மரணம்.. ஓய்வில்லா வேலைக்காரன்.. வீடு

01.
மரணம்
--------------

ஜீவித வாசலின்
கதவடைப்பு.

சுவாச தொழிற்சாலையின்
மூடு விழா.

வயதெல்லை இன்றி
யாவருக்கும் கிடைக்கும்
சமவுரிமை .

வாழ்க்கைத்
திரைப்படத்தின்
வணக்கம்.

இலஞ்சம் கொடுத்து
தப்பிக்க இயலா
உறுதியான தண்டனை

பின் போட முடியா
கட்டாய பரீட்சை .

துப்பாக்கிகளும்
குண்டுகளும்
அறுவடை செய்யும்
சமகால பயிர்.

கடவுள் விளையாடும்
கிரிக்கெட் விளையாட்டில்
எடுக்கப்படும்
உயிர் விக்கெட்.

நீதிபதிகளுக்கும்
வழக்கறிஞர்களும்
வாதாடி வெல்ல முடியாத
முடிவான வழக்கு.

வழித்துணைகளையும்
வாழ்க்கைத் துணைகளையும்
விழித்துணைகளையும்
விட்டு விட்டு
விதித்துணையோடு
போகின்ற தனிப் பயணம்

02.
ஓய்வில்லா வேலைக்காரன்
----------------------------------

என் மௌனம் உடைக்காமல்
செவிகளின் சவ்வுகள் கிழியும்
சத்தங்களோடு
நீங்கிக்கொண்டிருந்தன இரயில்கள்

நீண்டநேரமாய்
எனக்கான இரயில வாராத
துக்கங்களுக்குள் முடங்கிக் கிடந்தது
எனது பயணம்

மின்சார இரயில்கள்
மலிந்து விட்ட காலகட்டத்தில்
புகை கக்கி நடந்து வந்த
அநாகரீகம் பார்த்து
பிரகாசமாகின
எனது விழிச்சூரியன்கள்

எதிரே அவசர அவசரமாய்
துப்பட்டாவில்
வியர்வை ஒத்தி
ஓடோடி வந்தது நிலவு

நிலவுக்காக காத்திருந்த
நிமிஷங்களின் வேதனைகள்
மறைத்து
பனிபோல் குளிர்ந்த முகத்தோடு
நிலவை வரவேற்று
நாகரீகமாய்
கைகுலுக்கிக் கொண்டு
நடந்தபோதுதான்
நடந்தது அது.

குருதி குளித்த நிலவு
உயிரை இரயிலேற்றி
பிணமாய் கிடந்த வேளை
காக்கிகளும் கரும்பச்சைகளும்
கழுகளாய் வட்டமிட்டு
சூத்திரதாரிக்கு வலைவிரிக்க
எல்லோரின் கண்களிலும்
மண்ணை தூவிவிட்டு
அடுத்ததர்கான வலைவிரித்து
சேவையில் மும்முரமாகியிருந்தான் எமன்.

03.
வீடு
--------

மழை பெய்யும்
போதெல்லாம்
ஒழுகும் கூரையின் கீழ்
பாத்திர பண்டங்களை
பரப்பி வைத்து
முணுமுணுத்த போதும்

அடை மழை
அடிக்கும் போதெல்லாம்
ஊடுரும் வெள்ளத்தால்
பரண் மேல்
வீட்டுச் சாமான்களை
நனையாமல்
பத்திர படுத்தி
நாற்காலிகளிலும்
கட்டில்களிலும்
உட்கார்ந்தது உட்கார்ந்தது
வெள்ளம் வடிய
காத்திருந்த நாட்களிலும்

காற்றடிக்கும்
காலமெல்லாம்
மடார் மடாரென்று
சேர்த்தடிக்கும்
கூரைத்தகடு
மனசை கிழித்த
வேளைகளிலும்

திறந்து வைத்தாலும்
மூடிக் கிடந்தாலும்
காற்றுக்கு தடைபோடும்
ஜன்னல்களை
திட்டித்தீர்த்த
கோடைக்காலங்களிலும்

எந்தப்பக்கம்
அடைத்தாலும்
ஊடுருவி உள்வந்து
உடல்நடுங்க செய்யும்
குளிர்வாட்டும் மார்கழியில்
தாழ்பாள் இல்லாமல்
தள்ளாடும் கதவுக்கு
அணையாக கல்வைத்து
அழுதிருந்த நாட்களிலும்
இந்தவீட்டில்
குடியிருப்பதைவிட
மாட்டுப்பட்டியில்
இருக்கலாம் என்று
அப்பாவை
சினந்துகொண்ட நாட்களிலும்

மின்சாரமிலாமல்
குப்பி விளக்கில்
கண்விழித்து படித்து
முகம் கழுவும் வேளை
மூக்கில் வரும் கரிபார்த்து
கலங்கிய நாட்களிலும்

அடுபெரிக்கும்போது
ஈரவிறகின் புகை மண்டலம்
வீட்டை விட்டு
வெளியேற மறுத்து
அடம்பிடித்து
கண்ணீர் வரவழைத்த
நாட்களிலும்
எனக்குள் அப்போது
நரகமான என்வீடு....,

ஒரு கோர யுத்தத்தில்
குண்டு வீழ்ந்து
சிதைந்துபோனதன் பின்னர்
குடியிருக்க வந்த
வாடகை வீட்டில்....
சுவரில் சிறு ஆணி அடிக்கவும்
முற்றத்து பூச்செடியில்
ஒரு பூப்பறிக்கவும்
நுளம்புக்கு வேப்பம்
புகை பிடிக்கவும்
ஒரு நாள் தாமதித்தாலும்
வாடகை பணத்திற்காய்
கடி நாய் கவனமென்று
வாயில் பலகையில்
எழுதியிருப்பதை
ஞாபகமூட்டும் வீட்டுக்காரனிடம்
கடிபடாமால் தப்பிக்கும்
வேளைகளில்
சொர்க்கமாக தெரிகிறது இப்போது.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-03-01 00:00
Share with others