ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி.. வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி.. செங்குருவி
01.
ஒரு பூக்காலத்தில் நான் மிதக்கும் தோணி
---------------------------------------------------------
மலைக் காடொன்றின் மத்தியில்
தெளிந்த ஒற்றையடிப் பாதையின் முடிவில்
ஒரு தனித்த குடில் வீடு உனது ஓவியமாகியிருந்தது
விகாரைக் கூரையை அதற்கு ஏன் தீர்மானித்தாயென்ற கேள்விக்கு
புறாக்களும் புனித தேவதைகளும் வந்து செல்வரெனச் சொல்லி
நீ காதலைச் சொன்ன தருணம்
மஞ்சள் அந்தி மாலை நேரத்தைப் போல எவ்வளவு அழகாக இருந்தது
சின்ன மேசையருகே முழந்தாளிட்டு
நாமருந்திய தேன்பானம் நீ தயாரித்தது
சூடுமற்ற குளிருமற்ற இதமான காலநிலையில்
நாம் நடந்துவரச் சென்ற அன்று நீ
மழை வருமா எனக் கேட்ட பொழுது சிரித்தேன்
பெருங்குளத்துக்கு மத்தியிலான காட்டைச் சுற்றிவர
நிலத்தில் பதித்திருந்த பச்சை விளக்குகள்
முன்னந்தியில் ஒளிர ஆரம்பிக்கையில் மழை
சட்டெனப் பெய்து வலுத்தது கண்டு கை கோர்த்துக் கொண்டோம்
அப்பொழுதெல்லாம் எவ் வடிவ மேகம் போல நீ மிதந்தாய்
என் புன்னகை ஒரு மந்திரக் கோலென்றாய்
எந்த அதிர்வுகளுக்கும் ஆட்படாத மனம்
அதிர்ஷ்டம் வாய்ந்ததெனச் சொல்லி
உனது தூரிகை தொடர்ந்தும் சித்திரங்களைப் பரிசளித்தது
என் நேசம் உன் புல்லாங்குழலின் மூச்சென்றானது
நீ இசைத்து வந்த வாத்தியக் கருவியை
அன்றோடு எந்த தேவதை நிறுத்தியது
உன்னிலிருந்தெழுந்த இசையை
எந்த வெளிக்குள் ஒளிந்த பறவை விழுங்கிச் செரித்தது
மழைக் காலங்களில் நீர் மிதந்து வந்து
விவசாயப் பயிர்களை நாசப்படுத்தி
பெருக்கெடுத்துப் பாய்ந்தோடும் நதியொன்றிருந்த
எனது கிராமத்தின் கதையை
இக் கணத்தில் உனக்குச் சொல்ல வேண்டும்
ஊரின் முதுகெலும்பாய்ப் படுத்திருந்த மலையின் ஒரு புறம்
சமுத்திரமும் இருந்தது
வாழ்நிலங்களைக் காக்கவென மூதாதையர்
அம் மலையைக் குடைந்து இரண்டாக்கி
ஆற்றின் தண்ணீர்ப் பாதையை
கடலுக்குத் திருப்பிய கதையையும்
கூடைகூடையாய் தொலைவுக்கு கால் தடுக்கத் தடுக்க
பெண்கள் கல் சுமந்து சென்று கொட்டிய கதையையும்
இரவு வேளைகளில் விழி கசியச் சொன்ன
பாட்டி வழி வந்தவள் நான்
அந்த மன உறுதியும் நேசக் கசிவும் ஒன்றாயமைந்த
நான் மிதக்கும் தோணியை ஒரு பூக்காலத்தில்
ஏழு கடல் தாண்டித் தள்ளி வந்திருக்கிறாய்
உனது எல்லா ஓசைகளையும் மீறி
'உஷ்ணப் பிராந்தியத்தில் வளர்ந்த செடியை
குளிர் மிகுந்த பனி மலையில் நட்டால்
ஏது நடக்குமென நீ அறியாயா' எனப் பாடும் இராப் பாடகனின் குரல்
தினந்தோறும் இடைவிடாது எதிரொலிக்கிறது
02.
வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி
------------------------------------------------------
மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது
இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது
வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு
மலட்டு வேப்ப மரத்திடம்
நீவியழித்திடவியலா
நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும்
நீயொரு மண்பொம்மை
உனது கண் பூச்சி
செவி நத்தை
கொல்லை வேலியொட்டிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும்
உன்னிடமும் வேம்பிடமும்
இவையிரண்டும் என்ன உரையாடுகின்றன
திசைகளின் காற்று
விருட்சத்துக்குள் சுழல்கிறது
தன் மூதாதையர் நட்ட மரத்தில் இதுவரை
ஆசைக்கேனுமொரு பூப் பூக்கவில்லையென
தொலைவிலிருந்து வந்த புதுப் பேத்தியிடம்
கதை பகர்கிறாள் மூதாட்டி
வேப்பமரத்தடி வீடெனத் தன் வீட்டிற்கேவோர்
அடையாளம் தந்திருக்கும் மரத்தை
வெட்டியகற்ற மறுக்கிறாள் கிழவியென
மருமகளொருத்தி முணுமுணுக்குமோசையை
சமையலறை ஜன்னல் காற்று
உன்னிடம் சேர்க்கிறது
மனித ஓசைகள் கேட்டிடக் கூடாதென
காதுகளை மீண்டும்
நத்தைகளால் அடைத்துக் கொள்கிறாய் - பிறகும்
கண்களை மூடும் பூச்சிகள் தாண்டி
வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்கிறாய்
03.
செங்குருவி
-----------------
மான்கள் துள்ளும் அவ் வனத்தில்
செங்குருவிக்கென இருந்ததோர் மரம்
தனித்த மீன்கொத்தியொன்று அமரும் கிளைக்கு
நேரெதிரே இருக்கும் பெருந்தடாகம்
செங்குருவிக்குப் பிடித்தமானது
அல்லிப்பூக்களுக்குச் சிறகு முளைத்து
பறந்து திளைக்கும் கனவுகளையெல்லாம்
சொட்டு நீருஞ்சி வரும் கணங்களில்
குளத்தில் விட்டு வரும் செங்குருவி
கிளையில் அமர்ந்திருக்கும்
தன் ஒற்றைக் கண்ணால் பார்க்கும் உதிர்ந்த மயிலிறகு
சொன்ன கதைகளையெல்லாம்
கேட்டுக் கேட்டுச் சலித்திருக்கும் செங்குருவி
வானவில் விம்பம் காட்டும்
தெளிந்த தடாகத்தைத் தன் பச்சை விழிகளால்
அருந்தித் திளைத்திருக்கும்
அச் செங்குருவிக்கின்று
எந்தத் தும்பி இரையோ
இல்லை எக் கிளைக் கனியோ
நடுநிசியொன்றில் அகாலமாய்
செங்குருவியின் பாடலொலிக்கக் கேட்பின்
அதன் ப்ரியத்துக்குரிய மரத்திலேறிய சர்ப்பம் குறித்த
செய்தியை அறிந்துகொள்ளும்
அல்லிப் பூக்களும்
குருவிச் சிறகு தொட்டுத் தனித்துப் போன
மேகங்களும்
பின்னர் துயரத்தில் கதறும்