சுதந்திரம்- கம்பிகளுக்குப் பின்னால்.. புறக்கணிப்பு

01
சுதந்திரம்- கம்பிகளுக்குப் பின்னால்..
------------------------------------------
காவல் இல்லாத தோட்டங்களை
சுதந்திரமாக மேய்கின்றன
கட்டாக்காலிகள்

கொண்டாட்டமும், களிப்புமாய்
அவைகள்
காணிக்காரனின் சுதந்திரமோ
கம்பிகளுக்குப் பின்னால்

கிழக்குச் சமவெளிகள்
திகட்டிவிட்டதால்
வடக்கில் வாய் நீள்கிறது

கடைவாயூறும்
கட்டாக்காலிகளைக்
கட்டி வைக்கவோ
கல்லால் அடிக்கவோ விடாமல்
காவல் காக்கிறது இறையான்மை

ஊரான் தோட்டத்தில்
மேயும் கட்டாக்காலிகள்
காணிப் பகிர்வையும்
காவல்காரனையும்
விரும்புவதில்லை

தெற்கிலும்
தென்கிழக்கிலும்
கட்டாக்காலிகள்
கால் வைப்பதில்லை

வாலை நீட்டினால் கூட
வேட்டையாடி விடுகின்றன
சிங்கங்கள்

02.
புறக்கணிப்பு
------------------

இருண்டே
கிடந்ததென் உலகம்
உன்னைக் காணும் வரை

வெளிநாடு இல்லையென்றும்
வீண்வேலை எழுத்தென்றும்
கை பத்தா சம்பளமும்
கால்நீட்டத்
தலைமுட்டும் வீடென்றும்

எத்தனையெத்தனை
காத்திருப்பும், கைகழுவலும்

நாய் நா வடியும்
கோடையாய்
வறண்டிருந்தது வாழ்க்கை

எல்லாமுமற்று நிற்கையில்
உன்னைக் கொண்டு
என்னைப் போர்த்திக்கொண்டாய்

புறக்கணித்துக் கடந்தவர்கள்
மீண்டும் வருகிறார்கள்
வாழ்க்கையின் புறக்கணிப்பால்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-04-28 00:00
Share with others