சமுத்திரம்
-----------------
முத்துக்களை பதுக்கி
முரண்பாடுகளை செதுக்கி
பத்திரப்படுத்தியிருக்கிறாய்
திருட்டுப் போகாத
திமிங்கிலங்களை
திரிய விட்டு விட்டு
ஆமைபோல் ஊமையாய்
ஆரணங்குகளின் மனதாய்
ஆழமாய் ஒரு
அழகான ஆபத்து நீ
உன் மேற்புரத்தில் கப்பல்கள்
அமர்ந்து கொண்டாலும்
உயிரோடு எங்களை
உட்பிரவேசிக்க
தடை போடும் படை
எங்கள் கொள்ளைக்காரர்களை
தவிர வேறு
எவரிடமும் எதுவும் இல்லை
மறைத்து வைக்க
ஆனால் உன்னில்
நாங்கள் தெரிந்து
கொண்டதை விடவும்
தெரியாததுகளே அதிகம்
என்றாலும் நீ
அடுத்தவர் பொருளுக்கு
ஆசைப்படாதவள்
அதனால்தான் எங்களில்
எவரை நீ உன்
வெள்ளை வேனில் இல்லையில்லை
வெள்ளை அலைகளால்
கடத்தி இழுத்துச்சென்றாலும்
பணம் கோராமல்
பிணமாக வெளியேற்றுகிறாய்
முன்போர் நாளில்
இந்த மண்ணின்
அடியடுப்பில் இயற்கை
பற்றவைத்த பிரளயத்தீயால்
நீபொங்கிய பொங்கல்
எங்களில் பலரையே
சுவைத்து விட்டது
என்றாலும் நீ
இனியொருதடவை அந்த
சுனாமி பொங்கலை
பொங்கி விடாதே
உன் பொங்கலுக்கு முன்
எங்கள் பொங்கல் எல்லாம்
புஸ்வானமாகிவிட்டபோது
இன்னும் மனதுக்குள்
பொங்கிக்கொண்டிருக்கும்
எங்கள் உறவுகள்
இனியும் பொங்குவதற்கு
பொங்கலென்று ஒன்று
இல்லாமல் போகும்
உன்னால் முடியுமானால்
கொஞ்சம் உப்பை மட்டும்
எங்கள் விழிகளுக்குள்
சேமித்துவிடு போதும்
சுகமான தண்ணீர்
இல்லாது போகும்போது
சோகமாகும் கண்ணீரின்
உப்பைக் கொண்டாவது
பொங்கிக் கொள்கிறோம்