மெழுகுவர்த்தி (குறும்பாக்கள்)
--------------------------------
01.
மெய்யெழுத்து உருகி
உயிரெழுத்து எரியும்..ஒரு
புதுக்கவிதை.
02.
கரையை காட்டிவிட்டு
கரைந்து போய்விடும்..ஒரு
கலங்கரைவிளக்கம்.
03.
காதலும் மெழுவர்த்தியும்...அதன்
வெளிச்சத்தில் எழுதுவதற்குள்
கரைந்து போய்விடும்.
04.
ஊமை எரிமலை நீ
உன் காலடியில்
வெள்ளை "லாவா"
05.
ஒரு "சுடரேந்தி"ப்புலவர்
இருட்டில் உருகிப்பாடும்
"ஒளி வெண்பா".
06.
திரி நரம்பு முனையில்
மெழுகு வீணை உருகி..ஒரு
ராகம் எரிகின்றது.
07.
நீண்ட தவத்தில்
வெள்ளைச் சவம்
"கரண்ட் கட்டில்" உயிர் வந்தது.
08.
இருட்டின் கனத்த சிலுவை
வெளிச்சத்தின் வெள்ளை ரத்தம்..
மேஜையில் ஒரு கல்வாரி.
09.
ஓவியம் எரிந்து
ஓவியம் உருகும்.
வெள்ளைத்தூரிகை இது.
10.
வெள்ளை இதயம் வழிந்து ஓடி
இரவுகள் எரிந்து "வெளிச்சக் காதலிக்கு"
உருகிய தாஜ்மகால் இது.
-ருத்ரா
(கல்லைடைக்குறிச்சி இ.பரமசிவன்)
அன்புள்ள ருத்ரா அவர்களுக்கு,
காவிய நாயகி
கண்ணகி தன்
கணவன் மீது
வைத்த காதல்
கோவலன் தன்
காதலி மாதவி மீது
வைத்த காதல்
எல்லாமே மெழுகுவர்த்தி
காதல்தான்!
தன்னை இழந்து
தன்னை நேசித்தவர்களுக்காக
ஒளிதரும் காதல்
அக்காதல் காவியத்தை
எழுதி வெளிச்சத்தில்
காட்டுவதற்க்குள்
கரைந்துபோய் விட்டது
இளங்கோவடிகளின் இதயம்
வாசித்தவர்களின் இதயமும்கூட
ஈழத்தமிழன்
தன் மண் மீது
வைத்த காதலும்
மெழுகுவர்த்தி காதல்தான்
தன் தேசத்தை
வெளிச்சமாக்கி
வரலாற்றை எழுதுவதற்க்குள்
கரைந்துப்போய்க் கொண்டிருக்கிறது
அவனின் தாய்மன்.
உங்கள் குரும்பா வரிகள்
“காதலும் மெழுகுவர்த்தியும்…அதன்
வெளிச்சத்தில் எழுதுவதற்க்குள்
கரைந்து போய்விடும்” என்று
ஒலிப்பது மிகவும்
சக்தியான ஒலிதான்
உங்கள் குரும்பாவை
உடைத்து பொருண்மையை
பார்த்த போது என்
இதயம் கரைந்துபோய்விட்டது
இது ‘பாவை’ மீது
நான் கெண்ட காதல்.
காதலுடன்
கு.சிதம்பரம்,சீனா.