நேசத்தாவரம்

ஒரு வண்ணத்துப்பூச்சியாய் அமர்ந்து
மலைப்பாம்பாய் இறுக்கும் நீ யார்?

உரையாடல்களில் சிந்துகிற சொற்களை
விதைநெல்லாய் சேகரித்து
மனக்குதிரில் பத்திரப்படுத்தும் நீ யார்?

வார்த்தை வலைகளுக்குள் சிக்குமாறு
வசப்படுத்தி வைத்திருக்கும்
மாயச்சொல்லுக்கு உரிமையான நீ யார்?

ஆறு காலங்களிலும்
நினைவுகளை ஆக்ரமிப்பு செய்து
ஆனந்த ஆதிக்கம் செய்கிற நீ யார்?

பழைய மரபுகளை புறந்தள்ளி
புதிய இலக்கணத்தில்
வழிநடத்தும் சுழற்காற்றே நீ யார்?

பூவாய் மலர்ந்து கொடியாய் படர்ந்த
நேசத்தாவரத்தின் நிற மறிய
உன்னைக்குவித்துக் கண்கள் மூட
உன்னுள் வருவேன்
நான்

-- அன்பாதவன்
jpashivammumbai@rediff.com

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-11-16 00:00
Share with others