மெல்லக் கதவுள்
மிடுக்காய் ஒளிந்தாள்
-----------------------------------

கண்டேன் அவளைக்
கடற்கரை அருகே

நின்றேன் ஒரு கணம்
நினைவுகள் இழந்து

சென்றேன் அந்தச்
செம்மொழி அருகில்

வந்தனம் என்றேன்
வாய்மொழி இல்லை

கண்டும் காணாமல்
நிற்காமல் செல்லுமிவள்
நிலவின் மகளோ

நீண்டதாய்ச் சொல்தொடுத்தும்
தீண்டாமல் செல்கிறாளே
நீரின் உறவோ

தொடர்ந்தேன் பின்னால்
தொழுதேன் கண்ணால்

அமர்ந்தேன் அந்த
அமிர்தம் அருகில்

***

தாயின் கையைத்
தட்டி எழுந்தவள்
தாமரைப் பூக்களாய்
வெட்டி மலர்ந்தாள்

“போதும் போதும்”
போகலாம் என்ற
அன்னையை முறைத்து
அருகினில் வந்தாள்

போறோம் நாங்க
நீங்களும் போங்க

இதழ்கள் பிரித்து
இருவரி உதிர்த்து
அரிவரிச் சிறுமியாய்
மறைந்தவள் போனாள்

***

சிந்தையை விட்டுச்
சிதற மறுக்கும்
மங்கையைக் கண்டு
மாதங்கள் இரண்டு

மறுபடி அவளைக்
காணும் நாள் வரை
மனதினை வதைக்கும்
கனவுகள் திரண்டு

***

தேய்பிறையோ,
வளர்பிறையோ
தெரியாத நிலவு அவள்

அடைமழையோ
இடி புயலோ
அறியாத அல்லி அவள்

***

புன்னகையின் தேவதையாய்
பூமியிலே பிறந்தவளே
என்னபிழை நான் செய்தேன்
ஏனென்னை வெறுக்கின்றாய்

காணாமல் நானிருந்தால்
கணமொன்றில் இறந்திடுவேன்
நோய்கொண்டு போகுமுன்னே
நானுன்னைக் காண வேண்டும்

***
என்
பாசமுள்ள பூமகளே

வாசலிலே கண்டவுடன்
வாங்கப்பா என்காமல்
மெல்லக் கதவுள்
மிடுக்காய் ஒளிந்து கொண்டு
அம்மா அம்மாவென
அரற்றி அழுதவளே

அச்சம் வேண்டாம்

பிச்சைக்காரனோ
பிள்ளை பிடிப்பவனோ
அச்சம் அறியாத - இளம்
ஆண்மகனோ நானில்லை

அப்பா...
நானுன் அப்பா

சீதனச் சீரழிவால்
சிதறிய நம் குடும்பம்
சீதேவி உன்னாலே
சீராக வரம் வேண்டும்

வாசலிலே கண்டவுடன்
வாங்க என்று சொல்லாமல்
மெல்லக் கதவுள்
மிடுக்காய் ஒளிந்து கொண்ட
என்
செல்ல மகளே -உன்னைச்
சீராட்ட வரம் வேண்டும்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-02-27 00:00
Share with others