வாழ்க உன் அரசியல்..முடி வெட்டிய ஒரு நாளில்.. மன்னித்துவிடு

01.
வாழ்க உன் அரசியல்
----------------------

இருக்கும் வரை
ஏமாற்றிக்கொள்
அழகு-
அரசியல்வாதியாய் இருப்பது..
கிடைத்தவரை
வசதியாக
உட்கார்ந்து கொள்
கதிரை கவனம்...
உட்கார்ந்திருக்கையிலேயே
களவாடப்படும்
அபாயமும் இருக்கிறது..
மக்களைப்
பற்றிய கவலை
எதற்கு?
கட்சி சொன்னதைச் செய்..
விரும்பினால்
விபச்சாரமும் செய்..
அடுத்த தேர்தல்வரை
யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள்.
மக்கள் பற்றிய
கவலை
இல்லாதபட்சத்தில்
இனம் பற்றிய கவலை எதற்கு?
சமயங்களில்
உன் இனம் என்ன
என்பதையே மறந்துவிடு..
எப்போதும் பெட்டி
நிரம்பியே இருக்கட்டும்.
கட்சித்தலைவர்
வனவாசம் போகச் சொன்னாலும்
தேவைப்படலாம்.
தலைவர் பதவிக்கும்
தேவைப்படலாம்.
உன் பாட்டில் முன்னேறு..
உலகம்
அரசியல் பற்றி
இப்படித்தான்
சொல்லி வைத்திருக்கிறது..
அடுத்த தேர்தல் வரை
உனது ராஜாங்கம்..
கிரீடம் பத்திரம்..
சாமரம்
வீசுபவர்களை
முடிந்தவரை அதிகரித்துக் கொள்.
எப்பவும்
கொன்று வா என்று சொல்..
பிறகு சொல்
கொண்டு வா என்று தானே சொன்னேன் என்று...
கட்சி எவ்வழி
நீயும் அவ்வழி
வாழ்க உன் அரசியல்..

02.
முடி வெட்டிய ஒரு நாளில்..
-----------------------------------

முடியைச் சரிசெய்து
இப்போதுதான்
வந்தேன்..
தொட்டுக்கொள்ள
எதுவும் இல்லை
என்று
மகள் சிணுங்கினாள்.
முத்தமிடும் பொழுதுகளில்
கோட்திக் கொள்ளும்
சுவாரஸ்யம்
எனி
இல்லை
என்று மனைவி
காதில் கிசுகிசுத்தாள்.
முன்பு
ஊரில் அப்பாவும்
முடி வெட்டிக்கொள்
என்று
நச்சரித்தார்.
முடியுடன்
அழகாய் தெரிகிறீர்கள்
என்ற
அவளின்
கனவுகளும் கண்களில்
தெரிந்தன.
அம்மாவும்
வசதியாக
கோபப்படும் போது
முடியைப் பிடித்திழுத்து
ஒங்கி அறைவது
இப்போதும்
வலிக்கிறது.
இப்படிப் பரட்டையாய் வராதே
என்
கல்லூரி
அதிபரும் முழங்காலில்
நிற்கும் தண்டனையை
அந்
நாளில்
தந்ததை
முழங்காலும் மறக்காது.
புகைவண்டிப் பயணதில்
சன்னல்கரையோரம்
உட்கார்ந்தபடி
வெளியே தோழிகளுடன்
நடக்கும்
அவள்களை
பார்த்தபடி
முடியை சரிசெய்யும்
குதூகலம்
இப்போதும் இனிக்கிறது...
நண்பனுடன் சண்டையிடுகையிலும்,
அக்காளின்
கோபத்திற்காளாகும் போதும்
என் முடி தப்புவதில்லை...
இப்போது முடி
குறைந்துவிட்டது
பற்றி
எனக்கில்லாத
கவலை இவர்களுக்கெதற்கு?
முடி இல்லாமல்
வாழ்ந்து பார்
கவரிமான் தோற்றுப்போகும்...

03.
மன்னித்துவிடு
---------------------

உனக்கு
வாழ்த்துச் சொல்லமுடியாதபடி
முடமாய் நான்..
77இன் பின்
தெளிக்கப்பட்ட அரசியல்
சாக்கடை நாற்றம்
என் நாசியில்
ஒட்டிக் கொண்டிருக்கிறது.
அரசியல் கதிரைகள்
உன்னால் கழுவப்படுமானால்
சந்தோசப்படுவேன்.
ஆனாலும்,
மக்களின்
மரணதிற்கு
உன் அரசியலும் காரணம் தானே?
இறந்து வீழ்ந்த
என் குழந்தையின் முண்டத்தை
தூக்கிய
கைகளின் குருதி ஈரம் காய்வதற்குள்
விரல்களைக் கேட்கிறாய்..
புள்ளியிட-
விரல்கள் இல்லையே!!

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-11-26 00:00
Share with others