கர்த்தாவே! என் வாய்க்குக் காவல் வையும்.. சோல்ஜர் சொறிநாய்

01.
கர்த்தாவே! என் வாய்க்குக் காவல் வையும்
----------------------------------------------------

கர்த்தாவே,
என் வாய்க்குக்
காவல் வையும்

என்
உதடுகளின் வாசலைக்
காத்துக்கொள்ளும்.

அவனும் நானும்
ஆணாகவே இருந்தோம்
இருந்தும்
அவன் மேன்மையானவனானான்

திருடனென்றாலும்
உமக்கு
வலப்பக்கம் வீற்றிருக்கும்
திருடனாய்
அவன் மேன்மையானவனானான்

கடைச்சரக்கா இலக்கியமென
காணுமிடமெலாம்
பேசித் திளைப்பதில்
அவன் மேன்மையானவனானான்

எனது வாயை
மிதித்தபடி
அவன் பேசிய
சுதந்திரமும் பிறப்புரிமையும்
கேட்டவர்கள் கூட
சொன்னார்கள்
அவன் மேன்மையானவனென

கலாச்சார உடையில்
வெள்ளையும் கறுப்புமான
மேன்மையானவனே

தயக்கம் வேண்டாம்
சேலையும் கலாச்சார உடைதான்
ஒருமுறை அணிந்துபார்
அழகாய்த்தானிருக்கும்

கர்த்தாவே,
என் வாய்க்குக்
காவல் வையும்

என்
உதடுகளின் வாசலைக்
காத்துக்கொள்ளும்.

02.
சோல்ஜர் சொறிநாய்
-------------------------
சொறிநாயைப் பிடித்து
“சோல்ஜர்” எனப் பெயர் வைத்து
கறியோடு சோறும்
வெறியேற அபினும்
குழைத்துண்ணக் கொடுத்து
வடக்கே போ என்றான்
வேட்டைக்கு

காவாலி சோல்ஜர்
கடைசித் தெருதாண்டி
முக்கி முணகி
மோப்பம் பிடித்தபடி
கால்தூக்கி
எல்லை வரைகின்றான்
என் வீட்டுச் சுவரில்

அடித்து விரட்ட
ஆளில்லா வீடொன்றில்
நாநீட்ட
தாகம் தணித்தவளின்
கைநக்கி
கோரைப்பல் தெரியச்
சிரித்தான்

வேட்டை நாயில்லா
வீடொன்றாய்ப் பார்த்து
கோழி இரண்டையும் -தென்னங்
குலை நான்கையும்
தேசியச் சொத்தாக்கினான்

சிதறுண்ட கால்கொண்ட
சிறுபுலியின் கதவுடைத்து
பெண்மையை அரசுடைமையாக்கினான்

காலம் பொறுமையாய்
காத்திருக்கிறது
காலம் வருவதற்காய்

03.
யுத்தசாட்சி
--------------------

மும்முறை வீழ்ந்த
என்னிறைவா
நானும் பாரம்சுமக்கின்றேன்
நீர் தாகமாயிருந்தீர்
நானோ பசித்திருக்கின்றேன்

யாருக்கெதிரான போரிலும்
முதலில் தோற்கடிக்கப்படுவது
நாங்கள் தானே

எப்படியிருக்கிறாயென
எவரும் கேட்பதில்லை
எத்தனை முறையென்றே
கேட்கிறார்கள்

உடல் கிழிந்து
உயிர் கருகிய நாட்கள்
எத்தனை என்று
தெரியவில்லை

முள்முடிகள் குத்தியதில்
முட்டிக்கால் தாண்டியும்
ஓடிக்கிடக்கிறது இரத்தம்
எத்தனை பேரென்று
எண்ணவில்லை

காடையர்கள்
பகிர்ந்துண்ட
கடைசி அப்பத்தைப் போல்
நானும் சிதறிக்கிடக்கிறேன்
எத்தனை முறையென்றும்
நினைவிலில்லை

கிழிசல் வஸ்திரங்களைக் கீழிறக்கி
மீண்டும் மேலேறுபவனை உதறித்தள்ளி
காத்திருப்போரிடம் கேட்கிறேன்
“உணவுப் பொதிகளை
வைத்திருப்போரே
உங்களில் பாக்கியவான்கள்.
அவர்களுக்கு
நான் சித்தமாயிருக்கிறேன்”

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-03-01 00:00
Share with others