மெஹந்தி.. சாதிகள் வேணுமடி பாப்பா

01.
மெஹந்தி
-------------------

பட்டி விக்கிரமாத்தித்தன்களிடம் போய்
இந்த வரம் வாங்கி வந்தேன்.
"கூடு விட்டு கூடு பாய்ந்து"
மெஹந்தி பிழியும்
இந்த கூம்புக்குள்
கண் கூம்பி தவம் இருந்தேன்.
இந்த "பியூட்டி பார்லருக்குள்"
அவள்
இன்று இதே நேரம் வருவாள்
என்று எனக்குத்தெரியும்.
அப்படித்தான் அவள் தோழியிடம்
பெசிக்கொண்டாள்.

அதோ சல்வார் கம்மீஸ்களின்
சரசரப்புகள் ஒலிக்கிறதே.
கண்கள் மூடி காத்திருந்தேன்.
கனவு விரித்து கூம்புக்குள்
சுருண்டு கிடந்தேன்.

இன்னும் சற்று நேரத்தில் அவள்
பொன் காந்தள் விரல்களில்
மின்னல் பூங்கொடிகளாய்
பின்னிக்கிட‌ப்பேன்...அவ‌ள்
உள்ள‌ங்கையில் என்
உள்ள‌ம் ப‌திப்பேன்.

செம்ப‌ஞ்சுக்குழ‌ம்பில் அவ‌ள்
நாண‌த்தை பூசிய‌போதெல்லாம்
அந்த ந‌றும்பூச்சில் நான்
பூக்க‌லாகாதா? என்ற‌
ஏக்க‌த்தையெல்லாம்
இப்போது போக்கிக்கொள்வேன்.

இந்த‌ பூ ஓவிய‌ம் கொண்டு
அவ‌ள் முக‌ம் மூடிக்கொள்ளும்
போதெல்லாம்
சூரிய‌னைக்க‌ரைத்து
ச‌ந்திர‌னில் ஊற்றிக்குடித்த‌து போல்
வெப்ப‌மும் த‌ட்ப‌மும்
க‌ல‌ந்து சுவைப்போம்.

ச‌ரி.இருங்க‌ள்.
மெஹ‌ந்தி
ஏழுவ‌ர்ண‌ அருவியாய்
இற‌ங்கி விட்ட‌து.

அடடா! ஐயோ!
அமில‌க்க‌ட‌லில் விழுந்த‌து போல்
உட‌லெல்லாம் எரிகிற‌தே.
ஆயிரம் ஆயிரம் வாட்ஸ்
மின்சாரம்
பாய்ந்தது போல் அல்லவா
இருக்கிறது.
கற்பு எனும் நெருப்பு
இது தானோ..
அய்யய்யோ
தாங்க முடியவில்லையே!!
என்ன‌ கூத்து இது?

மெஹ‌ந்தி ப‌ட‌ர்ந்த‌து
அவ‌ளுக்கு அல்ல‌.
அவ‌ள‌து தோழிக்கு!

அவள் வரவில்லை.
அவள் தோழி..
அதான்..அந்த‌
நெட்டக்கொக்கு
கழுத்தாள் தான்
வந்திருக்கிறாள்..
அய்யகோ என் செய்வேன்..

அட! சட்!
நிறுத்து!
ஏன் இந்த புலம்பல்?
இது கொலவெரி யுகம்.
21.. 22 ...23..ஆம் நூற்றாண்டுன்னு
போய்க்கினே இருக்கணும்.
இப்ப‌
என்னாண்ற?
சும்மா..ஜாலியாய்
டைம் பாஸ்ஸுக்கு
தோழி மேல் தான்
படர்ந்தால் என்ன?

வண்ண வண்ண பூங்கொடியாய்
அவள் கைகளில் இறங்கினேன்.
என் தாவு தீர்க்க‌
தோள் கொடுத்த‌
தோளி அவ‌ள்!

"அய்யோ! அய்யோ!
உட‌ம்பெல்லாம் எரிகிற‌தே!
யாராவ‌து காப்பாத்துங்க‌..
ஆயிர‌ம் ஆயிர‌ம் க‌ம்ப‌ளிப்பூச்சிக‌ளாய்
கையெல்லாம் ஒரே கொப்ப‌ள‌ம்..
சீக்கிர‌ம் காப்பாத்துங்க‌..."

இப்போ..
அந்த‌ தோழி தான்
அல‌றினாள்! அர‌ற்றினாள்!
ம‌ய‌ங்கிச்சாய்ந்தாள்.

02.
சாதிகள் வேணுமடி பாப்பா
------------------------------
"எல ஒரு சாமிய கும்பிட்டா
கும்பிட்ட மாரியா இருக்கும்?....இப்டி
பூட‌ம் தெரியாமெ சாமியாடிட்டே இருக்க‌ணும்."

"யோக்ய‌ங்க‌ண‌க்கா பேசாதலெ
பொற‌ந்தாக்ல‌ அந்த‌குறிய‌ கூட‌ பாக்காம‌
என‌த்தான் ச‌ன‌த்தான்னு குறி பாத்து
த‌ஸ்தாவேஜி போடுதாம்லா
அதப்பாருலெ"

"அதுக்கு நாம‌ என்னெழ‌வ்லே செய்ய‌து.
க‌வ‌ர்மெண்டே குத்ர‌ ப‌ச்ச‌டே இது.
எத்த‌ன‌ ப‌ய‌லுவ‌ அப்டி
எத்த‌ன‌ ப‌ய‌லுவ‌ இப்டி
எலே நாளக்கி ஓட்டு வேணும்லாலே
துட்டு எடுக்க‌ணும்னா ஓட்டு வேணும்லே
ஓட்டு வேணும்னா சாதி வேணும்லே."

"அவ்வொ வ‌ந்தாவ‌ இவ்வோ வ‌ந்தாவ‌
எல‌ எவ்வொ வ‌ந்தாலும்
சாதியும் வ‌ரும்லெ."

"சாதி இரண்டொழிய வேறில்லைன்னு
சொல்லியிருக்காவ்ளே..."

"அந்தாக்லெ பொடதிலெ ரெண்டு வச்சேண்ணா
எல உனக்கும் எனக்குமாலெ அது.
ஆங்க்...
அங்ஙன வச்சு ஒரு மீட்டிங்லெ
ஒருத்தன் சொன்னாம்லே அர்த்த‌ம்
ஒண்ணு வாங்க்ர‌ சாதி
ஒண்ணு குடுக்குர‌ சாதி.
அவ்வ‌யா சொன்ன‌த‌
அவ‌னுவ‌ளும் இப்டிதாம்ல‌ சொன்னாங்க‌.
ஆபீசுக‌ள்ள‌ போயி பாருன்னாங்க‌."

"அப்றம்".

"அப்ற‌ம் என்னால‌ அப்ற‌ம்.
அப்ற‌ம் வீட்டுக்கு வ‌ரும் போங்க்லென்டாங்க‌.."

"எல‌ மூதி மூதி.
இங்க‌ என்ன‌லெ ப‌ண்ணுதெ
அங்கெ க‌ள‌னி நாறிட்டு ருக்கு.
சாணிய‌ போட்டுட்டு
க‌ளினிய்ய‌ தூக்கிட்டுப்போல‌
கூறுகெட்ட‌ மூதி."

ஒண்ணு நாறுதுண்ணு
இன்னொரு நாத்த‌த்த‌
ப‌ரிமாத்த‌ம் ப‌ண்ணிக்கிருது தான்
ந‌ம்ம‌ தேச‌த்து ப‌ழ‌க்க‌ம்

சாதியும் சாமியும் அப்ப‌டித்தாம்லெ

த்ருனெலிக்கார‌ங்க‌ ரெண்டுபேரு
பேசிகிட்ட‌
ந‌ம்ம‌ அர‌சிய‌ சாச‌ன‌ம் இதான்.

03.
ஆழம்
------------

அவள் நகம் கடித்தால்
அவள் நகம் ஆகுவான்.

அவள் இமை கவிழ்த்தால்
அவள் விழி ஆகுவான்.

அவள் புன்னகைத்தால்
அவள் இதழ் ஆகுவான்.

அவள் பேசினால்
அவள் நா ஆகுவான்.

அவ‌ள் வேர்த்து நின்றால்
அவ‌ள் உட‌ல் ஆகுவான்.

அவ‌ள் பார்த்து நின்றால்
அவ‌ள் ஒளி ஆகுவான்.

அவ‌ள் பேசி நின்றால்
அவ‌ள் தமிழ் ஆகுவான்.

அவ‌ள் உண்ண‌ச் சென்றால்
அவ‌ள் உண‌வு ஆகுவான்.

அவ‌ள் மூச்சிழுத்தால்
அவ‌ள் உள் செல்லுவான்.

அவ‌ள் மூச்சு விட்டால்
அவ‌ள் மூச்சு ஆகுவான்

அவள் தூங்கச்சென்றால்
அவள் மெத்தை ஆகுவான்.

அவ‌ள் முணு முணுத்தால்
அவ‌ள் வீணை ஆகுவான்.

அவ‌ள் உள்ள‌ம் என்றால்
அவ‌ள் ஆழ‌ம் க‌ண்டானா?

இல்லை...இல்லை.
இல்ல‌வே இல்லை.

அவ‌ன் காத‌லித்தான்.
அவ‌ள் வெளியே நின்றாள்.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-03-09 00:00
Share with others