மின்னல் கயிறுகள்.. ஒட்டுப்பொட்டுகள்
01.
மின்னல் கயிறுகள்
--------------------------
நேற்று வரை ஒடக்கான் அடித்தவன்
இன்று நான் ஒரு ஒடக்கான்.
என்னை அடித்தது
அவள் கூரிய விழிகள்.
நாக்கில் தொட்டுக்கொண்டு
தரையில் பம்பரம் குத்தினேன்.
கயிறு என் கையில்.
இன்று நான் தலையாட்டும் பம்பரம்.
கயிறு
அவள் வளையல் ஒலிகளில்.
கோலிக்குண்டுகள் உருட்டி
எத்தனை பேர் முட்டிகள்
பெயர்த்தேன்.
இன்று
கண்ணீர் முட்டி
கனவுகள் முட்டி
அவள் நினைவுகளில் மோதி
பலத்த காயம்.
அவள்
பார்வையே விபத்து ஆகும்.
அவள்
பார்வையே "பேண்டேஜ்" போடும்.
யார் கேட்டார்கள்
பம்பரமே இல்லாமல்
பம்பரம் விடும்
"பதினாறு" வயதின்
இந்த மின்னல் கயிறுகளை?
02.
ஒட்டுப்பொட்டுகள்
--------------------------
பார்.
சுவரில் வரிசையாய்
உன் சிவப்பு பௌர்ணமிகள்.
இப்படி
என் இதயங்களை
இங்கா உலர்த்துவது?
என்னைச்சுட்டெரிக்கும் உன்
நெற்றிக்கண்களை இங்கு தான்
மாட்டி வைத்திருக்கிறாயா?
"வெள்ளைச்"சுவருக்கும் கூட
உன்னால்
சுமங்கலி பூஜை!