"பளிங்கு"கர்ப்பம்
----------------------
ஒரு கல்லிடைக்குறிச்சிக்காரனின்
"கல் பொருது இறங்கும்"
"பஃறுளி யாறு"
இந்த தாமிரபரணி ஆறு!
இந்த தாமிரபரணித்தாயின் மணிவயிறே
அந்த ஊர்க்காரர்களின்
"பளிங்கு" கர்ப்பம்!
தண்ணீரா அது!
கனவுகளின் கண்ணாடிப்பிழம்பு அது.
தினம் தினம்
குளித்து எழுந்து உயிர்த்து எழும்
நினைவுகளில் அவர்கள்
திளைத்துக்கிடக்கிறார்கள்.
இதனுள்
மேற்குமலை அடுக்கத்தின்
நடுக்கம் இருக்கும்.
அகத்தியனின் நரம்பு துடிக்கும்.
மாநாடு கூட்டாமலேயே
செம்மொழித்தமிழ்
ரத்தத்தின் சத்தம் கேட்கும்.
கவலைகளின் புண்கள் மொய்க்கும்
கலிங்கத்துப்பரணிகள் கூட....இந்த
தாமிரபரணிக்குள் கரைந்து போகும்.
இதன் கூழாங்கற்களில்
"விக்ரமாதித்யக்கவிஞன்களின்"
மைத்துளி நனைந்திருக்கும்
வாசனை மனத்துள்
மையல் மூட்டும்.
கரை தழுவிய நாணல் பூக்கள்
வெள்ளைக்கவரி வீசி
நாரைகளைக் கவர்ந்திழுக்கும்.
நண்டுகளும் கெண்டைகளும்
தாமிர பரணியின்
திவலைகள் தோறும்
கவிதைகள்
"பதிவிறக்கம்" செய்யும்.
ஆற்றோரத்துப்
புல்லின்
புல்லிய வருடல்களுக்கு
புள்ளித்தவளைகள்
புல்லரித்து ஒலி தூவும்.
அவை
மாண்டுக முனிவர்களின்
மாண்டூக்யோபநிஷதங்களாய்
இங்கே தான் மொழி பெயர்க்கும்.
சமஸ்கிருத சடலங்களுக்குள்
உயிர் பாய்ச்சும் தமிழ் மூச்சு
அந்த தாமிரபரணிக் காட்சிகளில்
பரவிக்கிடக்கின்றது!
"கயிற்றரவு"
"கடவுளும் கந்தசாமியும்"
என்று
எத்தனை எத்தனையோ
சிறுகதை ரத்தினங்களை
சோழிகுலுக்கி
பல்லாங்குழி ஆடிய
அந்த எழுத்துப்பிரம்மன்
புதுமைப்பித்தன்
பித்துபிடித்து உட்கார்ந்து கதைக்கு
பிண்டம் பிடித்து
உயிர்பூசிய துறை
தாமிரபரணியின்
சிந்துபூந்துறை அல்லவா!
கல்லிடைக்குறிச்சியின் வடகரையில்
ஊர்க்காட்டு மலை சாஸ்தாவும்
இதில்
உற்று முகம் பார்த்து
உருண்டைக்கண்ணையும்
முறுக்கு மீசையையும்
ஒப்பனை செய்து கொள்ளும்.
அம்பாசமுத்திரம் தார்ச்சாலை கூட
தாமிரபரணியின் கழுத்தை
கட்டிக்கொண்டே தான் கிடக்கும்.
அங்கு
இரட்டையாய்
மல்லாந்து கிடக்கும்
வண்டி மறிச்சான் அம்மன்கள் கூட
ஆற்றின்
நீரலைத் தாலாட்டில்
நீண்டு படுத்திருக்கும்.
ஊமை மருத மரங்கள் இன்று
கோடரிகளால் தின்னப்பட்டு
கொலைக்களமாய் காணும்
அந்த சுடுகாட்டுக்கரையெல்லாம்
மனிதனின் பேராசையை
புகைமூட்டம் போட்டுக்காட்டும்.
தாமிரபரணிக்குள்
முங்கி முங்கிக்குளித்து
தீக்குளிக்கும் போதெல்லாம்
தமிழின் நெருப்புத்தேன்
எலும்பு மஞ்ஞைக்குள்ளும்
எழுத்தாணி உழுது காட்டும்.