ஈரக் கனாக்கள்.. சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்
01.
ஈரக் கனாக்கள்
-----------------------
ஈரம் கசியும் புல்வெளியெங்கிலும்
நீர்ப்பாம்புகளசையும்
தூறல் மழையிரவில் நிலவு
ஒரு பாடலைத் தேடும்
வௌவால்களின் மெல்லிய கீச்சிடலில்
மூங்கில்கள் இசையமைக்கும்
அப் பாடலின் வரிகளை
முகில்கள் மொழிபெயர்க்கக் கூடும்
ஆல விருட்சத்தின்
பரந்த கிளைக் கூடுகளுக்குள்
எந்தப் பட்சிகளின் உறக்கமோ
கூரையின் விரிசல்கள் வழியே
ஒழுகி வழிகின்றன
கனாக்கள்
நீர்ப்பாம்புகள் வௌவால்கள்
இன்னபிறவற்றை
வீட்டுக்குள் எடுத்துவரும் கனாக்கள்
தூறல் மழையாகிச் சிதறுகின்றன
ஆவியாகி
பறவைகளோடு சகலமும் மௌனித்த இரவில்
வெளியெங்கும்
02.
சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்
-----------------------------------------
பாகங்களாக உடைந்திருக்கிறது
அவ் வனத்தின் பட்டுப்போன மரமொன்றினூடு
தென்படும் முழு நிலவு
விருட்சங்களால் ஈரலிப்போடு உறிஞ்சப்படுகின்றன
வனத்தின் எல்லை மர வேர்களை
தழுவும் சமுத்திரத்தின் அக் கணத்து அலையில்
இருளை ஊடறுத்துச் சிதறும் ஒளிக் கிரணங்கள்
காற்று அணைக்கப் பாடுபடும் அந்த ஓடத்து விளக்கினை
ஏற்றியவன் கரங்களிலிருந்து விசிறப்படும்
வலையினில் சிக்கிக் கொள்கிறது
தண்ணீரில் முளைத்த பௌர்ணமி
வேட்டைக்காரனுக்குத் தப்பிய தேன்கூடொன்று
ஒளிந்திருக்கும் மலைக்குன்று இதுவல்லவோ
எந்தப் பாதச் சுவடுகளும் தொட்டிராச் சருகுக் குவியல்
சலசலத்து எழுப்பும் இசை
தேனீக்களுக்குத் தாலாட்டோ
எத்தனையோ நிலவுகளை ரசித்த புத்தர்,
சிலையாகித் தனித்திருக்கும் வனத்தின் விகாரைக்கு
தூய மலர்களோடு அணிவகுக்கும்
வெண்ணிற ஆடை பக்தர்களுக்கு
வழிகாட்டும் நிலவின் விம்பம்
அவர்கள்தம் நகங்களில் மின்னுகிறது
நீரின் மேல் மிதந்த நிலவு
அசைந்து அசைந்து மூழ்கும் காலை
தீக்குழம்பாய் உருகும் ஆகாயத்தில்
தொலைதூரச் செல்லும் பறவைகள்
தனித்த புத்தர் சிலையையும் விருட்சமெனக் கொண்டு
தரித்துச் செல்லும் அக் கணம் மட்டுமேதான்
சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்