அந்த ஒருவன்... பருவமெய்திய பின்..
வா மணப்போம் விதவை.. மனிதநேயம்
01.
அந்த ஒருவன்...
-------------------------

உன்னைப் போலவே தான்
நானும் பிரமிக்கின்றேன்

எதிர்பாரா தருணத்தில்
எப்படியோ என்னுள்
நுழைந்திருந்தாய்

இனிதாய் நகர்ந்தவென்
பொழுதுகளில் -உன்
ஒற்றைத் தலைவலியையும்
இணைத்துக் கொண்டாய்

பழகியதைப் போலவே
ஏதோ ஒரு நொடியில்
பிரிந்தும் சென்றாய்

ஏன் பழகினாய்
ஏன் பிரிந்தாய்
எதுவுமறியாமல்
அலைந்த நாட்களில் தான்
மீண்டும் வருகிறாய்
மற்றொரு காதல் மடலோடு

எப்படி ஏற்றுக் கொள்ள
நானலைந்த தெருக்களில்
காரணமறியாமல் அலையவிட்டிருக்கிறாய்
மற்றொருவனையும்

02.
பருவமெய்திய பின்
--------------------------

பருவமெய்திய பின்தான்
மாறிப் போயிருந்தது
அப்பாவிற்கும் எனக்குமான
பிடித்தல்கள்

வாசலில் வரும் போதே
வீணாவா! வா வாவெனும்
அடுத்த வீட்டு மாமாவும்
அகிலாவின் அண்ணாவும்
போலிருக்கவில்லை அப்பா

மழை வரமுன்
குடையுடனும்..
தாமதித்தால்
பேருந்து நிலையத்திலும்..

முன்னும் பின்னுமாய் திரிய
காரணம் தேவைப்படுகிறது
அப்பாவுக்கு

துக்கம் தாழாமல்
அழுத ஒருபொழுதில்
ஆறுதல் கூறுவதாய்
அங்கம் தடவுகிறான்
அகிலாவின் அண்ணா

யாருக்கும் தெரியாமல்
மொட்டைமாடிக்கு வா
நிலா பார்க்கலாமென மாமா

இப்போதெல்லாம் பிடிக்கிறது
அப்பாவை

03.
வா மணப்போம் விதவை
-----------------------------------

வேண்டு மெமக்கும்
விடுதலை யென்று
தீண்டும் வெயிலில்
பட்டினி கிடந்துபின்
ஆகாது அதுவென்று
அறியும் ஒருநாளில்
தீட்டினோம் கூராயுதம்

ஆயினும் பெரிதாய்
ஆக்கிய தொன்றில்லை
பேயினுக் கெதிராய்ப்
போர்க்கொடி தூக்கியெம்
பூவையும் பொட்டையும்
இழந்தோம் - நம்வீட்டு
பூவைக்கு பூவைப்பார் யார்

புண்ணதுவே புண்ணாக
இருக்கட்டும் நெஞ்சத்தில்
மண்ணுக்காய் இல்லாமல்
மாண்டவென் தோழர்க்காய்
வென்றே தரவேண்டும்
விரைவாக சந்ததியை
வா மணப்போம் விதவை

இறுதித் தருவாயில்
உயிர்நீத்த உடற்கெல்லாம்
சிறுதீ மூட்ட ஆளில்லை
குற்றுயிராய்க்
கிடந்த உடலேறிச்
சுகம்கண்ட காடையரின்
பண்பாட்டைப் பார்த்தே பழகு

ஆண்டாண்டு காலமாய்
ஆண்ட பூமியினை
பூண்டோடு அழித்துப்
புன்னகையைச் சீரழித்தீர்
மாண்டோ போனோம்
மறவர்நாம் - வடலிகள்
மீண்டும் வானுயரும்

04.
மனிதநேயம்
------------------

தூரப் பயணத்தில்
திடுக்கிட்டு உணர்கிறேன்
விபத்தை

மாடும், மனிதனும்
மாம்பழங்களுமாய்
கிடக்கிறது நெடுஞ்சாலை

“உச்சு”க் கொட்டியவர்கள்
ஓடிப் போய்
அள்ளிக் கொண்டனர்
“மாம்பழங்களை”

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-07-30 00:00

கருத்துகள்

உயிரின் வலிகளைrnஉண்மையாகத் தந்திருக்கின்றீர்.rnஅசைகின்ற வெளிதனில்rnகசிகின்ற எண்ணங்கள் எல்லாம்rnகரம் நீட்டிய கரங்களுக்குrnஉரமாகும்.rnதங்கள் கனவு ஒரு நாள்rnநனவாகும்...தங்கள் வார்த்தைகளும்rnவளமாகும்.

Share with others