புள்ளடி.. பல முயற்சித்து..முதன் முதலாய்
01.
புள்ளடி
இட்டுவிட்டோம் என்பதற்காக
அங்கீகரித்ததாய்
அர்த்தம் இல்லை..
நீலம் அல்லது பச்சை..
வலிகள் ஒன்றுதான்...
உனகுள்
நாங்கள்
உன்னிடம்
பிச்சைப்பாத்திரம்
ஏந்தி வந்திருப்பதாய்..
தவறு..
புள்ளடி இடும்
விரல்களே
விசைகள் அழுத்தும் நாட்களாய்
அந் நாளில் இருந்தது..
மீண்டும்
உருவாகாமல்
பார்த்துக்கொள்..
தாங்கமாட்டீர்கள்..
ரணங்கள்
ஒவ்வொன்றாய் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன..
02.
பல முயற்சித்து
இன்று ஒருவாறாக
என் தற்கொலை நடந்தேறியது!
அறையைப் பூட்டி யாருக்கும்
அசுமாத்தம் தெரியாமல்
என்னை நானே
கொலை செய்தேன்..
கொலை
என்றாலே
நடுங்கும்
என்னிடம்
இப்படி
ஒரு ஆசை..
பல தடவை
தவறிப்போயினும்
சாத்தியமாக்கினேன்..
நாலு
நாட்கள் கழித்தே
காவல்படை
வந்து
கைது செய்தது..
குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்யமுன்னரே
நையப்புடைத்தனர்..
ஏன் செத்துதொலைத்தாய் என்று..
கறுப்பு
மீசைக்கார அதிகாரி முறுக்கி
நின்றான்..
அங்காங்கே
சாராய நெடி..
பெண்களின் முனகல்...
இவனை
எப்படி மீண்டும்
கொல்லலாம்..
ஆலோசித்தனர்..
மனித உரிமை மீறல்
சட்டத்தின் கீழும்
வழக்கைப் பதிவு செய்தனர்..
எனி என்ன
செய்வது?
எனித் தற்கொலை செய்யமாட்டேன்
என்று கதறலாமோ?
அவன் -
ஓங்கி அறைந்த போது தவறி வீழ்ந்தேன்...
கனவின் எரிச்சல் தீரவில்லை..
03.
முதன் முதலாய்
தன் வறுமை மறந்து
அம்மா
மிட்டாய் வாங்கித் தந்தது
இன்றே என ஞாபகம்.
அக்கா விமான சாகசம்
பார்க்க கூட்டிசென்றதும் ஞாபகம்.
வளர..வளர
சித்தப்பா
லெனின் பற்றியும்,
மார்க்ஸ் பற்றியும்
சொல்ல ஆரம்பித்ததும் ஞாபகம்.
தலைமையாசிரியர் முன்னால்
தலைகுனிந்து நின்ற போது கேட்டாரே
களிசானுக்குள்
குண்டா வைத்திருக்கிறாய் என..
அப்போதும் சொல்ல வறுமையே விடவில்லை...
கல்லூரிக் கீதம் முடிந்ததும்
மேடையில் செருப்பணிந்து
வரவில்லை என முழங்காலில்
நிற்கவைத்ததும் ஞாபகம்.
சித்தப்பா
அறிமுகம் செய்த நண்பனும்
கைக்குண்டு பற்றியும் சொன்னான்
கூடவே,
சுதந்திரம் பற்றியும் சொல்லிப்போனான்.
இடையில்
சந்தேகத்தின் பேரில்
கைது செய்யப்பட்ட அக்காவும்
திரும்பி வரவேயில்லை...
சித்தப்பா
தலை மறைவு வாழ்க்கையையே
கடைசிவரை வாழ்ந்தார்.
அப்பா
சுதந்திரன் வாசகராகவும்,
அரசியல்
ரசிகராகவும் இருந்தே இறந்து போனார்..
தேவாலயத்துள் விழுந்த ஷெல்
மகன் மீதும் விழுந்ததை
இன்றுவரை மறக்கமுடியவில்லை...
வடக்கெனவும்,கிழக்கெனவும்,தெற்கெனவும்
இனைத்தும்,பிரித்தும்
பேசியவர்கள் இன்றுவரை விடைதரவே இல்லை...
எல்லையில்
நின்ற தோழனை
தலைப்பாவுடனும்,தாடியுடனும்
வந்தவனே கொன்றான்...
இன்றும்
மேடையேறி
அரசியல் நடத்துவோரும்,யாசகம் செய்வோரும்
அதிகரித்தனரே அன்றி
எது சுதந்திரம் என்று
உண்மையை உரைப்பவர்கள்
யாரும் இல்லை..
04.
அப்பாவின்
மரணம்
என்னை உலுப்பிவிட்டிருந்தது.
யார் யாரோ வந்தார்கள்.
போனார்கள்.
கூட்டமாய்
பெண்கள் அழுதனர்...
ஆண்கள் அப்பா
பற்றிய கதைகளை
தங்களுக்குள்
பேசிக்கொண்டனர்.
தலைவிரி கோலமாய்
அம்மா
அழுதுகொண்டிருப்பது
துல்லியமாய் தெரிந்தது.
அப்பாவின் மரணம்
நிகழ்ந்திருக்கக்கூடாது.
ஆனா
சொல்லித்தந்த விரல்கள்...
அடிக்காடி
தலையில்
வைத்து
நல்லாய் இரு
என்கிற கைகள்..
கட்டியணைத்த படி
தூங்குகையில்
நெஞ்சின் மயிர்க்காட்டை
துளாவியபடி
தூங்கிப்போகிற சுகம்...
கதைகள் பல
சொல்லி
நல்லவளாய் இரு
என்று சொல்லி
மகிழும் அவரின்
புன்னகைத்த முகம்...
கணக்கில்
எப்போது
கேள்வி கேட்டாலும்
அமைதியாய் சொல்லித்தரும்
அப்பாவின்
மரணம்
நிகழ்ந்திருக்கக்கூடாது.
ருதுவான போது
கைகளில்
அள்ளி
என் மகள்
என்று சந்தோசித்த பொழுதுகள்...
நிறையவே பிடிக்கும்...
அவரின் நெருக்கம்
எனி...
யாரோ இருவரின்
சண்டையில்
குறுக்கே வந்த
அப்பாவின்
கழுத்தை
பதம்
பார்த்த அந்த
யாரோவின் கத்தி
என் அப்பாவை
மரணமாக்கியது..
என் அப்பா
எனக்கு வேண்டும்..
யாரும்
அண்ணனாகலாம்..
யாரும்
யாருமாகலாம்.
அப்பா..
என் அப்பா..