காசா குழந்தையின் கடைசி வலி... பூக்களை மட்டுமே யாசிக்கிறது..

01.
காசா குழந்தையின் கடைசி வலி..
------------------------------------------

அடித்து விட்டார்கள்..!
வலிக்கிறது
வாப்பா...!!

கொத்து கொத்தாய்
குலை குலையாய்..
சந்தைக்குப் போகும்
காய்கறி மாதிரி
சிதைத்து விட்டார்கள் ...

காரணம் ஏதும் சொல்லாமலே..
கூட்டை
கலைத்து விட்டார்கள்
வாப்பா...!

புழுதி கிளப்பி விளையாடும்
என் தெருக்களிடம் சொல்லுங்கள்..!
தலை வேறாய்
துண்டுகளாக்கப்பட்ட
சியோனிசத்தின் கொடூரம் பற்றி ...

என் நண்பர்களிடம் சொல்லுங்கள்..!
துடி துடிக்க
என் தேசத்திலிருந்து
துடைத்தழிக்கப்பட்ட
துயரம் பற்றி...

என் வகுப்பறையின்
கதிரைகளிடம் சொல்லுங்கள்..!
என் கனவுகள் பறிக்கப்பட்ட
சிறகுகள் முறிக்கப்பட்ட
வரலாற்றுத் துயரம் பற்றி ...

உண்மையை மறைத்த
ஊடகங்களிடம்
உரத்து சொல்லுங்கள்..!!!
சியோனிசத்தின் வலிய கரங்களில்
உங்கள் மகன்
சுவர்க்கத்திற்கு
சென்று விட்டானென்று....

உம்மாவின்
அரவணைத்த சூடு
இன்னும் ஆறவில்லை
வாப்பா..!

இடிந்து விழுந்த நகரங்களில்
புழுதி படிந்த தெருக்களில்
தொலைந்து போன மகனின்
மைய்யித்தை
தேடி அலையும்
உம்மாவிடம் சொல்லுங்கள்..!!
அவள் ஈரல்குலை
இறக்கவில்லை என்று...

வெறுமை நிறைந்த
தொட்டிலை
வெறித்துப்பார்க்கும்
அவள் இரவுகளிடம் சொல்லுங்கள்..!
எனக்காக அழவேண்டாமென்று..

என்னை சுமந்த
கர்ப்பப்பை
வலிமை மிகுந்ததென்று
சொல்லுங்கள் வாப்பா..!!

எனக்கு தெரியும்..!
இரத்தமும் சதையும் புதையுண்ட
என் தேசம்
அங்குலம் அங்குலமாய்
மீட்கப்படும்..

குருதி நனைத்த
தாயிடம் சொல்லுங்கள்...!
என்னை புதைத்த இடத்தில்
தேசியக்கொடி
முளைக்குமென்று..

அடித்து விட்டார்கள்.!
வலிக்கிறது
வாப்பா...!!!

02.
பூக்களை மட்டுமே யாசிக்கிறது..
---------------------------------------

பூக்களை பரிசளிக்கிறது
வாழ்க்கை..

சிலநேரம்
பூக்களை பறித்தெடுக்கிறது
பதறப் பதற..

விதைகளாய் விழுந்து
பூக்களாய் மலர்கிறது
சொல்லாமல் கொள்ளாமல்...

புயலுமின்றி
மழையுமின்றி
மரங்களை சாய்த்து
மண்ணோடு மண்ணாக்குகிறது
நந்தவனத்தின் கனவுகளை..

என்றோ ஓர் நாள்
எல்லாப்பூக்களும்
உதிர்ந்து விழும்..

ஒரு கோடி துயர் விதைத்து..!

என்றாலும்
பூக்களை மட்டுமே யாசிக்கிறது..

எப்போதும்
ஆசைப்பட மட்டுமே
பழகிப்போன
மனசு...

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2015-11-04 00:00
Share with others