தனிமை
----------------
வாலிபத்தை தின்று தீர்த்து
வயோதிபத்தின்
நுழைவாயிலில் நின்று
வரவேற்புசெய்கிறது
தனிமை
ஞாபகச் சிறகசைத்து
அண்டங்கள் தாண்டி
பறக்கத் தொடங்கி
விட்டது அது!
நிழலின் கரம்பிடித்து
நெடுந்தூரம்
போனபின்னும்
இளைப்பாற மரம் தேடி
ஏக்கத்தில் தவிக்கத்
தொடங்கியும் விட்டது.
துயரங்களின்
சுரம் பிரித்து
துக்கங்களால்
இசையமைத்து
தோல்வியின்
பாடல்களும் பாடிக்கொள்கிறது!
இதயத்தை சுட்டெரிக்கும்
வாழ்வின் அவஸ்தைகளோடு
விடைகள் இல்லாத
கேள்விகளின் பாரத்தோடு
புன்னகை தொலைத்து
நாளையைப் பற்றிய
போராட்டங்களோடு
புறப்பட்டு போகிறது!
மௌனத்தின் புலம்பல்களோடு
மயானத்தை
தழுவத்துடித்து
ஊமையாய் ஊர்வலம்
போகிறது ஒரு
ஊதாரித் தனிமை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-03-09 00:00