மழைக்காலம்

1
வருஷந்தோறும் பொழிகிறது மழை
இடிந்துவிழுகிற கட்டடங்கள்
சிதைந்த உடல்கள் பார்த்து
'உச்' கொட்டி பெருமூச்சுவிட்டு
கடவுளை சபித்து நகர்கிறது வேகமாய்
மாநகர வாழ்வு

2
மழை பொழிந்து கொண்டிருக்கிறது
ரயில் கண்ணாடியில் படிந்த
நீர்ப் படிமத்தில் எழுதுகிறேன் உன் பெயரை
அனிச்சையாய்
"சார் நம்ம ஊரா" எனத் தொடங்கி
தாய்மொழியில் விசாரிப்புகள்
கிடைத்ததொரு புதிய நட்பு உன்னால்

3
ரயிலை நிறுத்தி பார்க்க வைத்து
மழையில் மூழ்கி குளிக்கின்றன
தண்டவாளங்கள்

4
மழை இரைச்சலை மீறி
புழுங்கி கசகசக்கும் அடைத்த ரயில் பெட்டியில்
இதமாய் ஒலிக்கின்றன
உடைந்த பாடல் வரிகள்

5
மழை யைப் பற்றி எழுத
பொழிய வேண்டும்
புதுமழை

-- அன்பாதவன்
jpashivammumbai@rediff.com

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-11-16 00:00
Share with others