லை
நாற்காலிக் கேட்டு வந்திருந்தார்.
சென்றமுறை வாங்கிச் சென்றதிலிருந்து இன்னும்
எழுந்திருக்காத எங்கள் தலைவர்.

கனவுக் காற்றால்
நிரப்பப்பட்ட
எங்கள் வாழ்க்கை பந்து
விளையாடப் படுகிறது
தேர்தல் மைதானங்களில்

யார் யாரோ
உதைத்துதைத்து
விளையாடியபோதும்
காற்றுப் போகாத பந்தால்
வெற்றிக் கொண்டவர்கள்
இறுதியில் காற்றைப்
பிடுங்கிவிடும்
வரலாறுகளிலிருந்து
எழுந்திருக்க முடியாத வகையில்
சிதைந்து போவது பந்தல்ல
எங்கள் கனவுகள்

03.
தேயிலை
-------------------

பார்க்கும் கண்கள் எதற்கும் என்றும்
பசுமை வார்க்கும் தேயிலை
பார்த்து பார்த்து வளர்ப்பவன் வாழ்வில்
பசுமை வார்ப்ப தேயிலை

ஈர்க்கும் அழகை வைத்தே இருக்கும்
இயற்கை பூவனம் தேயிலை
யார்க்கும் மனதில் உற்சா கத்தை
யாசகம் போடும் தேயிலை

அடிமை கால வாழ்விற் கன்று
அடிக்கல் நாட்டிய தேயிலை
மிடியைத் தீர்க்கும் வழியை காட்ட
மறந்து போன தேயிலை.

காடாய் இருந்த மலைகள் எங்கும்
கால்கள் ஊன்றிய தேயிலை
மாடாய் உழைத்து மாண்ட பரம்பரை
மாற்றிட மறுத்த தேயிலை

நாடாய் இருக்க காடுகள் எங்கும்
நல்வழி அமைத்த தேயிலை
வீடாய் லயங்கள் என்னும் குடிசை
விதைத்து விட்டத் தேயிலை

கடலது தாண்டி இலங்கை வந்தோர்
கண்ணாய் வளர்த்த தேயிலை
உடல்வளம் என்னும் உழைப்பத னாலே
உயர்த்தி விட்ட தேயிலை

கள்ளத் தோணி என்றே அழைக்க
காரணம் ஆகியத் தேயிலை
உள்ளம் இருக்கும் ஏழை வாழ்வை
ஊமை ஆக்கியத் தேயிலை

சொல்லச் சொல்லச் சோகம் தீரா
சோதனைக் கொடுத்த தேயிலை
செல்வர் வாழ எம்மவர் இன்னும்
சிந்திடும் உதிரமே தேயிலை

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-11-25 00:00

கருத்துகள்

நல்ல எளிமையான சந்தத்தில் ஆற்றொழுக்காகச் செல்கிறது கவிதை.பாரட்டுக்கள்!rnஅன்புடன்rnஎசேக்கியல் காலளியப்பன்.

rnrnஅன்பு நண்பர் நடராஜ் rnrnஅன்னை தமிழில் அருமையான படைப்புக்களை rnபதிவிடும் , ஒவ்வொன்றும் ஆயிரம் அர்த்தங்கள் rnபொதிந்த கல்வெட்டாய் மிளிர்கிறது .rnவாழ்த்துக்கள் rnrnபழனி குமார் rnசென்னை rn​rn

Share with others