அன்பாதவன் கவிதைகள்
----------------------------

இருள்வெளி
--------------
அதல பாதாளத்தின் அடி ஆழத்தில்
கண்ணுக்குத் தெரியா மையிருட்டில்
ஒளிர்கிறது உன் விழிகள்
வெளிச்சத்தில் மிதக்கிற
என் கைகள் எட்டுமா
அனுப்பியக் கயிற்றின் போதாமையில்
பெருகும் இடைவெளி
கலக்கிறேன் உன்னோடு
இருவரும் சமமாக இருள்வெளியில்.

-----------------------------------

பறவை
--------

வீசும் காற்றின் எதிர்திசையில்
விரிந்த சிறகுகளசைத்தொரு
பறவை

தொடர்ந்து பயணம் எதிர்ப்புகளூடே

அயர்ச்சியும் தளர்ச்சியும்
மேலமர்ந்து கனமாக்கும் சிறகுகளை
தொடர் சுமைகள் சலிப்பூட்டும்

'வானம் வசப்படும்'
உள்நுழைந்து வெளி கலக்கும்
மூச்சுக் காற்று சொல்ல
காற்றின் எதிர்திசையிலொரு பறவை.

-------------------------------------

நீர்த்திடல்
------------
கடலா.. நீ நதியா

கால் நனைத்து
அலையில் நிற்பதா
தலை நனைத்து
மூழ்கி குளிப்பதா

இடைவெளிகளின் மவுனம்
இம்சையானது
சொல்
கடலா நீ நதியா

நதியென்றால் பரிசலாக
கடலென்றால் பாய்மரமாக
இயலுமெதுவும் என்னால்

பூடகமான நீர்த்திடலே
எதுவாயினும்
முகத்துவாரத்தை கண்டுபிடி
முக்கியமாய்.

------------------------------------

வண்ணங்கள்
---------------

வண்ணங்களுக்காக காத்திருந்து
நிறமிழந்து போயின
கடந்து போன காலங்கள்

வண்ணங்களின் பின்னால் ஓடுகிறது
நிறமற்ற வெளி நோக்கி
எதிர்கால நம்பிக்கையோடு வாழ்க்கை

சுற்றி ஒளிரும் வண்ணங்கள்
தன்னைத் தேடி வருமெனக்
காத்திருக்கின்றன
நிகழ்காலப் பொழுதுகள்

அன்பாதவன்.
jpashivammumbai@rediffmail.com

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-09-18 00:00
Share with others