புள்ளியளவில் விபத்து.. ஜன்னலுக்கு வெளியே..
01.
புள்ளியளவில் விபத்து..
--------------------------------

ஒரு புள்ளியில் தொடங்குகிறது
விபத்து...

சிறகு பூட்டுவதான
அலங்கரிப்புக்கள்..
விற்பனை பொருளாகிறது
ஏதோ ஒன்று..

நிறம் பூசிய சுவர்
பேரங்களில் அரைபடும் வாக்குறுதி..
விலைபோகும் இதயம்..
அலங்கார வார்த்தைகளால் சமைகிறதென்
பல்லக்கு..

ஒற்றை சிறகோடு
ஓரமாய் உட்கார்ந்திருக்கிறது
இதயம்
"பிடிக்கவில்லை" என்ற
பிடிமானங்களை
உரைக்க முடியாதபடி..

சுமக்க முடியாத கனவுகளில்
அதிர்கிறது
அந்தப்புரம்..
நான் தூங்க விரும்பிய தொட்டில்
இதுவல்லவென்பதை எப்படியுரைப்பேன்..??

ஒரு பூவிரிவதைப்போல்
பேசாமல் பெய்யும் மழைபோல்
ஓசைகளற்றுப்போகும் மொழிகளை
என்குருவி குந்தி
கொத்திஎறியும் கனவுகள்
இப்படித்தான் தொலையுமோ... ??

02.
ஜன்னலுக்கு வெளியே..
-----------------------------

ஜன்னலுக்கு வெளியேதான்
உலகம்...
ஆனாலும்
மலைகளுக்கும்
பள்ளத்தக்குகளுக்கும் அப்பால்
தவறிப்போன கைக்குட்டையை
தேடுகிறேன்.......

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-10-23 00:00
Share with others