- றஞ்சினி
அழகியல்..
---------------
ரசனையாலான
உனது அறையில்
உயிரான உன்
ஒவியங்களுடன்
நானும் நீயும்
நீண்ட நாட்கள்
பழகிய உணர்வுடன்
உன் இர்ப்பில்
அசைவற்ற என்னை
ஒவியமாக்கி
உயிராக்கினாய்
உன்னை நான்
கவியாக்கினேன்
கனவில்
கலையும் இலக்கியமும்
கலந்து மகிழ்ந்தோம்
உன்னால் உனது
ஓவியம் அழகா
ஓவியனானதால
நீ அழகா
பிரிக்கமுடியவில்லை
இரண்டையுமே.
-றஞ்சினி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-16 00:00
அழகியல் என்கிற தலைப்பிலிருந்து இக்கவிதையை வாசித்தால் கவிதைக்குள் இயங்கும் கவி-உருக்கள் (poetic beings) ஓவியங்களில் எழுதப்பட்டு உயிர்பெற்று ஓவியங்காளவே வாழ்பவர்கள். இது உடல்கள் பற்றியதல்ல உருக்கள் பற்றியதும் அவற்றினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியங்கள் பற்றியதும். ஒரு உடலுக்குள் பல உருக்கள் சாத்தியம் இங்கு இயங்கும் இரண்டு உருக்கள் ஒரு உரு ஓவியனாகவும் பிறதொரு உரு ஓவியமாகவும் உள்ளது. ஓவியமான உரு மற்றொரு இருப்பினால் அசைவற்றதாக்கப்படுகிறது. அதாவது ஓவியமாக்கப்படுகிறது. இதன் மறுதலையாக மற்றொரு உரு அசைவு கொண்டதாக உள்ளது. அதாவது இந்நிகழ்வில் ஓவியன்-உரு கவிஞனனாக மாறுகிறது. ஓவியம் கவிதையாக மாறுகிறது கவிஉருவால்.
முதல் பாதிகவிதை ஓவியமாகவும் பிறிதுபாதிக்கவிதை கவிதையாகவும் உருமாறுகிறது. ஆக ஒற்றை உடலுக்குள் நிகழும் இந்த இரு உருக்களுக்கு இடையிலான உரையாடலாக உள்ளது. இங்கு கலவி என்பது உருக்களின் கலையும் இலக்கியமுமாக கலந்து மகிழ்வதுதான். ஆக. கவிதையாக இயக்கம் கொள்ளும் இவ்வார்த்தைகள் எழுப்பும் கேள்வி ரசனையிலான அறையில் துவங்கி கலை இலக்கிய கலவியின் வழியாக அழகு என்பது உடலும் உருவும் பிரிக்க இயலாத ஒருமையில் முடிகிறது. வேறுவிதமாகக் கூறினால் அழகு என்பது என்ன? உள்-உருவம் (subtle body) உடலும் (physical body) பிரிக்க இயலாத ஒருமையடைவதில்தான் என்பதாக முடிகின்றன இவ்வார்த்தைகள். உடல்களையும் மனிதர்களையும் எழுதிச் சலித்த கவிமனம் இங்கு கலையையும் ஒவியத்தையும் கவிதையையும் அழகியலாக பேச வைப்பதற்கான சற்றே வித்தியாசமான இந்த முயற்சி பாராட்டுக்குரியதுதான்.
றஞ்சனி பொதுவாக பெண் உடல்சார்-உணர்வுகளையும் பெண்மொழிக்கான கவிதைகளும் எழுதும் ஒரு குறிப்பிடத்தகுந்த கவிஞர் என்பதை இதில் வேறுவிதமாக வெளிப்படுத்தியுள்ளார்.