குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகிவிட்டேன்

01.
குறிப்பேட்டிலிருந்து
---------------------------

எல்லாவற்றிற்கும் நாட்களுண்டு
அன்னையர் தினம், காதலர்தினம் போல
அழுவதற்கும் சிரிப்பதற்கும் கூட
தினங்களுக்கிடையில்
சிக்கிக் கிடக்கிறோம்
உறவினரின் மரணவீடொன்றில்
குமுறிக் குமுறிக் அழுதாலும்
கண்ணீர் வருவதில்லை
அது அழுவதற்குரிய நாளாயிருப்பதில்லை
நகைச்சுவையைக் கேட்டவுடன்
சிரிக்க முடிவதில்லை...
சிரிப்பதற்குரிய நாள்
மாதத்தின் இறுதிச் சனிக்கிழமை
சிரிப்புமன்றத்தில் குறிக்கப்பட்டிருக்கும்
காணாமல் போன சகோதரனைத் தேடவும்
காலம்போன கவிஞனுக்கு அஞ்சலி செய்யவும்
ஒருநாள் ஒதுக்கியிருக்கிறோம்...
உக்கிரமான கவிதைகளுக்கான நாளாகவும்
அவற்றைக் குறித்துக்கொள்ளலாம்
ஒதுக்கப்படாத நாட்களில்
எதிர்பாராமல் வந்துவிடும் நாட்கள் கூட
அன்றாடத்தைக் குலைத்துவிடுகிறது..
எரிச்சலை அள்ளி எல்லாவற்றின் மேலும் கொட்டுகிறது...
குறிப்பேட்டின் நாட்களெல்லாம்
நிகழ்ச்சிகளின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றன ....
எல்லாவற்றுக்குமொரு நாளை நானும் குறித்துவைத்திருக்கிறேன்...
எனக்கென்றொரு நாளையும் உங்களில் யாராவது குறித்து வைத்திருக்கலாம்

02.
நான் கழுதையாகிவிட்டேன்
------------------------------------

அழகாய் உடுத்தி வந்த நாட்களில்
என்னைப் பார்த்து சொன்னாய்
கழுதைக்கு சேனம் கட்டினால் குதிரையாகுமா
அவிழ்த்து விட்டு அள்ளிப்போடென்று...

அழுகிய மணமொன்றிற்கு அஞ்சி
மூக்கைப் பொத்திய நாட்களில்
மூச்சை ஆழ இழுத்து வெளிஊதி சொன்னாய்
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனையென

உழைத்து ஓய்ந்து அயர்ச்சியடைந்த நாட்களில்
உண்டுறங்க ஓர் இடம் கேட்டேன்
கழுதை புவியிலிருந்தாலென்ன ...
பாதாளத்தில் இருந்தாலென்னவென்றாய்

நீ சொல்லும் புனிதக் காதலை
நானும் கண்டடைந்து
மாலையும் கழுத்துமாய் நின்றபோது
கழுதைக் காமம் கத்தினால் தீருமென்றாய்

சந்ததிப் பெருக்கத்தில் நிலமொன்று கேட்டேன்
நிலத்திற்கு விலையாக நிறையக் கேட்டாய்
கழுதை விட்டையானாலும்
கைநிறைய வேண்டுமென்றாய்

சந்ததி சந்ததியாய் உழைக்கிறேன்
உன் சந்ததிக்கு...
அலுங்காமல் அள்ளிக்குவித்துக் கொண்டு சொல்கிறாய்
கழுதை உழுது கம்பு விழையாதென

இன்னும் நிறையச் சொல்லியிருக்கிறாய்...
கேட்டுக் கேட்டு நான் யாரென மறந்துவிட்டேன்...
காதுகள் கூட கழுதை போலாகிவிட்டது...

கழுதைச் சுமை அறியாத
உன்னைப் போலிருந்துதான் என்ன செய்ய...

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2017-01-07 00:00
Share with others